வணக்கம் வலை நண்பர்களே,
மதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் என்ற தலைப்பில் மதுரை சம்பந்தமான செய்திகள் சில தொகுப்பாக எழுதியுள்ளேன். வாசித்து உங்கள் கருத்துகளை பகிருங்கள்.
காற்றில் பறக்கும் தலைக்கவசம்:
இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிய வேண்டும் என்கிற சட்டம் இப்போது அமலில் இருக்கான்னு தெரியல. அப்படியே அமலில் இருந்தாலும் யாரும் தலைகவசம் அணிவதே இல்லை. அவர்களை காவல்துறையும் கண்டுகொள்வது கிடையாது. மதுரையில் கடந்த சில மாதங்களாக எந்த இடத்தில பார்த்தாலும் காவல்துறை இருசக்கர வாகனங்களை பிடித்து ஆவணங்களை சோதனை செய்து, இல்லாதவர்களிடம் அபராதம் வசூலிக்கிறார்கள். ஆனால், தலைக்கவசம் அணியாதவர்களை ஒன்றுமே செய்வது இல்லை. அவர்களை விட்டுவிடுகிறார்கள்.
கடந்த மாதம் மதுரையில் இருசக்கர வாகன விபத்துகள் கொஞ்சம் அதிகம் தான். உயிரிழப்பும் அதிகம். இவை பெரும்பாலும் குடி போதையாலும், தலைக்கவசம் இல்லாததாலுமே உயிரிழப்பு ஏற்பட்ட விபத்துக்கள். எனவே காவல்துறை முதலில் தலைகவசம் அணியாதவர்களை பிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைகை:
மதுரை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மீனாட்சியம்மன் கோவில், அதற்கடுத்து நினைவுக்கு வருவது வைகை ஆறு. இப்போதெல்லாம் ஆற்றில் கழிவு நீரைத் தவிர தண்ணீர் ஓடுவதென்பது அபூர்வமாகி விட்டது. ஏப்ரல் மாதம் மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒட்டி கள்ளழகர் வைகையில் இறங்கும் நாளில் மட்டும் எப்பாடுபட்டாவது வைகை அனையிலிருக்கும் சொற்ப தண்ணீரை அரசானை மூலம் வர வைத்து விடுவார்கள். அன்று மட்டும் ஆற்றின் அகலத்திற்கு தண்ணீர் ஓடும். மாமதுரை எனும் மதுரை பண்பாட்டை விளக்கும் நிகழ்ச்சியில் வைகையைப் போற்றுவோம் என வைகைக்காக சுத்தம் செய்து சீர் படுத்தி ஒரு நாள் விழாவே கொண்டாடினார்கள். ஆனால் இன்றோ வைகை எப்படியுள்ளது என படத்தில் பாருங்கள்.
மீனாட்சியம்மன் கோவில் அதிசயம்:
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஓர் அதிசயம்...... யாரேனும் பார்த்து உள்ளீர்களா????? வேப்பமரத்தில் அரச மரம் ஒட்டி வளர்ந்து இருக்கும்....
அரச மரத்தின் வேர், வேப்ப மரத்தில் மையப்பகுதியில் இருந்து ஒட்டி வளர்ந்து இருக்கும்.... (ஒரு படத்தில் வட்டமிட்டு காட்டியுள்ளேன்)
அரச மரத்தின் வேர், வேப்ப மரத்தில் மையப்பகுதியில் இருந்து ஒட்டி வளர்ந்து இருக்கும்.... (ஒரு படத்தில் வட்டமிட்டு காட்டியுள்ளேன்)
கோவிலின் வெளிப்புற நடைபாதையில் மேற்கு கோபுரம் உள்ள பகுதியில் வலப்பக்கமாக தென் பக்கம் நோக்கி வருகையில் தென் கோபுரம் நோக்கி திரும்புகிற இடத்தில் இந்த இரட்டை மரம் உள்ளது.....
செல்லூர் பாலம்:
மதுரையின் சாலை மேம்பாலங்களில் மிக முக்கியமானது செல்லூர் மேம்பாலம் ஆகும். இந்த பாலம் வருவதற்கு முன் திண்டுக்கல் மார்க்கமாக வருகிற ரயில்களால் செல்லூர் ரயில்வே கிராஸிங் பெரும்பாலும் மூடியே இருக்கும். இதனால் அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் முதல் கோரிப்பாளையம் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் கிமி தூரங்களாக நிற்க வேண்டி இருக்கும். செல்லூர் மயானத்திற்கு செல்லும் இறந்தவர்களின் உடலும் ரயில் கேட் திறக்கும்வரை காத்திருக்கும் அவலமும் இருந்தது.
(படங்கள்: செல்லூர் பாலத்தில் இருந்து வைகையை கடந்து செல்லும் இருப்பாதை பாலங்கள்)
இதனால் பாலம் கட்ட வேண்டும் என முடிவெடுத்து பல ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக கட்டி முடிக்கப்பட்டு பயனுக்கு வந்து சுமார் நாலைந்து வருடங்கள் ஆகிறது. இப்போது உயிரற்ற உடல்களும், அவசர ஊர்திகளும் தடையின்றி செல்ல முடிகிறது. ஆனால் இந்த ரோட்டில் வாகனங்கள் தாறுமாறாக வருவதால் உயிர்ப் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. உரிய அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகள் எடுத்தால் நலமாக இருக்கும்.
மின்சார சிக்கனம் தேவை எ(இக்கணம்):
அடிப்படை தேவைகள் உணவு, உடை, இருப்பிடம் என்பவற்றில் இக்கால நாகரீகவாழ்வில் மின்சாரத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மின்சார பற்றாக்குறையால் கரண்ட் எப்ப இருக்கும்? போகுமென தெரியாத நிலையில் அன்றாட வாழ்வை நகர்த்தியாக சூழ்நிலையில் நாம் இருக்கையில் அரசாங்கமோ மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதை இந்தப் படத்தில் பாருங்கள்.
இடம்: மதுரை - பாத்திமா காலேஜ் - வழிவிடும் பெருமாள் கோவில் அருகில் - திண்டுக்கல் ரோடு.
நேரம்: காலை 10:15
****************************************************
மதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் என்ற தலைப்பில் செய்திகள் இன்னும் வரும்....
15 கருத்துரைகள்:
மீனாட்சி அம்மன் கோவிலில் அந்த மரம் பார்த்திருக்கிறேன். செல்லூர் பாலம் உண்மையிலேயே உபயோகமான ஒன்று. இன்னும் படங்கள் எதிர்பார்க்கிறேன். :)))
வணக்கம்
நாங்கள் இந்தியா வரா விட்டாலும் வைகை ஆறு படத்தில்பார்க்கும் வாய்ப்பு தங்கள் பதிவின் மூலம் கிடைத்துள்ளது மீனாட்ச்சி யம்மன் கோயிலில் உள்ள அதியம் வேப்பமரமும் அரசமரமு ஒன்றாக வளர்வது போன்ற அதிசயம் அருமை பதிவு அருமை வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தொடர்ந்து சமூக்சசெய்தியை பகிருங்கள் வாசி!
மாமதுரை போற்றுவோம்.
நண்பர் பிரகாஷ்குமாரின் அருமையான பதிவு:
மதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் - பகுதி ஒன்று!
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
வாழ்த்துகள் பிரகாஷ் குமார்.
நந்தி கோவிலுக்கு உள்ளேதான் இருக்கும் ,ஆனால் கோவிலே நந்தியாக நிற்கும் கொடுமையை மதுரையில்தான் பார்க்க முடியும் ...வைகை ஆற்றின் மேல் மக்கள் பயன்பாட்டுக்காக பல கோடி செலவில் பாலம் கட்டப் பட்டுள்ளது ,ஆனால் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியாத அளவிற்கு ,பாலம் முடியும் இடத்தில் உள்ள கோவில் சுவர் சாலையின் நடுவே நந்தியாக உள்ளது .இதனால் மக்களுக்கு ஏற்படும்சிரமத்தைப் போக்க சம்பந்தப் பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் !
தொடரட்டும் உங்கள் நல்ல பணி!
த.ம +1
சிறப்புகளின் சீரழிவுகள்...
தொடர்க... வாழ்த்துக்கள்...
மதுரையை நானே சுத்திப்பார்த்த மாதிரி ஒரு ஃபீலிங்.
வை கை (கை வை )இனுயும் இந்த ஆற்றுப் பகுதியில் கையை வைக்காது போனால்
மறந்துவிட வேண்டியது தான் சுத்தம் !! அரசு மின்சாரத்தை எவ்வளவு சிக்கனமாகப்
பாவிக்கின்றது என்று மிக அருமையாக உங்கள் தேடலின் மூலம் வெளிக்காட்டியுள்ளீர்கள்
சகோ .வாழ்த்துக்கள் தேடல் தொடர்வதன் மூலம் மக்களுக்கு நன்மைகள் கிட்டட்டும் .
மதுரை பற்றிய என் இனிய நினைவுகளைக் கிளறி விட்டு விட்டீர்கள்;மறக்க முடியாத ஏழாண்டுக்கால மதுரை வாசம்!செல்லூரில் பணியில் இருந்த போது.ஆற்ரின் குறுக்கே கடந்து சிம்மக்கல் வந்து பேருந்து பிடிதத நாட்கள்.அந்த வைகையா இது?கூவமாகிவிட்டதோ?
எழுபதுகளின் முற்பகுதியில் நாங்கள் சபரிமலைக்குச் செல்லும்போது அதிகாலையில் வைகையில் குளிப்பதாக இருந்தோம். ஆதவனின் கிரணங்கள் பரவத் தொடங்கும் நேரம். ஆற்றைப் பார்த்ததும் அதில் குளிக்கும் எண்ணத்துக்கு முழுக்குப் போட்டோம். அவ்வளவு அசிங்கமாக இருந்தது. அரசமரமும் வேப்ப மரமும் பிணைந்து வளர்வதைப் பார்த்திருக்கிறேன். ( மதுரையில் அல்ல.)பகிர்வுக்கு நன்றி. .
உங்க முகநூலில் இதே விஷயங்களை பார்த்தேன்.. நன்று..
மதுரை செய்திகள் நன்று...
மீனாட்சி அம்மன் கோவில் மரம் பார்த்த ஞாபகம் இருக்கிறது. செல்லூர் பாலத்தில் பயணித்து இருக்கிறேன்...
வைகையின் இன்றைய நிலையை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது.
மதுரை பற்றிய செய்திகள் தொடரட்டும்......
செல்லூர் பாலத்தில் இருந்து மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்கள் பார்ப்பது கொள்ளை அழகு. பரவசம்