மதுரையில் சித்திரைத் திருவிழா வெகு சிறப்பாக நடந்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று 23-04-2013 காலை 8:17 முதல் 8:41-க்குள் மேற்கு வடக்கு ஆடிவீதியில் உள்ள திருகல்யாண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நன்றி: விகடன் |
இக்கல்யாணத்தைக் காண மதுரை, மற்றும் சுற்று வட்டார மக்கள் கோவிலில் திரண்டிருந்தார்கள். கோவிலுக்கு செல்லும் வழியெங்கும் பக்தர்களை வெயிலில் இருந்து குளிர்விக்க தண்ணீர், மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று அருந்தினார்கள்.
பக்தர்கள் பசியாற பொங்கல், புளியோதரை, தயிர் சோறு என பலரும் வழங்கிக் கொண்டிருந்தார்கள். மக்கள் வரிசையாக நின்று வாங்கி வயிறார சாப்பிட்டார்கள்.
சில பக்தர்கள் வேஷம் போட்டு கையில் கருக்கு பொட்டு வைத்துக் கொண்டு பக்தர்களுக்கு நெற்றியில் வைத்து விட்டார்கள். இவர்களிடம் மக்கள் சென்று ஆசி வாங்கினார்கள்.
மீனாட்சியம்மன் கோவிலின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு கோபுர வாயிலின் வழியாக மக்கள் வரிசையாக கோவிலுக்குள் செல்லுமாறு வழி அமைத்திருந்தார்கள். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி வரிசைகள் அமைத்து ஒவ்வொருவரும் போலீசாரால் சோதனையிட்ட பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மக்களை நிறுத்தி நிறுத்தி கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டதால் நெரிசல் இல்லை. இந்த வருடம் மிக எளிதாக கோவிலுக்குள் சென்று மீனாட்சியை தரிசனம் செய்ய முடிந்தது. போலீசார் மிகச் சிறப்பாக தங்கள் பணியை செய்து கொண்டிருந்தார்கள்.
திருமண மண்டபத்திற்கு முதலில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் வர தொடர்ந்து மீனாட்சியும் வர அடுத்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணியன், பவளக் கனிவாய் பெருமாள் ஆகியோர் வந்து மேடையில் எழுந்தருளினர். தொடர்ந்து மீனாட்சியாக சுவாமிநாத பட்டரும், சொக்கநாதராக பிரகாஷ் பட்டரும் இருந்து திருக்கல்யாணத்தை நடத்தினர்.
காலை 8.45 மணிக்கு மீனாட்சிக்கு சொக்கநாதர் மங்கல நானை அணிவித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் சிவ-சிவ சொக்கநாதா, மீனாட்சி என பக்தி கோஷம் எழுப்பினர். அதன்பிறகு மாணிக்க மூக்குத்தியுடன் காட்சியளித்த மீனாட்சி - பிரியாவிடை சுந்தரேசுவரருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டன. சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத நடைபெற்ற திருமணத்தை தொடர்ந்து சீர்வரிசை கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சடங்குகளும் நடத்தப்பட்டன.
நன்றி: மாலைமலர்
திருமணம் நடைபெற்ற மண்டபம் வெகு அழகாக பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மண்டபம் உள்ள ஆடிவீதி முழுவதும் பந்தல்கள் அமைக்கப்பட்டு பூக்கள் அலங்கரிக்கப்பட்டு குளிரூட்டப்பட்டிருந்தது. ஆகையால் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் இல்லாமல் மீனாட்சி திருக்கல்யாணத்தை பார்க்கும் வண்ணம் அமைத்திருந்தார்கள்.
திருக்கல்யாணத்தை காண வந்த பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் அடங்கிய பாக்கெட்டுகளை பக்தர்கள் வழங்கினார்கள். மீனாட்சி திருக்கல்யாணம் முடிந்ததும், திருமணமான பெண்கள் தங்கள் பழைய தாலிக் கயிற்றை மாற்றி புதுக் கயிறு மாற்றினார்கள். ஆடிவீதி, கோவில் சுற்றுப்புற வீதி என எல்லா இடங்களிலும் புதுக் கயிறு மாற்றும் பெண்கள் கூட்டம் மிகுந்திருந்தது.
மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு கோவில் சார்பில் மொய்ப் பணம் வாங்கப்பட்டது. மக்கள் ஆர்வமாக போட்டி போட்டுக் கொண்டு மொய்ப்பணம் செலுத்தினார்கள்.
கோவிலில் கூட்டம் மிகுதியாகி, நெரிச்சல் ஏற்படுவதால் பக்தர்களுக்கு கல்யாண சாப்பாடு சிம்மக்கல், மீனாட்சி பஜார் அருகில் உள்ள சேதுபதி பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சில ஆண்டுகளாக இங்கு தான் கல்யாண சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கருப்பட்டிப் பொங்கல், சாம்பார் சாதம், வெஜிடபிள் பிரியாணி, உருளைக்கிழங்கு கூட்டு, தயிர் சாதம், வடை, ஊறுகாய் என பாக்கு மட்டை தட்டில் பக்தர்களுக்கு வழங்கினார்கள்.
பந்தல் அமைக்கப்பட்டு வரிசையாக டேபிள் போட்டிருந்தார்கள். சாப்பாடு வாங்கிக் கொண்டு வரிசையாக நின்றுக் கொண்டு சாப்பிட்டார்கள். அருகில் இருந்த வயதான பக்தர் ஒருவர் "முன்பெல்லாம் வாழை இலையில் வடை பாயாசத்தோடு சாப்பாடு போடுவார்கள். இன்று இப்படி கையேந்தி சாப்பாடாக நிலை மாறிவிட்டது" என வருத்தம் தெரிவித்தார்.
சாப்பிட்டு முடித்தவர்களுக்கு வெற்றிலை பாக்கு வழங்கப்பட்டது.
மீனாட்சி திருக்கல்யாணத்தை பார்க்கும், தரிசிக்கும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். கல்யாண சாப்பாடு ருசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் அடுத்த வருட திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு மீனாட்சி-சுந்தரேஸ்வரர் அருள் பெறுங்கள் நண்பர்களே!
நாளை 24-04-2013 அழகர் எதிர்சேவை மூன்றுமாவடியில் நடைபெறும்.நாளை மறுநாள் 25-04-2013 அழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.
7 கருத்துரைகள்:
அருமையான படங்கள்...
தரிசனம் கிடைத்தது... +
(மோர் முதல் வெற்றிலை பாக்கு வரை)
காவல்துறைக்கு ஒரு சல்யூட்...
நன்றி... வாழ்த்துக்கள் பல...
ரொம்ப நாள் கழிச்சு மதுரைக்கு வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாணத்தை தரிசித்த திருப்தி எனக்கு உங்களோட தெளிவான பதில்களால கிடைச்சது. சின்ன வயசு ஞாபகங்கள் மீண்டும் வந்தது! மிக்க நன்றிப்பா!
வணக்கம்,பிரகாஷ்!நலமா?///அருமையான காட்சிகள்.தூர தேசங்களில் இருக்கும் எங்களுக்கு இது போன்ற கொடுப்பனைகள் இல்லையே என்ற வருத்தம் இருந்தது.இப்போது உங்கள் வாயிலாக மனக்கண்ணில் அனைத்தும் பார்க்கக் கிடைத்தது,நன்றி!
மதுரைக்கும் ஒருமுறை வரணும் பார்க்கலாம்.
ஒருமுறையாவது இந்த வைபவத்துக்கு வரணும்ன்னே
நேரில் திருவிழாவை பார்க்கமுடியாத குறையை
தீர்த்துவிட்டது உங்கள் பதிவு...
உங்கள் மூலம் நானும் பார்த்த உணர்வை
பெறுகின்றேன் படமும் பதிவும் மூலம்.பகிர்வுக்கு நன்றி !