CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



பெட்டிக் கடையிலும் அதை ஏன் விக்கறாங்க? அப்ப மெடிக்கல் ஷாப் எதுக்கு?

              
       வணக்கம்ண்னே, நம்மாளுக ஒரு நாளைக்கு ஒரு தம்மு அடிக்றதுல இருந்து சுமார் ரெண்டு மூணு பாக்கெட் வரைக்கும் காலி பண்ற ஆட்கள் இருக்காங்க. தம்மடிக்க வயசு வித்தியாசமெல்லாம் இல்லை. ரொம்ப சீக்கிரமா கத்துக்கறாங்க. பழக்கம் அதிகமாகி விட முடியாம செயின் ஸ்மோக்கரா ஆயிடறாங்க. அவங்களுக்கு நேரங்காலமெல்லாம் கிடையாது. சாப்பிடறதுக்கு முன்னாடி, பின்னாடி, தூக்கம் வரலையினா தம்மு, தூக்கம் வர்றதுக்கு தம்மு என தம்மடிக்க காரணம் ரெடியா வச்சிருப்பாங்க. 
            இதுல ஒரு கூத்து பண்ணுவாங்க பாருங்க, தம்மடிச்சுட்டே கக்கூஸ் போனாத்தான் நல்லா ஃபிரீயா போகும்னு டாய்லெட்டையே புகை மண்டலமா ஆக்கிருவாங்க. அடுத்து சிகரெட் பழக்கமிலாதவங்க அந்த டாய்லட்டுக்கு போனா அந்த புகை நாத்ததுல பாவம் அவங்களுக்கு கக்கூஸ் வராது. அவிங்க பாடு செம தின்டாட்டமா இருக்கும்.  இப்ப நான் சொல்ல வர்ற மேட்டரே வேற. சிகரெட் பிடிக்கிறது தப்பு கிப்புன்னு விழிப்புணர்வு சொல்ல வரல. நமாளுக சிகரெட் ஒன்னுன்னாலும் சரி, பாக்கெட் வாங்கினாலும் கூடவே எதுக்கு ஹால்ஸ் மிட்டாய் வாங்கறாங்க? அதுவும் பத்து பதினஞ்சுனு வாங்கி ஸ்டாக் வச்சிக்கிருவாங்க. சிகரெட் ஸ்டாக் வைக்கிறாங்களோ இல்லையோ ஹால்ஸ் எப்பவும் ஸ்டாக் இருக்கும். 
                ஹால்ஸ் எதுக்கு யூஸ் ஆகுது? ஹால்ஸ், விக்ஸ் மிட்டாய்கள் தொண்டை கரகரப்பு, இருமலுக்கு தற்காலிக மருந்தாக பயன்படுகிறது. தண்ணீரோ, குளிர்சியோ சேராமல் இருமல் வந்தால் உடனே மருத்துவமனைக்கு போகனும்னு அவசியம் இல்லை. பக்கத்துல இருக்கற கடையில ஹால்ஸ், விக்ஸ் விப்பாங்க, நாமளும் இருமலுக்கு உடனே வாங்கி வாயில போட்டு சப்பிக்கலாம். ஒரு ரெண்டு நாள் போட்டோம்னா சரியாயிடும். அதுக்காக தான் ஹால்ஸ், விக்ஸ் விக்கறாங்க. அதுக்கும் மேல இருமல் சரி ஆகலைன்னா ஹாஸ்பிடல் போக வேண்டியது தான். இப்படி யூஸ் ஆகுற ஹால்ஸ் எதுக்கு சிகரெட் வாங்கறவன்களுக்கு தேவைப்படுது? சிகரெட் பிடிக்கணும் ஆனா பிடிச்ச மாதிரி காட்ட கூடாது. அதுக்கு அவிங்களுக்கு ஹால்ஸ் தேவைப்படுது. அதோட தொண்டைக்கும் நல்லதுன்னு நெனச்சு போட்டுக்கிருவாங்க. 
                  அடப்பாவிகளா? இருமலுக்கு மருந்தா யூஸ் ஆகுற ஹால்ஸ் உங்களுக்கு சிகரெட் நாத்தத்தை போக்கும் மருந்தா பயன்படுதாக்கும். என்ன கொடுமை சார், பாக்கும் யூஸ் பன்றாங்களேன்னு சொல்றிங்களா? ஹி..ஹி... இதுல நம்மாளுக ஒரு ட்ரிக் வச்சிருக்காங்க. பாக்கு போட்டா அந்த வாசனையே பொண்டாட்டி கிட்ட காட்டி கொடுத்திரும். ஹால்ஸ் போட்டா வாசனை வராதான்னு கேட்கறின்களா? இருமல்னு சொல்லி சமாளிச்சுக்கலாம். தினமும் தம்மடிச்சுட்டு ஹால்ஸ் போட்டுட்டு போனா தினமும் இருமலானு போண்டாட்டிங்க கேட்பாங்களேன்னு நினைக்கறின்களா? ஏன்னா அந்த ஹால்ஸ் வாசனை அவங்களுக்கு பழகிப் போயிரும். சிகரெட் பிடிக்கிறது அவங்களுக்கு தெரிஞ்சாலும், நமக்கு பயந்துட்டு ஹால்ஸ் போட்டுக்கராங்கனு அவங்களுக்குள்ள ஒரு சந்தோசமும் வந்திரும். 
                  அது சரிங்க, பெட்டிக்கடையில ஹால்ஸ் ஏன் விக்கணும்? சிகரெட் பிடிக்றவங்க வாங்க தான் விக்கறாங்க. இது அவசியமாங்க? இருமலுக்கு தேவைபடுற மிட்டாய் சிகரெட்டுக்கு தேவையா? அதுவும், டீ, வடை, போண்டா, விக்கிற பங்க் கடையில் எதுக்கு ஹால்ஸ்? பெட்டிகடையில் விக்கிற ஹால்ஸ் டூப்ளிகேட்டா கூட இருக்கலாமே. சில்லறை இல்லையினாலும் அந்த ஹால்சை தான் தராங்க. அந்த அளவுக்கு ஹால்ஸ் சீப்பா போச்சா? அப்ப இருமலுக்கு மருந்துங்கிரதெல்லாம் சும்மா தானா? மெடிக்கல் ஷாப் எதுக்கு இருக்கு? ஹால்ஸ் க்கு அங்க மதிப்பு இல்லையா? இன்னும் என்னனமோ கேட்கலாம்ங்க. நீங்களே கேட்டுக்கங்க....
மேலும் வாசிக்க... "பெட்டிக் கடையிலும் அதை ஏன் விக்கறாங்க? அப்ப மெடிக்கல் ஷாப் எதுக்கு?"



பிரபல மொக்கை பதிவர் அம்போ ஆனார் - பதிவுலகம் பரபரப்பு!

        வணக்கமுங்கண்ணா!, எம்பேரு மொக்க சாமி, எல்லோரும் மாப்ள மொக்கசாமினு கூப்பிடுவாக... மாப்ள... மாப்ள.. அப்படினு வாய் நிறைய கூப்பிடுற ஒரு பய புள்ளைகளும், அதுங்க பொண்ணை கண்ணுல காட்ட மட்டிங்குதுக. என்ன செய்ய, நாம அம்புட்டு உலக பேரழகனா இருக்கோம்ல. ஹி... ஹி.... வேறேன்னத்த சொல்றது! சரி இப்போ மேட்டருக்கு வரேன், நான் சில மாசமா பதிவுலகுல நிறைய பேரோட பதிவுகளை படிச்சுட்டு வரேனுங்க. எல்லா ப்ளாக்கும் போய் படிக்கற எனக்கு சொந்தமா ஒரு ப்ளாக் ஸ்டார்ட் பண்ண ஆசை வந்துச்சு. ஹி.. ஹி... விபரீதமான ஆசை தான்! ஹி... ஹி... உங்களுக்கு விபரீதம்னு சொன்னேன்.
         ப்ளாக் அக்கௌன்ட் ஓபன் பன்னி "மொக்கை மாப்ள" அப்படின்னு பேரு வச்சு ( பேரு எப்படி?) எங்க ஊரு தெய்வம் மொக்கசாமிக்கு ஒரு ரூவா உண்டியல்ல காணிக்கையா போட்டு ஆரம்பிச்சேனுங்க. தினமும் ஒரு பத்து பேராவது பாலோயர் சேரனும் (ரொம்ப ஆசை படறேனோ?), பதிவுக்கு குத்துமதிப்பா 89 கருத்துகளாவது வரணும்னு காசு வெட்டி போட்டிருக்கேனுங்க. (ஹி..ஹி.. மிரட்டல் எப்புடி?) சும்மா வெறுமனே வந்து மொக்கையை படிச்சிட்டு பாலோயரும் ஆகாம, கருத்தும் போடாம போறவங்கள எங்க மொக்கைச்சாமி தண்டிச்சிருவாரு. எதுக்கும் கொஞ்சம் யோசனை பன்னி உள்ளே வாங்க. (எம்புட்டு பில்டப்பு பாருங்கையா இந்த மொக்கை பதிவருக்கு). 
        மொத பதிவா என்ன மொக்கை போடலாம்னு நாலு ரூம் போட்டு யோசிச்சேனுங்க. நாலு ரூமு எதுக்குன்னு கேட்கறின்களா? நாலு பேர் கிட்ட நல்ல விஷயத்தை கேட்கிற மாதிரி, நாலு ரூம்ல உட்கார்ந்து யோசிக்கறேன். ஒரு மொக்கையும் என்ன எழுதறதுன்னு ஐடியா வரல. அப்படியும் விடுவோமா நாங்க, நாலு ரூம்லையும் மாத்தி மாத்தி உட்கார்ந்து யோசிச்சுட்டே தூங்கிட்டேன். திடீரென எங்க மொக்கைசாமி கனவுல வந்தாரு. "டேய் மொக்கை நாலு ரூமுக்கு வாடகையை கொடுத்துகிட்டு இன்னுமா யோசிக்கற.... ? யோசிக்கறத நிறுத்து... எழுதுடா.... யோசிக்காம எழுத ஆரம்பி. நீ எழுதறது எல்லாமே மொக்கை தான்... நான் பின்னாடி இருந்து உன் மொக்கைக்கு துணையா இருக்கேன். " அப்படின்னு எனக்கு அருள்வாக்கு சொன்னாரு. திடீர்னு முழிச்சு பார்த்தேன். ரூம்ல புகை மண்டலமா இருந்துச்சு. அப்பத்தான் மொக்கை சாமி வந்துட்டு போனத நம்பினேன். அப்போ முடிவு பண்ணினேன். என் இஷ்டத்துக்கு எழுத போறேன்... எழுதினா மொக்கையா தான் வரும். பரவாயில்லை. அதானே மொக்கைச்சாமி பின்னாடி துணையா இருக்காரே... அவர் மேல பாரத்தை போட்டு மொத மொக்கை எழுதி வெளியிட்டேன். ஹி...ஹி.. தலைப்பு என்னான்னு கேட்கறின்களா? "பிரபல பதிவர்களுடன் மொக்கை போட்டி-பதிவுலக பரபரப்பு" எப்புடி நம்ம தலைப்பு. முதல் பதிவே செம டூப்பர் சூப்பர் ஹிட்டு. ஹிட்டுனா என்னான்னு கேட்கக் கூடாது. ஏன்னா நான் புதுசு. அப்படித்தான் பில்டப் பண்ணுவேன். நீங்க கண்டுக்கற கூடாது. மொத மொக்கை பதிவுக்கு ஆதரவா ஒன்போது பாலோயர் வந்துச்சு. வெறும் 58 கருத்துக்கள் மட்டுமே வந்துச்சு. 
             பாலோயர், கருத்துகள் போடாதவங்களை மொக்கைச்சாமி பார்துக்கிருவார் என்ற நம்பிக்கையில் அடுத்தடுத்து பதிவுகள், இல்லை, மொக்கைகள் எழுத ஆரம்பிச்சேன். இதுல அஞ்சாவது பதிவா நடிகைகளை பத்தி ஒரு மொக்கை பதிவு போட்டேன் பாருங்க, பதிவுலகமே செம ட்ராபிக் ஜாம். அப்புறம் நம்ம மொக்கைச்சாமி வந்துதான் அந்த ட்ராபிக் ஜாமை சரி பண்ணினாரு. இப்படி தினமும் பதிவுலகம் ட்ராபிக் ஆகுறதும், அதை மொக்கை சாமி சரி பண்றதுமாக நான் எப்படியோ பிரபல மொக்கை பதிவரா வலம் வர ஆரம்பிச்சேன். கொஞ்ச நாள் நல்லா ஆட்டம் ஆடுனேன். 
           அப்புறம் திடீர்னு கூட்டம் குறைய ஆரம்பிச்சது. அட கடவுளே இது என்ன சோதனைன்னு மொக்கைசாமிக்கிட்ட ஓடினேன். வழக்கம் போல ஒரு ரூபா உண்டியல்ல காணிக்கையா போட்டுட்டு சாமி கிட்ட அருள் கேட்டேன். அவரு சொன்ன விஷயத்தை கேட்டு அப்படியே ஷாக்காயிட்டேன் தெரியுமா? சாமி சொன்னாரு, டேய் மொக்கை மாப்ள, உன் மொக்கைக்கு போட்டியா "ஷோக்கு ஷோக்கடி"ன்னு ஒரு மொக்கை பதிவரு புதுசா வந்திருக்காருன்னு. அதுவுமில்லாம உன் மொக்கையை படிச்சுட்டு நிறைய பேரு பைத்தியமா மாறிட்டாங்கலாம். அதனால உன் மொக்கையை படிக்க வர்றவங்க கூட்டம் கொறஞ்சு போச்சுன்னு குண்டை தூக்கிப் போட்டார். அய்யோ, இனி நான் என்ன செய்வேன், பிரபல மொக்கை பதிவர்னு பேரெடுத்த நான் இப்போ பிராப்ளம் தர்ற மொக்கையா ஆயிட்டேனே. 
         சாமி மொக்கை சாமி நீ தான் ஒரு வழி சொல்லனும்னு மறுபடியும் ஒரு ரூபா உண்டியல்ல காணிக்கை போட்டு அவர் அருள்வாக்கை வேண்டி நின்னேன். சாமி சொன்னாரு, மொக்கை மாப்ள அப்படிங்கற பேரை மெசேஜ் மாப்ள என மாத்திக்க. நானும் அவரு சொன்ன படி பேரை மெசேஜ் மாப்ள என மாத்திட்டு பதிவு போடலாம்னு யோசிச்சா வெறும் மொக்கை தான் மனசுல வந்து நின்னுச்சு. அதையும் மீறி ஒரு மெசேஜ் பதிவு போட்டேன். அப்படியும் கூட்டம் வரல. என்னான்னு பதிவை படிச்சு பார்த்தா, சொல்ற மெசேஜ்சை எப்படி மொக்கையா சொல்லலாம்னு போட்டிருந்திருக்கேன். அய்யோ, மொக்கைசாமி எனக்கு மெசேஜ் சொல்லத் தெரியல. எனக்கு பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு. எனக்கு பதிவுலகமே வேணாம். இனி இந்த மொக்கைக்கு ஆசைப்பட மாட்டேன் சாமி......

டிஸ்கி: 
இந்த பதிவு முற்றிலும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுபவை அல்ல.
மேலும் வாசிக்க... "பிரபல மொக்கை பதிவர் அம்போ ஆனார் - பதிவுலகம் பரபரப்பு!"



இவிங்கெல்லாம் மனுசங்களா? பாவம் பிஞ்சுகள்! ஆந்திராவில் பரபரப்பு!

            ஆந்திராவில கர்னூல்லில் உள்ள ஒரு அரசு ஆஸ்பத்திரியில போன வியாழக்கிழமையில இருந்து மறு நாள் வரை சுமார் 12 சிசு குழந்தைகள் இறந்திருக்கு.... எவ்ளோ அதிர்ச்சியான விஷயம் இது. இந்த இறப்புகள் சாதாரணமா வரக்கூடியது என அந்த ஆஸ்பத்திரியின் பெரிய டாகுட்டரு அலட்சியமா சொல்லியிருக்காரு. என்னாங்க நெனச்சிட்டு இருக்கீங்க, ரெண்டு நாள்ல ஒரு டஜன் சிசுக்கள் இறந்திருப்பது உங்களுக்கு சாதாரண விஷயமா? எப்படிங்க உங்களால இவ்ளோ ஈசியா பேச முடியுது? பாவம்யா அந்த அப்பா அம்மாக்கள். எவ்ளோ கனவுகளோட அவங்க இருந்திருப்பாங்க. அட்லீஸ்ட் ஒரு மருத்துவ ரீதியான காரணத்தையாவது அவங்களுக்கு சொல்லி அவங்கள தேத்தியிருக்கலாம். அதுவும் செய்யல. 
         அதுக்கும் மேல ஆந்திர சுகாதார துறை அமைச்சர் ரவீந்திர ரெட்டி இந்த இறப்புகள் மனுஷ தவறினால் நடக்கல. முழுக்க முழுக்க இறைவனே காரணம்னு சொல்லி இருக்காரு. எவ்வளவு வேதனையான விஷயம். ஒரு அமைச்சர் இப்படி பேசலாமா? எல்லாம் மருத்துவர்களின் அலட்சியமே காரணம்.  நூறு குழந்தைகள் அனுமதிக்க வசதிகள் இருந்தும் வெறும் ரெண்டே ரெண்டு ஆக்சிஜன் சிலிண்டர்கள் மட்டுமே வச்சிருந்திருக்காங்க. எப்படி இது போதும்? இதனால அவசர காலத்தில் எல்லோருக்கும் ஆக்சிஜன் கொடுக்க முடியாததும் ஒரு காரணம். ஒரு அரசு மருத்துவமனையில் சரியான அளவில் மருத்துவ உபகரணங்கள் இருக்க வேண்டாமா? இனியாவது அரசு விழிப்புடன் இருக்க வேண்டும். 
           உரிய பொறுப்பில் இருப்பவர்களும் சாக்குபோக்கு சொல்வதை நிறுத்தி விட்டு, உண்மையான காரணத்தை ஆராய வேண்டும். அப்போது தான் இனியும் நடக்கும் மரணங்களை தடுத்து நிறுத்த முடியும்.

அப்புறம் ஒரு விஷயம்,
        இது தமிழ்வாசியில் 300வது இடுகையாகும் என ஒரு புள்ளி விவரம் சொல்லுது. எப்படியோ தட்டுத்தடுமாறி, இத்தன பதிவுகள தாண்டி வந்திருக்கேனுங்க. எல்லாமே உங்க ஆதரவுதான்னு சொல்லி ஐஸ் வக்கிறேன். வேறவழி... நீங்க தேடி வந்து வாசிக்கரதுனால இம்புட்டு எழுத முடியுது... நீங்க வாசிக்கலைனாலும் எழுதுவேன். எனக்காக எழுதுவேன்... பொழுது போக்கிற்காக எழுதுவேன். நண்பர்கள் பிளாக்கிற்கு தேடிப்போய் வாசிப்பதும், அவர்களுக்கு கருத்துரை சொல்லி உற்சாகப்படுதுவது போல, என்னையும் உற்சாகபடுத்தும் நண்பர்களுக்கு நன்றி....

டிஸ்கி: 
நண்பர்களே, 300வது பதிவிற்கான வாழ்த்தை இங்கே தெரிவிக்க வேண்டாம். மேலே போட்டுள்ள செய்திக்கான கருத்தை தெரிவிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.... நன்றி...
மேலும் வாசிக்க... "இவிங்கெல்லாம் மனுசங்களா? பாவம் பிஞ்சுகள்! ஆந்திராவில் பரபரப்பு!"



அண்ணே ஒரு ஹான்ஸ் கொடுங்க, அப்படியே ஒரு சிகரெட் கொடுங்க


        ‘அண்ணே ஒரு ஹான்ஸ் கொடுங்க, அப்படியே ஒரு சிகரெட் கொடுங்க’ கேட்டதை கடைக்காரர் பவ்யமாக எடுத்துக்கொடுக்கும் காட்சிகளையும் பஸ், ரயில் நிலையங்களில் வாயில் கொள்ளிக்கட்டையுடன் புகையை மேல்நோக்கியும், பக்கவாட்டிலும் விட்டு, மிகுந்த திருப்தியில் உலா வருபவர்களையும் நாம் பார்க்கிறோம். புகைப்பழக்கம், புகைப்பவர்களை மட்டுமல்லாமல் அருகிலிருக்கும் புகைப்பிடிக்காதவர்களின் உடல் நலத்தையும் கெடுக்கிறது. இத்தனைக்கும் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை உள்ளது. மீறினால் தண்டனையும், அபராதமும் உண்டு. இதனை எவரும் பின்பற்றுவது இல்லை. நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களும் கவலைப்படுவதில்லை. இந்தியாவில் இப்போதுள்ள கணக்குப்படி ஆண்டுக்கு 10 லட்சம் பேர் புகையிலை பழக்கத்தால் செத்து மடிகின்றனர். அதாவது ஒவ்வொரு பத்தாண்டிலும் புகையிலைக்கு ஒருகோடி பேர் பலியாகிறார்கள். புகையிலை பழக்கத்தால் ஏற்படும் கடும் நோய்களால் பல லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். உலகம் முழுவதும் புகையிலை பழக்கத்தால் ஆண்டுக்கு 5 கோடி இந்தியர்கள் பாதிக்கப்படுகின்றனர். உலகில் புகையிலை உபயோகிப்பவர்களால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
       நம் நாட்டில் சிகரெட், புகையிலை, போதைப்பாக்கு என பல்வேறு வடிவங்களில் புகையிலையை பயன்படுத்துவோர் 27 கோடியே 50 லட்சம் பேர். ஆனால் புகைப்பழக்கமே இல்லாவிட்டாலும் பிறர் பயன்படுத்துவதால் அருகில் உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, அதில் பாதிக்கப்படுவதாக விபரங்கள் தெரிவிக்கிறது. கணவன் புகைப்பிடிப்பதால் மனைவியும், குழந்தைகளும், பொது இடங்களில் புகைப்பிடிப்பதால் அருகில் உள்ளவர்களும் புகையை சுவாசிப்பதால் புகையிலை பாதிப்புக்கு ஆளாகின்றனர். இவர்களின் எண்ணிக்கை சுமார் 7 கோடி. இது புகையிலை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கையில் சுமார் 25 சதவீதம். எந்த தப்பும் செய்யாமலே இவர்களும் புற்றுநோய், ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற உயிர்க்கொல்லி நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இது ஒருபுறம் இருக்க, புகைப்பழக்கம் உள்ளவர்களில் 15 சதவீதம் பேர், 15 வயதுக்கும் கீழே உள்ளவர்கள் என்பது இன்னொரு அதிர்ச்சியான தகவல். 15 முதல் 17 வயது உடையவர்களில் 25 சதவீதம் பேர் புகையிலைக்கு அடிமையாக உள்ளனர். 18 முதல் 19 வயது உடையவர்களில் 19 சதவீதம் பேர் புகையிலை அடிமைகள். இப்படி புள்ளிவிபரங்களை அள்ளித்தருவது வேறு யாருமல்ல. இந்த விபரீதங்களை கட்டுப்படுத்தி களையெடுக்கும் இடத்தில் இருக்கக்கூடிய மத்திய அரசுதான். இதில் இன்னொரு கொடுமையான புள்ளிவிபரத் தகவல், 34 வயதுக்குட்பட்ட புகையிலை பழக்கம் உள்ள ஒருவர் 18 ஆண்டுகள் தொடர்ச்சியாக தினமும் உடலில் நிக்கோடினை ஏற்றினால் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு அவரது உடலில் நிக்கோடின் இருக்கிறது என்பதுதான். புகையிலை பழக்கத்தை விட்டால் சுவாசமண்டலம் சீராகும்.
        ஒருவாரம் விட்டால் ரத்தத்தில் நிக்கோடின் அளவு குறையும். ஒருமாதம் புகையிலையை விட்டால் உடல் புதுப்பொலிவு பெறும் என்று மருத்துவ உலகம் சொல்கிறது. ஆனால் 18 வருடம்  உடலில் நிக்கோடின் சேர்ந்தால் உடல்என்னவாகும் என்பதை  புகைப்பவர்கள் எண்ணிப்பார்ப்ப தில்லை. புகையிலைக்கு எதிராகவும், புகைப்பழக்கத்திற்கு எதிராகவும் அரசு விளம்பரங்களை செய்து வருகிறது. இது வெறும் சம்பிரதாயத்திற்கு செய்து வருவதால் எவ்வித பயனும் ஏற்படவில்லை. பொது இடங்களில் புகைப்பிடிப்போர்களை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும்.
        பொது இடங்களில் புகையிலை சார்ந்த பொருட்களின் விற்பனையை அடியோடு தடை செய்ய வேண்டும். எய்ட்ஸ், மலேரியா போன்ற நோய்களால் இறப்பவர்களை விடவும் புகையிலை பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவில் புகையிலைக்கு பலியாவோர் என்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உலகத்தில் இன்று வளர்ந்த நாடுகள் பலவற்றில் புகையிலை சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இதனால் அந்த நாடுகளைச் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு தங்கள் வர்த்தகத்தை இடம் மாற்றிக்கொண்டுவிட்டன. 

-தீக்கதிர் கட்டுரை-


மேலும் வாசிக்க... "அண்ணே ஒரு ஹான்ஸ் கொடுங்க, அப்படியே ஒரு சிகரெட் கொடுங்க"



பிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து? படிங்க...


         
      நொறுக்கு தீனிகள், எண்ணெய் பலகாரங்கள் அதிகமா சாப்பிட்டா என்னென்ன நோய்கள் வரும்னு சொல்லனும்னு அவசியமே இல்லை. ஆனா பெண்கள் பிஸ்கட் மற்றும் கேக்குகள் சாப்பிட்டா கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது. ஒரு வாரத்துக்கு கொறஞ்ச பட்சம் மூணு தடவைக்கு மேல பிஸ்கட் மற்றும் கேக் வகைகளை சாப்பிட்டாலே புற்று நோய் வரும் அபாயம் இருபதாக இந்த ஆராய்ச்சி சொல்கிறது. 
           பிரிட்டனில் ஒரு ஆண்டுக்கு சுமார் 6400 பெண்களுக்கு கர்பப்பை புற்று நோய் வர்றதாகவும், அதுல சுமார் ஆயிரம் பெண்கள் மரணமடையரதாகவும் ஆய்வு சொல்கிறது. இந்த ஆய்வாளர்கள் பொதுவாக இனிப்புப் பண்டங்களுக்கும் புற்றுநோய் வாய்ப்பிற்கும் தொடர்புள்ளதா என கண்டறியவே ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார்கள். ஆனால் அதிக சர்க்கரை உள்ள இனிப்புப் பண்டங்கள், குளிர் பானங்கள், ஜாம்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு புற்று நோய் வாய்ப்பு தெரியவில்லையாம். பிஸ்கட்டுகள், பன்கள், இனிப்பு கேக்குகள் ஆகியவற்றை சாப்பிடுவதால் தான் புற்று நோய்க்கான ரிஸ்க் 42% அதிகமிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.     
        வாரத்திற்கு 3 முறைக்கும் மேல் பிஸ்கட்டுகள் மற்றும் கேக்குகளை உண்பவர்களுக்கு புற்றுநோய்க் கட்டி ஏற்பட வாய்ப்பு அதிகமிருப்பதாகவும் இந்த ஆய்வில் கண்டு பிடிக்கபட்டுள்ளது. இன்னும் பல ஆய்வுகள் செய்ய இருப்பதாக சொல்கிறார்கள். அந்த ஆய்வின் முடிவுகள் இந்த ஆய்வுடன் ஒத்து போச்சுனா புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லலாம். ஆகவே பெண்களே, ஆராய்ச்சி முடிவு என்னவேனாலும் இருந்திட்டு போகட்டும். எதுக்கும் பிஸ்கட், கேக்குகள் சாப்பிடுவதை கொஞ்சம் கொறச்சுக்கங்க.
     ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட் ஆய்வாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த ஆய்வில் 60,000 த்திற்கும் மேற்பட்ட பெண்களை பரிசோதனை செய்து பார்த்ததில் இந்த உண்மை தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க... "பிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து? படிங்க..."

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1