மதுரையில் பொழுதுபோக்குவதற்கான சிற்சில இடங்களில் தல்லாகுளம் மாநகராட்சி அலுவலகத்திற்கு அருகே இருக்கும் சுற்றுச்சூழல் பசுமை பூங்காவும் ஒன்று. மிகக் குறைந்த நுழைவுக் கட்டணத்தில் இயற்கையை சுவாசிக்க நகருக்கு மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள இடம் இது. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து சென்ற வாரம் பசுமையை ரசிக்கலாம் என சென்றிருந்தேன்.
முன்பை விட பசுமை ரொம்பவும் குறைந்து இருந்தது. சில இடங்களில் புற்கள் சீராக வெட்டப்படாமலும், சில இடங்களில் புற்களே இல்லாமல் கட்டாந்தரையாகவும் இருந்தது. பாதைகளில் வெளிச்சத்திற்காக இருந்த அலங்கார விளக்குகள் பெரும்பாலும் சேதமுற்று இருந்தது. அவைகளை சீர் செய்யாமல் தனியாக விளக்கு கம்பங்கள் போடப்பட்டிருந்தன. அதில் சோலார் பேனல்கள் இருந்தும், ஏனோ மின்சார வயர்களால் இணைக்கப்பட்டிருந்தது.
பலமுறை இங்கு சென்றிருந்தாலும், கீழே படத்தில் உள்ள குதிரைகள் மீது அமர்ந்திருக்கும் வீரன் உள்ள சிலையை அன்று தான் பார்த்தேன். மிக அழகாக, நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.
பூங்காவின் மையத்தில் இருக்கும் மேல்நோக்கி உயரமாக செல்லும் செயற்கை நீரூற்று தண்ணீர் இல்லாமல் வெறுமனே இருந்தது. நானும் வெறுமையை உணர்ந்தேன். நீரூற்று இயங்கும் போது பெரும்பாலான மக்கள் கூட்டமும் நீரூற்றை சுற்றியே இருக்கும். காற்றினால் சாரல் நம்மீது விழும். இப்போதோ அந்த வழியாக செல்வதையே பெரும்பாலானோர் தவிர்க்கிறார்கள்.
பூங்காவில் இருக்கும் சிறிய படகுதுறையும் ஆளில்லாமல் வெறிச்சோடி இருந்தது.
இசை நீரூற்று எனும் இசைக்கு ஏற்ப நடனமாடும் நீரூற்று அரங்கமும் உள்ளது. இப்போது இயங்குகிறதா எனத் தெரியவில்லை.
சிறுவர்களுக்காக அமைந்திருக்கும் விளையாட்டு பூங்கா மட்டும் குழந்தைகளாலும், பெற்றோர்களாலும் நிறைந்து இருந்தது.
திடீரென மழை பெய்தால் பூங்காவில் ஒதுங்க இடமே இல்லை. ஆனாலும் பூங்கா நடைபாதைகளில் ஆங்காங்கே மிகச் சில இடங்களில் கீழே படத்தில் இருப்பது போன்ற ஷெட் அமைக்கப்பட்டு உள்ளது.
நான் மிகவும் ரசிக்கும் அலங்கார விளக்குகளால் ஒளிரும் செயற்கை தென்னை மரம் சேதமடைந்து இருந்தது. பூங்காவில் நாம் எங்கு இருந்தாலும் இந்த செயற்கை தென்னை மரம் விளக்குகளால் அழகாக காட்சியளிக்கும். ஆனால் இன்றோ பராமரிப்பின்றி உள்ளது.
இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட படம் |
பூங்காவின் உள்ளே இலவச கழிப்பறை உள்ளது. ஆனால் பராமரிப்பு மிக குறைவே. கட்டணம் வாங்கியாவது கழிப்பறையை பராமரிக்கலாம்.
பூங்காவினுள் தியான மண்டபம் ஒன்று உள்ளது. அது காலை மட்டுமே செயல்படும் என்பதை அங்கிருந்த அறிவிப்பு பலகை காட்டியது. காலையும், மாலையிலும் வாக்கிங் செல்ல பூங்கா உதவியாக உள்ளது.
மதுரை மக்களுக்கு பொழுபோக்கும் இடமாக இருக்கும் இந்த சுற்றுச்சூழல் பசுமை பூங்காவை உரிய பராமரிப்பு செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோர் கருத்து.
Photos: Nokia X2-02
7 கருத்துரைகள்:
வணக்கம்
சம்மந்தப்பட்டவர்களுக்கு சிறப்பான விழிப்புணர்வுப்பதிவு அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மதுரை மக்களின் சார்பாக ஆதங்கத்தை
படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
எவ்வளவு அழகாக உள்ளது... பெரும்பாலானோர் கருத்து நடக்க வேண்டும்..
நல்ல பதிவு..மேயருக்கு ஒரு மெயில் அனுப்பும்.
அப்படியே ஒரு எட்டு நடந்து போய் மேயரை பார்த்துட்டு சொலிட்டு வரலாமில்ல!?
பல பூங்காக்கள் ஆரம்பித்து சில நாட்கள்/மாதங்கள் மட்டுமே பராமரிக்கப் படுகின்றன. அது தான் கொடுமையே...
பிறகு அவை நிழல் சம்பவங்களுக்குப் பயன்படுகின்றன.
தில்லியிலும் இது போல பல பார்க்குகள்! :(
நம்ம ஊரில் ஆடம்பரமாக அழகாக ஆரம்பிக்கும் பூங்காக்களின் நிலை இதுதான்... மின்னொளியில் ஒளிரும் தென்னை மரத்தை அந்த வழியாக பயணிக்கும் போது பார்த்திருக்கிறேன். குழந்தைகள் சென்று வந்திருக்கிறார்கள். நான் போனதில்லை.