ஆனந்தபுரத்து வீடு்
'நாயா இருந்தா குலைக்கணும். பேயா இருந்தா முறைக்கணும்' எழுதப்படாத இந்த சினிமா இலக்கணத்தை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு 'பிள்ளை என்றால் பேயும் இறங்கும். மருமகள் என்றால் மறுகணமே சரண்டர்' என்கிற சாத்வீக பேயை காட்டுகிறார் டைரக்டர் நாகா. உங்களுக்கு நிஜமாகவே ஒரு ஆஹா!
மனைவி, குழந்தையுடன் பதினைந்து வருடங்கள் கழித்து தனது சொந்த கிராமமான ஆனந்தபுரத்துக்கு வருகிறார் நந்தா. பல வருடங்களாக பூட்டிக் கிடக்கிற வீட்டில் அவரது தாய், தந்தையின் ஆவி உலவுகிறது. இதை முதலில் உணர்ந்து கொள்கிற சாயாசிங் அங்கிருந்து கிளம்பலாம் என்று நந்தாவை வற்புறுத்த, கிளம்பவே முடியாதபடி ஒரு லாக்! பிசினஸில் ஏற்பட்ட கடனுக்காக அந்த கிராமத்து வீட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் நந்தா. இவர் தப்பிக்க முயலும் ஒவ்வொரு நேரமும், வேணும்னா நீங்க போங்க. உங்க ஃபேமிலியை நான் பார்த்துக்கிறேன் என்று சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கிறார் அந்த பருமனான பைனான்சியர். இவர் பெயர் மேகவர்ணபந்த். பெயரை போலவே அவரது வித்தியாசமான நடிப்புக்கும் சேர்த்து ஒரு ஷொட்டு.
கூடவே இருக்கிற நண்பனே துரோகியாகிற போது வீட்டிலிருக்கிற ஆவிகள் எடுக்கிற முடிவும், நந்தா அண் பேமிலியின் நிம்மதி பெருமூச்சும்தான் படம்.
இது பேய்வீடு என்பதை முதல் ஷாட்டிலேயே ஓப்பன் பண்ணிவிடுகிறார் டைரக்டர். பல காலமாக சுத்தம் செய்யப்படாத வீடு, பிள்ளை வருகிறான் என்றதும் தானாக கூட்டி பெருக்கி சுத்தமாகிக் கொள்வதும், வீட்டுக்குள் நுழைந்த பேமிலிக்கு சுட சுட தானாகவே உணவு சமைத்துக் தருவதுமாக ஒரு ஆவியுலக அற்புதத்தை ஆரவாரமாக ஆரம்பித்து வைக்கிறார் நாகா. ஆனால் ஆவிகளின் அற்புதங்கள் ஜன்னலை திறந்து திறந்து மூடுவதிலேயே பாதி (பிராணன்) போய்விடுகிறது. ஆனாலும், அந்த துரோகிக்கு தருகிற சாட்டையடியும், அந்தரத்தில் ஊஞ்சலை து£க்கி அலற விடுவதும் தனி சுவாரஸ்யம். மனைவியை கை நீட்டுகிற பிள்ளை நந்தாவை தனது கைத்தடியால் போட்டுத்தள்ளுகிற அந்த காட்சியும் கைதட்டல் களேபரம்.
நந்தாவுக்கு இயல்பாகவே சற்று மிரண்ட முகம். பொருத்தமாக இருக்கிறார் பல காட்சிகளில். தனது அப்பா அம்மாதானே என்று கூட நினைக்காமல் வீட்டை விட்டு ஓட முயல்வது பரிதாபம். அதைவிட பரிதாபம், என்னை ஏன் போக விட மாட்டேங்கிறீங்க என்று ஆவிகளிடம் ஆவேசப்படுகிற காட்சி.
முதலில் அஞ்சினாலும், இந்த ஆவிகளால் தனக்கும் தன் பிள்ளைக்கும் ஆபத்தில்லை என்பதை உணர்கிற நிமிடத்திலிருந்தே சாயாசிங் ஹாயா சிங் ஆகிவிடுகிறார்.
லேண்ட் புரோக்கர் ரத்தினமாக கணேஷ்பாபு. ஆவிகள் இருப்பதை அறியாமலே இவரும் இவர் கூட்டி வரும் அண்ணாச்சியும் வீடு பார்க்காமல் பாதியில் பிடிக்கிற ஓட்டம் இருக்கிறதே, வீடு வந்து சேர்கிற வரை நமக்கு தொடர்கிறது சிரிப்பு. நண்பன் நந்தாவை தன் கண்ணெதிரிலேயே சிலர் மிரட்டுவது பொறுக்காமல் 'வெளியூர்காரன் அடிக்க வர்றதா' என்று பாய்வதும் சரியான டச்சிங்.
அந்த குழந்தை ஆர்யனின் முகபாவங்கள் தனி போட்டோ கேலரியாகவே மனதில் பதிகிறது. அந்த மலர்ந்த முகத்தில் ஆயிரமாயிரம் அசகாய எக்ஸ்பிரஷன்கள். இந்த பேரனுக்காக தாத்தா பாட்டி ஆவிகளின் பாசப்பிணைப்பும் மிக சரியாக சொல்லப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு முக்கிய கேரக்டர் கலைராணி. முதல் காட்சியிலேயே ஆவிகளின் மகிமையை புரிந்து கொள்கிற இவர் அப்புறம் ஏன் பயந்து ஓட வேண்டும்?
ரமேஷ்கிருஷ்ணாவின் இசை பேய் படம் என்ற மிரட்டலை தராமல் தாலாட்டியிருக்கிறது. கதையோடு கை பிடித்து அழைத்துச் செல்கிறது அருண்மணி பழனியின் ஒளிப்பதிவு.
பேரானந்தபுரத்து வீடு
1 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - திரை விமர்சனமா ? சரி சரி - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா