பழங்காலம் முதல் இக்கால தமிழர்களின் தொன்றுதொட்ட வீர விளையாட்டு இது. வாடி வாசலிலிருந்து சீறி வரும் காளையை இளைஞர்களில் தனியொருவர் காளையின் திமிலை பிடித்து கொண்டோ, காளையின் கொம்பை பிடித்தபடியோ, காளையின் கால்களை கவட்டை போட்டு தடுமாற வைத்தோ காளையை பிடி விடாமல் சிறிது தூரம் வரை செல்வது அந்த இளைஞரின் வீரத்தை நிரூபிக்கும் செயலாகும். அந்த வீரருக்கு பரிசுகள் குவியும். இவ்வாறு காளையை அடக்கும் விழா பொங்கல் நாளன்று மதுரைப்பக்கம் துவங்கும்.
தைத்திங்கள் முதல் நாளில் மதுரை அவனியாபுரம் பகுதியிலும், அடுத்த நாள் பாலமேடு பகுதியிலும், அடுத்து அலங்காநல்லூர் பகுதியிலும் நடைபெறும். அதையடுத்து தேனி, திண்டுக்கல் பகுதிகளில் நடைபெறும். பழங்காலம் முதலே பாரம்பரியமாக நடைபெற்று வாடும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இளைஞர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் இருக்கும்.
ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காக காளைகளை தயார் செய்வது எளிதான காரியமல்ல. ஜல்லிக்கட்டுக்கான காளைகளை தேர்ந்தெடுப்பதில் இருந்து மூச்சுப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, மணல் மேட்டை முட்டும் பயிற்சி, என காளைகளை ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காகவே தயார் செய்கிறார்கள். உடல் வலுப்பெற சத்தான உணவுகள் கொடுகிறார்கள். தங்கள் காளைகளை யாரும் அடக்கி வென்றுவிடக் கூடாது என்பதே காளைகளை தயார் செய்பவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கும். தங்கள் காளைகளின் மேலிருக்கும் நம்பிக்கையில் "அடக்கிப்பாருங்கடா?" என சொல்லி, காளைகளை அடக்கும் வீரர்களுக்கு பரிசுகளையும் அறிவிப்பார்கள்.
இப்படி ஜல்லிக்கட்டு தமிழகத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இதைக் காண பல ஊர் மக்களும் கூடுவார்கள். வெளிநாட்டினரும் விளையாட்டை ஆர்வத்துடன் கண்டு மகிழ்வார்கள். காலை முதல் மாலை வரை நடக்கும் ஜல்லிக்கட்டு கடந்த சில ஆண்டுகளாக கடும் விதிமுறைகளுடன் காவல்துறையினர் கட்டுப்பாடு, கலெக்டர் கட்டுப்பாடு என விளையாடும் நேரமும் குறைக்கப்பட்டது. இதனால் குறைந்த எண்ணிக்கையிலேயே காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது.
ஜல்லிக்கட்டு காளைகளின் வயது, காயம் இருக்கிறதா, ஆரோக்கியாக உள்ளதா என கால்நடை மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட பின்பே களத்தில் அனுமதிக்கப்பட்டது. அதே போல வீரர்களுக்கும் சீருடை, மருத்துவ பரிசோதனை, மது அருந்தியுள்ளாரா என பல சோதனைகளை கடந்த பின்பே களத்தில் அனுமதிக்கப்பட்டார்கள்.
இவ்வாறான ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் மூலம் ஆபத்து வந்தது. காளைகள் துன்புறுத்தப்படுகிறது, உறுப்புகள் ஊனமாகிறது, உயிரிழக்க நேரிடுகிறது என பல காரணங்கள் சொல்லி நீதிமன்றம் மூலமாக ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை வாங்கப்பட்டது. காளைகளை தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு(2014) வரை நீதிமன்றத்தில் அனுமதி வாங்கி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு நடத்த நீதிமன்றம் முழுமையாக தடை விதித்துவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தும் மத்திய அரசின் கவனத்தில் எடுத்துக் கொள்ளவே இல்லை. தமிழக அரசும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை தொடர்ந்து நடத்திட வேண்டும் என ஆர்வமின்றி பொங்கலுக்கு(2015) முதல் நாளன்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. அந்த கடிதம் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு சாதகமான தீர்ப்பை தரவில்லை. இதனால் தமிழகத்தின் பழங்கால பாரம்பரியத்தில் ஒன்றான ஜல்லிக்கட்டு நடத்தப்படாமல் முடிவுக்கு வந்தது.
ஜல்லிக்கட்டு நடத்த இருந்த பகுதிகள் சோகமயமானது. தயார் செய்யப்பட்ட காளைகளும், வீரர்களும் தங்களின் வீரத்தை காட்ட களம் கிடைக்கவில்லை. ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊர்களில் போராட்டங்களும், கருப்புக்கொடி ஏற்றி வைத்தும் ஜல்லிக்கட்டு மீதான தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர்களால் எதிர்ப்பை பதிவு செய்ய முடிந்ததே அன்றி ஜல்லிக்கட்டை நடத்த முடியவில்லை. ஆனாலும் சில பகுதிகளில் நீதிமன்ற தீர்ப்பை மீறி வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. ஜல்லிக்கட்டு மைதானத்தில் வீரர்கள் குவிந்தார்கள். ஆனால் காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த முயற்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.
இவ்வாறான நிலையில் ஒரு முக்கிய பெண் அரசியல்வாதி ஜல்லிக்கட்டு விளையாட்டு மேலைநாட்டினரின் விளையாட்டு எனக் கூறி எரிகிற கொள்ளியில் எண்ணையை ஊற்றினார்.
ஜல்லிக்கட்டு நடத்தும் ஊர் மக்கள் இன்னும் ஒரு மாதத்திற்குள் விளையாட்டு நடத்த அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காளைகளை தயார் செய்து வருகிறார்கள். அவர்களின் நம்பிக்கை சாத்தியம் ஆகுமா? தமிழர்களின் பழங்கால பாரம்பரிய விளையாட்டு மீண்டும் நடக்குமா? அல்லது நம் தலைமுறையே ஜல்லிக்கட்டு விளையாட்டை காணும் கடைசி தலைமுறையாகுமா?
பொறுத்திருந்து பார்ப்போம்.
டிஸ்கி: ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நேரடியாக மதுரை தொலைகாட்சி சேனல்கள் ஒளிபரப்புவார்கள். அதை வீடியோவாக பதிவு செய்து யூடியூப்-இல் பதிவேற்றி தமிழ்வாசி தளத்தில் பதிவுகளாக எழுதியுள்ளேன். ஆனால் இந்த வருடம் அதற்கு கொடுப்பினை கிடைக்கவில்லை.
ஆகையால் ஜல்லிக்கட்டு பற்றி ஏற்கனவே எழுதிய பதிவுகளின் சுட்டியை இப்பதிவின் கீழே தருகிறேன். அப்பதிவில் உள்ள வீடியோவை பார்க்க தவறாதீர்கள்.
நண்பர் பதிவர் சுரேஷ் தனது வலைப்பூவில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பற்றி எழுதியுள்ள பதிவு இங்கே
ஊர் ஸ்பெஷல் - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு !!
2011-இல் ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு - வீடியோ இணைப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு - வீடியோ இணைப்பு
2012-இல் ஜல்லிக்கட்டு
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - வீடியோ இணைப்பு
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - வீடியோ இணைப்பு
படங்கள் உதவி: கூகிள் தேடல்
செய்தித்தொகுப்பு: இணையம் மற்றும் நாளிதழ்கள்
Lables: ஜல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு தடை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, தமிழக பாரம்பரியம், மதுரை, மதுரை ஜல்லிக்கட்டு
5 கருத்துரைகள்:
மிருகவதை என்ற பெயரில் ஜல்லிக்கட்டை தடை செய்யும் அரசாங்கம் , மாமிசத்துகாக ஏராளமான மாடுகள் கொல்லப்படுவதையெல்லாம் கண்டுகொள்ளாது . ஏனென்றால் அது தொழிலாம் .
http://articles.economictimes.indiatimes.com/2014-06-25/news/50856076_1_buffalo-meat-beef-exports-meat-export
http://meattechasia.com/news_and_views1.php
இதற்கெல்லாம் பதில்கூற வகில்லாதவர்கள் தான் தமிழர்விளையாட்டைத்தடை செய்தார்கள் .
மாட்டிறைச்சிக்காக மாடுகளைக் கொல்வதை ஏற்கும் அரசு... நம் பாரம்பரிய விளையாட்டை தடை செய்வது எந்த வகையில் நியாயம்?
ம்... இன்னும் பலதும் கடைசி தலைமுறை தான்...
அட...! கருத்துரைப்பெட்டி புதுசு..!
ஜல்லிக்கட்டு மட்டுமல்ல .. கபடி விளையாடும் கடைசி தலைமுறையும் நாம் தான். அதுக்கும் வெட்டு வச்சாலும் வப்பாங்க
எல்லாம் அரசியல்!