CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts


முகநூலில் போலி முகவரிகளை கண்டறியும் வழிகள், Facebook Fake ID Detective

       
        முகநூல் (facebook) என்ற சமூக இணையதளத்தில் துவங்கப்படும் பயனர் கணக்குகளில், புற்றீசல் போல போலியான முகநூல் கணக்குகளும் (fake id) நிறைய உருவாக்கபடுகிறது. சமூகத்தில் குறிப்பாக பெண்களை ஏமாற்றவும், வக்கிரமாக உரையாடவும், அனுதாபத்தை ஏற்படுத்தி பணம் பிடுங்கவும், மொத்ததுல தீய எண்ணங்களுடன் எதிர்மறை போக்கை உண்டாக்கவே போலி கணக்குகள் தொடங்கப்படுகிறது. அநேகமாக ஓட்டு மொத்த முகநூல் கணக்கில் சுமார் 20%-30% வரையான கணக்குகள் போலியானவை என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை வருகிற நாட்களில் அதிகரிக்கும் என்பது வேதனைக் குறிய விஷயம். 
மேலும் வாசிக்க... "முகநூலில் போலி முகவரிகளை கண்டறியும் வழிகள், Facebook Fake ID Detective"



பந்தி நாகரீகம் தெரியுமா?


முன் குறிப்பு:
ஒரு பதிவரின் பதிவில் கருத்துரை மட்டுறுத்தல் இருந்தும் நான் பகிர்ந்த கருத்துரைகள் அந்தப் பதிவரால் வெளியிடப்பட்டது. அப்படியிருக்கையில் கீழ்க்கண்ட கதை சற்று சுருக்கமாக அங்கே கருத்துரையில் பதிந்திருந்தேன். ஆனால் கருத்துரையில் வெளியிடப்படவில்லை. ஆபாசமாகவோ, நா கூசும் வார்த்தைகளோ, இல்லாமல் இருந்தும் வெளியிடப்படாமல், மாறாக மட்டுறுத்தல் மூலம் எனது கருத்துரை நீக்கப்பட்டது. அதற்கு அவர் கூறிய காரணம் "சைவம் சாப்பிடும் பழக்கம் கொண்ட எனக்கு இந்த சைவ/அசைவ கருத்துரையை வெளியிட விருப்பம் இல்லை" என்பதாகும். ஆகையால் எனது கருத்துரை அன்றே வெளியாகி இருந்தால் இப்போது இந்தப் பதிவுக்கு அவசியமே இருந்திருக்காது. இப்போது இந்த தகவலைக் கூற காரணம், எனது இந்தப் பதிவை ஒருவர் பதிவுலகில் அநியாயம் என்ற தலைப்பில் பதிவாக பகிர்ந்ததே காரணம். சரி, வாங்க பந்தி கதைக்கு போகலாம்.
*************
ஒரு ஊர்ல மக்கள் பெருமையாய் போற்றும்படி, காசி என்பவர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அவர் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்வதோடு, அவர்களுக்கு தமது வீட்டில், நிலத்தில் வேலையும் கொடுத்து வந்தார். அவர்களும் ஆர்வமுடன் வேலைகளை செய்து அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் கண்டு, முதலாளிக்கும் நற்பெயரை வாங்கித் தந்தார்கள். அவர்களுக்கு அடிக்கடி விருந்து வைத்து நன்முறையில் உபசரிப்பார். மக்களும் வயிறார உண்டு திருப்தியாக காசியை போற்றி புகழ்ந்து செல்வார்கள். 

மேலும் வாசிக்க... "பந்தி நாகரீகம் தெரியுமா?"



கஞ்சா, சிகரெட், மது - இதனால் அறியப்படுவது யாதெனில்!


ஒரு உண்மைச் சம்பவமே இக்கட்டுரை எழுத காரணம்.

கடந்த வருடம் என் தூரத்து உறவினர் ஒருவர் திடீரென பிரபல மருத்துவமனையில் ஐஸியூ-வில் அட்மிட் செய்யப்பட்டார். அவரது நெருங்கிய உறவினர்களால் அந்த மருத்துவமனையே நிறைந்து இருந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் சொன்ன செய்தி எங்களை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தியது.
மேலும் வாசிக்க... "கஞ்சா, சிகரெட், மது - இதனால் அறியப்படுவது யாதெனில்!"



எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?!


       நண்பர்களே, தலைப்பை பார்த்ததும் எரிச்சல் வருதா? கண்டிப்பா வரும். ஏன்னா இன்னைக்கு பேஸ்புக் ஸ்டேடஸில் அதிகமா வலம் வர்ற வரிகள் இதுவாத் தான் இருக்கும். நாம் வாழும் சில சமூக சூழ்நிலைகளை சிறு தொகுப்பாக பதிந்துள்ளேன். படித்து உங்கள் கருத்தை பகிருங்கள்.
மேலும் வாசிக்க... "எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?!"



மொய்க்கு மொய் அவசியமா?

        மொய்க்கு மொய், இது பதிவுலகத்துக்கான மொய்க்கு மொய், அதாவது பதிலுக்கு பதில் கமென்ட் போடுவது, ஓட்டு போடுவது, ஓட்டு போட்டதை தனியா ஒரு கமென்ட் போட்டு சொல்வது, என்ற வகையான மொய்க்கு மொய் பத்தி இந்த பதிவுல நான் சொல்ல வரல. நெஜமாலுமே விஷேசதுக்காக வர்ற மொய்க்கு மொய் பத்தி கொஞ்சமா சொல்ல போறேன்.
        ஒரு பங்ஷன்காக  இன்விடேஷன் ஊரெல்லாம் வைப்ப்போம். ஊரைக் கூட்டி பங்ஷன் வைக்கார்யா என நாலு பேரு நல்ல விதமா சொன்னா ஓகே தான். ஆனா இப்போ சில பங்ஷன்கள் வெறும் காசை பிடுங்கவே நடக்குது. மத்தவங்க விஷேசத்துக்கு மொய்க்கு மேல மொய் செஞ்சு சோர்ந்து போயிருப்பாங்க. பின்ன இவங்களால விசேஷமே வைக்க சான்ஸ் இருக்காது. அதனால மொய் வரவை எதிர்பாக்க முடியாது. 

          அதாவது ஒரு பையன் மட்டுமே இருக்கான்னு வைங்க, சின்ன வயசுல காது குத்து விழா மட்டுமே வைக்க முடியும். அதுல மொய் வாங்கிரலாம். அதுக்கப்புறம் அவங்க வீட்டுல அவனுக்கு கல்யாணம் வரை எந்த விசேஷமும் வைக்க முடியாது. வீடு, கீடு கட்டுனா கிரகப்பிரவேசம் வைக்கலாம். அதுவும் இன்னைக்கு இருக்குற விலை வாசியில் அதுவும் யோசிக்க வேண்டிய விஷயம் தான். 

    இதே ஒரு பொண்ணு இருக்குன்னு வைங்க, காது குத்து, பெரியவளானதுக்கு ஒரு விழா. சடங்கு, அப்புறமா கல்யாணம்ன்னு வைப்பாங்க. ஓரளவு மொய் வாங்கலாம். ஆனா, அதுவும் அந்த பொண்ணு கல்யாணத்துக்கு நகை, சீர்வரிசை சேர்க்கறதுக்கே போயிரும். கல்யாணத்துக்கும் பெருசா அமௌன்ட் எதிர்பாக்க முடியாது. ஏன்னா, முந்தின விசேஷத்துக்கு மொய் வந்ததுனால கல்யாணத்துக்கு ஓரளவு மட்டுமே எதிர்பாக்க முடியும். 
       சரி, இப்போ என்ன சொல்ல வரேன்னா இந்த மாதிரி குடும்ப விசேஷங்கள் வச்சு மொய் கனிசமா வாங்க முடியாத ஆட்கள் புதுப்புது ட்ரெண்ட் கண்டுபிடிச்சிருக்காங்க. பையனுக்கு காது குத்து விழான்னு பத்திரிகை வச்சு அழைப்பாங்க. ஆனா, பங்க்சனுக்கு போயி பார்த்தா பையனுக்கு இருபது வயசுக்கு மேல இருக்கும். காதும் குத்தியிருக்க மாட்டாங்க, அட, மொட்டை கூட போட்டிருக்க மாட்டாங்க. நாமளும் பொறுக்க முடியாம ஏங்க, காது குத்து விழான்னு சொன்னிங்க, காதே குத்தலன்னு கேட்டா, அவிங்க ஹி..ஹி... ஒரு பையன் வச்சிருக்கோம். மொய் வாங்க காது குத்து விழான்னு பத்திரிகை அடிச்சுட்டோம். வேற ஒண்ணுமில்லைங்க, நல்லா சாப்பிட்டு மொய் செஞ்சுட்டு போயிருங்கன்னு சொல்வாங்க பாருங்க. ம்ஹும்... வேறவழி நாம மொய்க்கு மொய் வச்சுட்டு வர வேண்டியதுதான்.
        அப்புறமா ஏதாவது கோயில் பேரை போட்டு கிடா வெட்டு அழைப்புன்னே பத்திரிகை ஊர் ஊரா தருவாங்க. பத்திரிகை வச்சும் போகலைன்னா மதிப்பு இல்லையில. அதனால அங்கேயும் போயி நல்லா நான்வெஜ் சாப்டுட்டு மொய் வச்சுட்டு வர வேண்டியது தான்.
 
      போன மாசம் எனக்கு ஒரு காது குத்து விழா பத்திரிகை வந்துச்சுங்க. எப்படியும் எட்டு பக்கம் இருக்கும். பக்கத்து வீட்டுக்காங்க பேரெல்லாம் போட்டிருந்தாங்க. மாமன், மச்சான், என உறவு முறைகளில் போட முடியாத பேர்களை வரவேற்பாளர்கள் லிஸ்டில் சேர்த்திருந்தாங்க. அந்த பத்திரிக்கையில கடைசி பக்கம் ஒரு வரி போட்டிருந்தாங்க. ரொம்பவே டச்சிங் வரி அது. 
பின்குறிப்பு: 2003க்கு பின் உள்ள உங்கள் மொய் நோட்டை தயவுசெய்து பார்க்கவும்.
இதாங்க அந்த வரி. படிச்சுட்டு மிரண்டு போயிட்டேன். அந்த ஆளுங்க 2003இல் கடைசியா விசேசம் வச்சிருந்திருப்பாங்க போல. அதான் இன்னைக்கு 2012 வரை நிறைய மொய் செஞ்சு ஓஞ்சு போயி போட்ட காசை வசூல் பண்ண இப்படி யோசனை பண்ணியிருக்காங்க. அந்த காது குத்து விழாவுக்கு போயி ஏமாந்து வந்தேனுங்க. கறி சோறுன்னு நெனச்சு போனா சாம்பார் சாப்பாடு போட்டு மொய் வாங்கிட்டாங்க. அவ்வ்வ்வ்வ்....
     ஆக, இப்படி மொய் வாங்க எத்தனையோ ட்ரெண்ட்களை சொல்லிட்டே போகலாமுங்க. மக்கள் புதுசுபுதுசா யோசிச்சு பத்திரிக்கை அடிச்சு மொய் வாங்கிடுவாங்க... அதாவது மொய்க்கு மொய் வாங்கியே தீரனும்கறது மட்டுமே அவங்க குறிக்கோள்.
மேலும் வாசிக்க... "மொய்க்கு மொய் அவசியமா?"



மதிப்புமிக்க தமிழக அரசே... தமிழ்ப் பாமரனின் கடிதம்

மதிப்புமிக்க தமிழக அரசே....
         நலமா இருக்கிங்களா? நீங்க நல்லாத்தான் இருப்பீங்க, என்ன மாதிரி பாமரன்கள் ஏதோ இருக்கோம். இருந்த வேலையும் போச்சு. ஆமாங்க அரசே, உங்கள நம்பி இருந்ததுக்கு என்ன போல நிறைய பேருக்கு வேலை இல்லாம போனதுதான் மிச்சம். இரும்பு பட்டறையில வேல பார்த்துட்டு தான் இருந்தேன். ரெண்டு மூணு மணி நேரம் கரண்ட் கட் ஆனா பரவாயில்லை. நாள் முழுதும் கட் ஆச்சுனா எப்படிங்க அரசே வேலை பாக்க முடியும்? நான் வேல பாத்த கம்பெனிக்காரங்க சின்னதா தொழில் செஞ்சுட்டு இருந்தாங்க. அவங்களால கரண்ட் கட் சமாளிக்க முடியல. அங்க என்னை மாதிரி பத்து பேரு வேலை பார்த்திட்டு இருந்தோம். சம்பளம் கொடுத்து கட்டுபடியாகலைன்னு வேலையை விட்டு நிறுத்திட்டாங்க. வேற பக்கம் போயி வேல பாக்கலாம்னா அங்கேயும் அதே பிரச்னையை சொல்லி வேலை தர மறுக்குறாங்க. வேற பொழப்பு பொழைக்கலாம்னா என்னோட வறுமை தடுக்குது. 
             எம் பொண்டாட்டியும் மிசின்தறி வேலைக்கு போயிட்டு இருந்தா... அங்கயும் கரண்ட் பிரச்னையை காரணம் காட்டி அவளுக்கும் வேலை போச்சு. எப்பவுமே ஆர்டர் கம்மி, மிசின் ரிப்பேர் அதனால வேலை கம்மியா இருக்குன்னு கேட்டு பழகிப் போன எங்களுக்கு கரண்ட் இல்லை அப்படின்னு முதலாளிக சொல்றது புதுசா இருக்கு. எங்க பொழப்புக்கு எமனா கரண்ட் கட் இருக்கு. வீட்டுல பாதி நேரத்துக்கும் மேல கரண்ட் இல்லை. அத எப்படியாச்சும் சமாளிச்சுக்குவோம். ஆனா வேலை இல்லையே, எங்க போயி என் கஷ்டத்த சொல்ல. அதான் அரசுக்கு கடிதமா எழுதறேன்.
           மழை இல்லை, ஆத்துல தண்ணி வரல, அதான் கரண்ட் கட் இருக்குதுன்னு இதுநாள் வரை சொல்லிட்டு இருந்திங்க. ஆனா இப்போ அதெல்லாம் சொல்லாம கூடங்குளம் தொறக்கல, அதான் கரண்ட் கட் ஆகுதுன்னு சொல்றிங்க. என்னமோ தொறங்க. எங்கள போல இருக்கறவங்க வேலைக்கு ஒரு வழி சொல்லுங்க. 
சரிங்க அரசே, உங்கள நம்பி ஒட்டு போட்ட எங்கள எப்படியாவது வாழ வழி செய்யுங்க. இந்த கடிதம் என்னைப் போல வேலை இழந்து வாடும் அனைவரின் சார்பில் எழுதியுள்ளேன். நன்றிங்க...

இப்படிக்கு,
தமிழ்ப் பாமரன்.
மேலும் வாசிக்க... "மதிப்புமிக்க தமிழக அரசே... தமிழ்ப் பாமரனின் கடிதம்"



சமையல்காரர் - சிறுகதை

"ஹலோ... ஹலோ.... அப்பாதுரை சமையல்காரர் இருக்காரா? நான் கேசவன் பேசறேன்....."


"சார் சொல்லுங்க நான் அப்பாதுரை தான் பேசறேன்... எப்படி சார் இருக்கீங்க, தம்பிக்கு கல்யாண ஏற்பாடு ஆயிருச்சுங்களா?....."


"ஆமா துரை... கல்யாணம் ஏற்பாடாயி தேதியும் குறிச்சாச்சு... சமையலுக்கு உன் தேதி தான் வேணும்....."


"சார் எந்த தேதின்னு சொல்லுங்க... நம்ம புள்ளைக்கு நான் செய்யாம வேற யார் செய்வா? வர்ற ஞாயிறு பிரீ தானே, வீட்டுக்கே வர்றேன். பேசிக்கலாம்....."


"சரி துரை, ஞாயிறு சாயிந்திரமா வந்திரு... தம்பியும் இருப்பான். சமையல் வகைகளை பேசிறலாம்....."


(கேசவன் வீட்டில்)
"வா அப்பாதுரை, உட்காரு... வீட்டுல தங்கச்சி சவுக்கியமா? கடைசி மகளுக்கு கல்யாணம் கூடி வருதா?......"


"இல்லைங்க சார், மொத ரெண்டு மகள்களையும் கஷ்டப்பட்டு கரை ஏத்திட்டேன். கடைசி மவ ஆசைப்பட்டான்னு பீஎட் வரை படிக்க வச்சேன். அதனால மாப்பிள்ளையும் அதுக்கேத்த மாதிரி பாக்கனும்ல. வர்ற வரங்களும் பவுன் அதிகமா எதிர்பாக்கறாங்க. என்ன செய்ய?....."


"சரி துரை, கவலைப்படாத.... சீக்கிரம் ஒரு வரன் அமையும்... அந்த ஆண்டவன் இருக்கான்... நம்பிக்கையை விட்டுடாதே....."


"ஆமாங்க சார் அந்த நம்பிக்கையில தான் இருக்கேன். நான் வேலை பாக்குற ஆபீசிலும் மொத ரெண்டு பொண்ணுங்களுக்காக லோன் மேல லோன் போட்டுட்டேன். அதனால கொஞ்சம் பணக்கஷ்டம் இருக்கு. இவளும் ஒரு ஸ்கூலுக்கு வேலைக்கு போயிட்டு தான் இருக்கா... என்ன சம்பளம் தான் கம்மியா இருக்கு. சரிங்க சார் என் கதையை பேசிட்டு இருக்கோம். நம்ம தம்பி கல்யாண விஷயத்துக்கு வருவோம். சொல்லுங்க சார் என்னென்ன செய்யணும்?......"


"முதல் நாள் நிச்சயதார்த்தம், அதுல இருந்து கல்யாணம் காலை டிபன் முதல் மதியம் சாப்பாடு வரை என்னென்ன செய்யணும்னு இதுல லிஸ்ட் இருக்கு துரை, இதுக்கு மொத்த காண்ட்ராக்ட் எடுத்துக்க. எவளவு செலவு ஆகும்னு கணக்கு போட்டு சொல்லு, அட்வான்ஸா இந்த பணத்தை இப்போ வச்சுக்க......" 


(கல்யாணத்துக்கு மொத்தம் எத்தன நபர்கள் வருவார்கள் என கேட்டு அதற்கான சமையல் சாமான்களையும் குறிப்பெடுத்துக் கொண்டு இறுதி சமையல் காண்ட்ராக்ட் கூலியை சொன்னார் துரை)


"ரொம்ப சந்தோஷம் துரை, ஓரளவு ரீசனபில்லா அமௌன்ட் வந்திருக்கு. அதுக்கு தான் நீ வேணும்னு சொல்றது. நம்ம வீட்டுக்கு நீ எத்தன விஷேசங்களுக்கு சமையல் செஞ்சிருக்க, எல்லோரும் வாயார புகழ்ந்து தான் பேசுவாங்க. எல்லாமே துரை உன்னைய தான் சேரும்......"


"சார் ரொம்ப புகழாதிங்க, நீங்க, நான் கேட்ட சாமான்களை சரியா வாங்கித் தர்றிங்க. என்னையும் உங்க குடும்பத்துல ஒருத்தனா மதிச்சு நடத்தறிங்க. உங்களுக்கு என்னால முடிஞ்சா அளவு செஞ்சு தர்றேன் அவ்வளோதான்......"


(கல்யாணம் சீரும் சிறப்பாக அறுசுவையோடு முடிந்தது. கேசவன் பெருமகிழ்ச்சி அடைந்து துரை கேட்ட தொகையை விட அதிகமாகவே கொடுத்தார்)


(அப்பாதுரை வீட்டில் இரவு...)
"ஊரார் கல்யாணமெல்லாம் சீரும் சிறப்புமா நடக்குது. இந்த மனுசனும் நல்லா ஆக்கிப் போட்டுட்டு வருது. எம் பிள்ளைக்கு ஒரு கல்யாணம் கூட மாட்டிங்குதே. அப்பவே சொன்னேன், அடியே படிச்சு கிழிச்சது போதும், வரன் அமையறது கஷ்டமாயிரும்ன்னு. கேட்டியாடி....." 


"அடியே, கண்ணம்மா, ஏண்டி இப்ப இப்படி அவகிட்ட கத்திட்டு இருக்க, சொல்றத என் மூஞ்சிக்கு முன்னாடி சொல்லத்தொலை...."


"ஆமாய்யா... என் ஆத்திரம் எனக்கு, புள்ளைக்கு வர்றவனையேல்லாம் அம்புட்டு நகை வேணும், இவ்வளவு சீர் வேணும்னு வரிசையா பெரிய லிஸ்ட் சொல்றாணுக. நீ வேலை பாக்குற ஆபீசு கவர்மென்ட்னாலும் அந்த கேண்டீன் சமையல் வேலைக்கு உன் சம்பளம் அந்த காலத்துல இருந்து என்னமோ கம்மியா தான் இருக்கு. அதுல மொத ரெண்டை கரையேத்த வாங்கின லோனு போக தெனம் பொழப்பு ஓட்ட மட்டுமே காசு மிஞ்சுது. இவளும் ஸ்கூலுல வேல பார்த்துட்டு கொண்டு வர்ற காச தான் சேத்து வச்சிட்டு வர்றேன். இப்ப விக்கிற விலைவாசிக்கு இன்னும் நாம நெறைய சேக்கணும் இவ கல்யாணத்துக்கு...."


சரிடி, இந்தா பிடி, கேசவன் ஐயா வீட்டு கல்யாணத்துக்கு சமையல் பணம்... வீட்டு செலவுக்கும், மிச்சத்த சேர்த்தும் வச்சுக்க"


(இரவு அப்பாத்துரைக்கு தூக்கம் வரவே இல்லை. பொண்டாட்டி பேசிய பேச்சு திரும்ப திரும்ப அவர் காதில் ஒலித்தது. கவர்மென்ட் வேலையா இருந்தாலும் வரவு கம்மியா இருக்கே எனவும் யோசித்தார். அப்படியே தூங்கிப் போனார்)


அடுத்த நாள் வழக்கம் போல வேலைக்கு கிளம்பி சென்றார் அப்பாதுரை. அவர் அந்த ஆபிஸ் கேண்டீனில் சமைக்க ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அந்த சமையலறையில் கேஸ் வெடித்து சிதறியது, அப்பாதுரையும் தீயில் கருகினார். அங்கே இருந்தவர்கள் தீயணைப்பு வண்டிக்கு சொல்லிவிட்டு அப்பாத்துரையை ஒரு வழியாய் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அவர் குடும்பம் மொத்தமும் ஆஸ்பத்திரிக்கு வந்தது. ஒவ்வொருத்தரும் அவ்வொரு பக்கமாய் அழுத்த வண்ணம் இருந்தார்கள்.


விஷயம் கேள்விப்பட்டு கேசவன் ஓடி வந்தார். அப்பாதுரை குடும்பத்தாரிடம் பேசி விட்டு அப்பாத்துரை கிடத்தியிருந்த படுக்கைக்கு வந்தார். அப்பாத்துரைக்கு தீக்காயம் முழுதும் இருந்ததால் அவரால் யாரையும் சரியாக அடையாளம் காண முடியவில்லை. இருந்தும் தட்டுத்தடுமாறி கேசவனிடம் பேச முயற்சி செய்தார். கேசவனும் காதை அருகில் கொண்டு சென்றார். 


"ஐயா, எம் புள்ளைகள பாத்துக்கங்க. நான் செத்தா கவர்மேன்ட்டுல இருந்து இன்சூரன்ஸ் பணம், அந்த பணம், இந்தப்பணம் என எப்படியும் ரெண்டு மூணு லட்சம் வரும். அதை எப்படியாவது சீக்கிரம் வாங்கி எம்மக கல்யாணத்த நடத்தீருங்க. என்ன மன்னிச்சுக்கங்க ஐயா, சமைக்கும் போது கேஸ் லைனை பிடுங்கி விட்டுட்டேன் ஐயா"... சொல்லிக் கொண்டே அவர் குரல் விம்மி கண் மூடியது.
-முற்றும்-


(மேற்கண்ட கதையின் கரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டது. கதாபாத்திரங்களும், சம்பவங்களும் சற்றே கற்பனை கலந்தது.)

மேலும் வாசிக்க... "சமையல்காரர் - சிறுகதை"



புத்தாண்டு கொண்டாட்டங்கள் இப்படி அவசியமா? சில காரணங்கள்

நண்பர்களே, 
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் இந்த தருணத்தில் பணத்தை செலவு செய்து கொண்டாடும் புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் அவசியமில்லை என வலியுறுத்தி இந்த இடுகையில் ஐந்து காரணங்களை பகிர்ந்துள்ளேன். வாசித்து தங்கள் கருத்துகளை பகிரவும்.

1. கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் அதைச் சுற்றியுள்ள மக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் எதிர்ப்பை மீறி அரசு கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. அப்படி செயல்பாட்டுக்கு வந்தால் ஏதேனும் விபத்து ஏற்பட்டு பெரும் சேதங்கள் நடந்தால் அந்த மக்களின் நிலை என்னாவது? கூடங்குளத்தை சுற்றியுள்ள மக்கள் உயிருக்கு உத்திரவாதம் தேவை என போராடிக்கொண்டு இருக்கையில் நமக்கு புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் அவசியமா?

2. தென்னக தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணைக்கு கேரளா பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அணையில் விரிசல் மற்றும் அதிக நீர் தேக்கம் என சில பொய் காரணங்கள் கூறி, அதனால் கேரளாவின் சில மாவட்டங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் அணையை தகர்க்க முயற்சி எடுத்து வருகிறார்கள். அவர்களை எதிர்த்து ஐந்து மாவட்ட மக்களும் சேர்ந்து பெரும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். ஒரு வேளை கேரளாவுக்கு சாதகமாக சூழ்நிலை உருவானால் நமது மக்கள் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரத்துக்கு எங்கே போவார்கள்? அதன் விளைவுகள் எப்படி கடுமையானதாக இருக்கும்? சற்று சிந்தித்து பாருங்கள். அவர்கள் அங்கே தண்ணீர் கேட்டு போராடிக் கொண்டிருக்கையில் நமக்கு புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் அவசியமா?

3. தமிழகத்தில் ஐயா அவரது குடும்பத்துக்கு மட்டுமே முதல்வரா இருந்த காரணத்தினால் அவருக்கு பதிலாக அம்மாவை கொண்டு வந்து நம் தலையில் நாமளே மண்ணை வாரி போட்டுக் கொண்டோம். கடுமையான விலைவாசி உயர்வை தான் குறிப்பிடுகிறேன். நினைத்து பார்க்க முடியாத விலையேற்றத்தை தமிழக மக்கள் தலையில் சுமத்தி மக்களின் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தினார். பஸ் கட்டணம், நுகர்வோர் பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல் விலையேற்றம் என எல்லாவற்றிலும் பொருளாதார கஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் அவசியமா?

4. சாமானிய மக்களும் வாங்க முடியாத அளவுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களின் விலை உயர்வு. சாதாரண கூலித் தொழிலாளி டீ குடிக்க கூட முடியாத அளவுக்கு கடுமையான விலையேற்றம், மின்சார பாதிப்பால் அதிகரித்து வரும் தொழிற்சாலை மூடல், அதனால் தொழிலாளர்கள் வேலை இழப்பு. நாட்டின் பண வீக்கம் அதிகமாக வீங்கி வருவதால் ஏற்படும் வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிப்பு என எந்தப்பக்கம் திரும்பினாலும் மக்க்களுக்கு அடிமேல் அடி விழுந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் பணத்தால் விளையாடும் புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் அவசியமா?

5. கொண்டாட்டங்கள் நடத்தும் ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் சங்கங்களில் அதிக பணம் கொடுத்து விரும்பத்தகாத நிகழ்வுகளை வாங்கிக் கட்டிக் கொள்ளும் அவசியமும் சில நேரங்களில் வந்து விடுகிறது. இதற்கு உதாரணம், கடந்த வருடம் சென்னையில் ஒரு கேளிக்கை விடுதியில் கொண்டாட்டத்திற்கான போடப்பட்டிருந்த மேடை சரிந்து விழுந்ததில் உயிர் சேதங்கள் ஏற்பட்டதை சொல்லலாம். சிறப்பு விருந்தினர்களாக வரும் பிரபலங்களை பார்க்கும் ஆசையால் அவதிக்குள்ளாவதும், மேலும் அவர்கள் தரும் சைவ, அசைவ வகைகளை சாப்பிடவும், சுமார் ஐந்தாறு மணிநேரங்கள் தன்னை மறந்து ஆட்டம் போடவும், பணத்தை செலவழிக்க தயாராக இருக்கிறோம். அப்படிப்பட்ட செலவு மிக அவசியமா என சற்று யோசித்து பாருங்கள். அந்தப் பணத்தில் நம் குடும்பத்தாருடன் சந்தோசமாக அருமையாக கொண்டாடலாம் புத்தாண்டை. அதை விடுத்தது குடித்து கும்மாளமிடும் புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் அவசியமா?

டிஸ்கி: மேற்கண்ட பகிர்வு என் பார்வையில் பகிர்ந்துள்ளேன். அவ்வளவே.... படங்கள் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை.


மேலும் வாசிக்க... "புத்தாண்டு கொண்டாட்டங்கள் இப்படி அவசியமா? சில காரணங்கள்"



செங்கலால் ஏற்பட்ட மனிதாபிமானம்

         அவன் ஒரு பெரிய வேலையில் இருக்கும் இளைஞன். ஒரு தடவ அவன் ஊரைத் தாண்டி ஒரு ரோட்டில் காரில் போயிட்டு இருந்தான். ரோடு வெறிச்சோடி இருந்துச்சு. அப்போ திடீர்னு ஒரு செங்கல பறந்து வந்து அவன் காரில் பட்டது. பெரும் கோபத்துக்கு ஆளான அவன் காரை நிறுத்திட்டு சுத்திமுத்தி பார்த்துட்டு "யாரது" என கத்தினான்.

         "நான் தான் செங்கலை எறிந்தேன். எல்லா வண்டிகளும் நாங்க நிறுத்த சொல்லியும் நிறுத்தாம போயிட்டே இருக்கு. உங்க வண்டியை நிறுத்த எனக்கு வேற வழி தெரியல. அதான் செங்கலை எறிஞ்சேன்" என சொல்லிட்டே ஒரு சிறுவன் வந்தான்.

    "எதுக்காக வண்டிய நிறுத்தின?" என இளைஞன் கேட்டான். "என் தம்பியால் நடக்க முடியாது. அவன ஒரு சக்கர நாற்காலியில் வைத்து தள்ளி வந்தேன். அவனோ தடுமாறி விழுந்துட்டான். அவன என்னால தனியா தூக்கி உட்கார வைக்க முடியவில்லை. அதான் உங்களை உதவிக்கு கூப்பிட்டேன்" என்றான் சிறுவன்.

அப்புறம் இருவரும் சேர்ந்து அவனது தம்பியை தூக்கி சக்கர நாற்காலியில் உட்கார வைத்தார்கள். இளைஞனுக்கு நன்றி சொல்லிட்டு நாற்காலியை உருட்டிட்டு போனான் சிறுவன். அதன் பிறகு செங்கலால் அடிபட்ட தனது கார் கண்ணாடியை சரி செஞ்ச அவன் கதவில் கீறிய அடையாளத்தை மட்டும் சரி செய்யவில்லை. 

         "ஏன்?" என அவன் நண்பர்கள் கேட்டார்கள்.

         "நம் வண்டியை நிறுத்த யாராச்சும் செங்கல எடுத்து எறியிற அளவுக்கு நாம மனிதாபம் இல்லாம வண்டியில போகக் கூடாது என்பதை இந்த கீறல் எனக்கு ஞாபகப்படுத்திட்டே இருக்கும்" என சொன்னான்.

அவன் நண்பர்கள் திகைத்தார்கள்.


மேலும் வாசிக்க... "செங்கலால் ஏற்பட்ட மனிதாபிமானம்"



கோடாலியும் பிறந்தநாள் பரிசும்!

மழுங்கிய கோடாரி
         ஒரு தடவ ஒரு மரவெட்டிக்கு ஊரிலே பெரிய முதலாளி கிட்ட வேல கெடச்சது. மொத நாள் காட்டுக்கு போயி பதினெட்டு பெரிய மரங்கள வெட்டிட்டு வந்தான். அதுல ஆச்சர்யப்பட்ட மொதலாளி மரவெட்டியை ரொம்ப பாராட்டி கொஞ்சம் காசு அதிகமாவே தந்தார். ஆனா அடுத்த நாள் பதினஞ்சு மரமே வெட்டினான். அப்புறம் ஒவ்வொரு நாளும் மரத்தோட எண்ணிக்கை கொறஞ்சுகிட்டே வந்துச்சு.
      இதனால நமக்கு தான் திறமை கொறஞ்சு போச்சோன்னு மரவெட்டி ரொம்ப கவலை பட்டான். மொதலாளி திட்டுவார்ன்னு பயத்தோட அவர பாக்க போனான். அவரும் அவன் புலம்பல கேட்டு ரொம்பவே கோவப்பட்டார். அப்புறமா அந்த மொதலாளி அவன் கோடாலிய வாங்கி பார்த்தார். அப்போ தான் அவருக்கு விசயமே புரிஞ்சுச்சு. அவன் கோடாலி தீட்டாம மழுங்கி இருந்துச்சு. அத பார்த்து அவன் கிட்ட இப்படி மழுங்கி இருந்தா எப்படி மரத்தை வெட்டும்? அதை தீட்ட வேணாமா? அப்படின்னு கேட்டார். மரவெட்டி வேலை செய்யும் ஆர்வத்துல தீட்ட மறந்துட்டேன் அப்படின்னு சொன்னான். அதோட மரம் வேட்டுறதுக்கே நாள் முழுசும் போயிருது. அதனால மறந்துட்டேன்னு சொன்னான். 
நீதி: புத்திசாலித்தனம் இல்லாத கடும் உழைப்பால் பலன் குறைவே!

பிறந்தநாள் பரிசு
       அப்பா... அப்பா... என ரொம்ப நேரமா கூப்பிடுட்டே இருந்தாள் மகள். வேலையில் இருந்த அப்பா எரிச்சலில் என்ன? என மகள் பக்கம் திரும்பினார். நாளைக்கு உங்களுக்கு பர்த் டே வருதுல... அதான் உங்களுக்கு ஒரு பரிசு தர போறேன் அப்படின்னு ஒரு பெட்டிய நீட்டினாள். அவளது பிஞ்சு கைகளால் தங்க பேப்பர் சுத்தி அந்த பேட்டி அழகாக இருந்துச்சு.
       பெட்டிய திறந்து பார்த்த அப்பாவுக்கு ரொம்ப கோவம் வந்துச்சு. பேட்டி காலியா இருக்கே, யாருக்காவது பரிசு தரும் போது பெட்டிக்குள்ள ஏதாவது வச்சு தரணும்னு உனக்கு தெரியாதா? என மகளை திட்டினார். இல்லைப்பா, உங்களுக்கு பரிசா பெட்டி புல்லா நூறு முத்தம் வச்சிருந்தேன், அப்பா என்றாள் மகள். பதிலைக் கேட்டு மனம் மகிழ்ந்து மகளின் பரிசை அன்போடு ஏற்றுக் கொண்டார்.
நீதி: கண்களுக்குத் தெரியாத பலவும் விலைமதிப்பற்றதாகவே இருக்கும்!

இன்றைய பொன்மொழி:
புலன்களின் ஆளுகையால் வாழ்கிறவன் துன்பத்தில் சிக்குண்டு அழிவான்!

இன்றைய விடுகதை:
தம்பிக்கு எட்டுவது அண்ணனுக்கு எட்டாது. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
    விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (admin@tamilvaasi.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
    மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.
முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: கரும்பு.
மேலும் வாசிக்க... "கோடாலியும் பிறந்தநாள் பரிசும்!"



லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு

            லஞ்சம் தரனும்னா என்னென்ன தரலாம். பணம், நகைகள், அல்லது கிப்ட் பொருட்கள் அப்படின்னு நிறைய இருக்கு. ஆனா உத்திரபிரதேசம் லக்னோல இருக்குற ஒரு கிராமத்து விவசாயிகள் கிட்ட லஞ்சம் கேட்ட அரசு அபீசர்களுக்கு வித்தியாசமான முறையில லஞ்சம் கொடுத்திருக்காங்க அந்த விவசாயிகள். அந்த விவசாயிகள் லஞ்சம் கேட்ட அதிகாரிகளிடம் ரெண்டு மூணு சாக்கு பைகள் கொடுத்திருக்காங்க. அந்த அதிகாரிகளும் ஆசையா பிரிச்சு பார்த்து ஷாக் ஆயிட்டாங்க. பணத்துக்கு பதிலா விஷமுள்ள பாம்புகள் இருந்துச்சாம் அதுல. உடனே அதிகாரிகள் பையை கீழே போட்டுட்டு அங்க இங்க ஓடினாங்க. ஒரு சிலர் அந்த பாம்புகளை விரட்ட ஏதேதோ செய்திட்டு இருந்தாங்க. அவங்க அளப்பறையை இங்கே வீடியோவா பகிர்ந்திருகேன். பாருங்க. லஞ்சம் கேட்ட அதிகாரிகள் வட்டமிட்டு காட்டப்பட்டு உள்ளார்கள்.
    இந்த செய்தியை ரெண்டு மூணு நாள்களுக்கு முன் புதியதலைமுறை செய்தி சேனலில் செய்தியாக பகிர்ந்தார்கள். அப்போது ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
இனியும் இவர்களால் லஞ்சம் கேட்க முடியுமா? அப்படி கேட்டால் பாம்பு போல இன்னும் நிறைய தர விவசாயிகள் ரெடி...
நன்றி: புதியதலைமுறை

இன்றைய பொன்மொழி:
பசு மாடு கறுப்புன்னா பாலும் கறுப்பா இருக்குமா?

இன்றைய விடுகதை:
யாரும் இறங்காத கிணற்றிலே
அரிச்சந்திரன் இயங்குகிறான். அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
         மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.

முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: சிலந்திவலை
மேலும் வாசிக்க... "லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு"



சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்! விழிப்புணர்வு தேவை


ரோட்டோர கடைகளில் (அங்கு மட்டுமா?) சில்லி சிக்கன், சிக்கன் 65  போன்ற சிக்கன் வகையறாக்களை சாப்பிடுபவரா நீங்கள். அந்த மாதிரியான கடைகளில் என்னென்ன வகைகளில் கலப்படம் செய்கிறார்கள் என தெரியுமா? பழைய எண்ணையை உபயோகிப்பார்கள், அல்லது மசாலாக்களில் கலப்படம் இருக்கலாம் என நினைக்கலாம், நீங்கள் நினைப்பது சரி தான் ஆனால் சிக்கனிலேயே கலப்படம் செய்கிறார்கள். என்ன, செத்த கோழியை யூஸ் பண்ணியிருப்பாங்க என சொல்றிங்களா? அப்படி இருந்தா தான் பரவாயில்லையே.  


       சிக்கனுக்கு பதிலாக என்ன உயிரினம் கலப்படம் செய்யப்படுகிறது என உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் நீங்கள் சிக்கன் சாப்பிடுவதையே நிறுத்தி விடுவீர்கள். சிக்கனுக்கு பதிலா எலிக்கறி கலப்படமாக சேர்க்கப்படுகிறது. என்ன நண்பர்களே, அதிர்ச்சியா இருக்கா? ஆமாம், எலிக்கறி தான் சேர்க்கப்படுகிறது. 

   எப்படி எலி கிடைக்கிறது?
    மளிகை கடைகள் இருக்கும் மார்க்கெட்டில் எலிகள் அதிகமா இருக்கும். சாக்கு மூட்டைகளுக்கு இடையில், டின்களுக்கு இடையில், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். கடைக்காரர்கள் அந்த எலிகளை பிடிப்பதில் அவ்வளவா ஆர்வம காட்டுவது கிடையாது. அப்புறம் யார் பிடிக்கராங்கன்னு கேட்கறிங்களா? சில்லி சிக்கன் விக்கிற ஆளுங்க பிடிக்கறாங்க. காலையில அஞ்சு மணிக்கெல்லாம் மார்க்கெட்டுக்கு போயிருவாங்க, ஏற்கனவே எலிகளை பிடிக்க பொறிகளை மொத நாளே வச்சிருப்பாங்க. அரிசி பருப்பை தின்னு நல்லா கொழுகொழுன்னு எலிகள் அந்த பொறிகளில் மாட்டி இருக்கும். கடைக்காரங்களுக்கு எலித்தொல்லை இல்லாம இருந்தா போதும்னு சந்தோசப்படுவாங்க. 

சிக்கனுக்கும், எலிக்கும் என்ன வித்தியாசம்:
வெந்த சிக்கனை பிச்சு பாருங்க, வெளுமையா இருக்கும், நார் போல நீள நீளமா இருக்கும். ஆனா எலிக்கறியை பிச்சு பார்த்தா கொஞ்சம் பழுப்பு நிறமா இருக்கும். சதையும் சிக்கனை போல சற்று நார் நாராக இல்லாமல் நல்ல மிருதுவாக கட்டி கட்டியா இருக்கும். கொஞ்சம் கவனமா பார்த்தா வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்.

என்ன நண்பர்களே! கடைசியா நீங்க ரோட்டோர கடைகளில் சாப்பிட்டது சிக்கனா? எலியா? யோசிங்க...

டிஸ்கி: இந்த செய்தி திண்டுக்கல்லில் நடந்த உண்மை சம்பவம்.
மீள்பதிவு.
பொன்மொழி, விடுகதை அடுத்த இடுகையில்...

மேலும் வாசிக்க... "சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்! விழிப்புணர்வு தேவை"



ஐயோ, அத பத்தி அது, இதுன்னு ஒளறிட்டேனா?

எச்சரிக்கை:
      இத பத்தி அது, இதுன்னு என்னமோ ஒளறி கொட்டியிருக்கேன். படிச்சா கண்டிப்பா அது வரும். அதனால படிக்கணுமான்னு கொஞ்சம் யோசனை பண்ணிக்கங்க. சரி, படிச்சதுக்கு அப்புறம் அது வந்துச்சுன்னா அதுக்கு நீங்க தான் பொறுப்பு. ஆமா சொல்லிப்புட்டேன்.

     "இத" யாரு கண்டுபிடிச்சா? "இத' வச்சு எத்தன பேரு பொழப்ப ஓட்டிட்டு இருக்காங்க. இதனால அது, இதுன்னு எவ்வளவோ தேவையில்லாம செலவும் ஆகுது. அதுவும் அதுக்கு இது இல்லையினா அது யாருக்கும் தெரியாது. அப்படி யாருக்காச்சும் அது தெரிஞ்சிருச்சுனா அதை விட மாட்டாங்க. அது பின்னாடியே போவாங்க. அப்படியே அதுக்கு இதுவும் போடணும், அதுவும் போடணும். ஏன்னா அது இல்லையினா அதுல தெரியாது. அப்படியே தெரிஞ்சாலும் அதுல முன்னாடி வராது. அப்படி முன்னாடி வரணும்னா அது நிறைய வேணும். அப்படியே முன்னாடி வந்தாலும், அதனால வந்துச்சா இல்ல இதனால வந்துச்சான்னு ஆராய்ச்சி செய்ய அது இதுன்னு நிறைய மொளச்சிரும். அப்படி அது, இதுன்னு மொளச்சதுக்கு  அது வெடிக்கிற மாதிரி வெடிக்க மட்டுமே தெரியும். ஆனா அது கசக்கும்னு அதுக்கு தெரிஞ்சாலும் கண்டுக்காது. குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும் அதோட கசப்பு பிடிக்கும்.  நிறைய பேருக்கு அது பிடிக்காம போகும். அப்படியே அத பாத்தாலும் அதை ஒதுக்கி தூக்கி போட்ருவாங்க. அப்படி தூக்கி போடறது ஏன் மொளைக்கணும்? மொளைக்காம இருக்கலாமேன்னு நாம நெனச்சாலும் அதுக்குன்னு ஒரு இது இருக்றதுனால அது வருது. அதோட இதை அடக்கணும்னா அதை கண்டுக்காம இருக்கணும். அது ஆரம்பத்துல ஓரளவு சரியாத்தான் இருக்கும்னு தோணும். ஆனா அது சொல்றத நாம நல்லா ஆராய்ஞ்சு பார்த்தோம்னா அதுல அப்படி ஒன்னும் இல்லை. அது அதோட விதிப்படி சரியாத்தான் இருக்குன்னு நமக்கு தெரியவரும். அப்படியும் அது அதிகமா வெடிச்சா அதுல கருகிப் போயிரும். அப்ப அதை யாருமே விரும்ப மாட்டாங்க. 
     என்னங்க, எச்சரிக்கையை மீறி படிச்சிங்களா? ஒண்ணுமே புரியலைன்னு ரெண்டு மூணு தடவ வேற படிச்சிங்களா? அப்ப அது கன்பார்ம், ஹி.... ஹி....


இன்றைய பொன்மொழி:
கவலையற்ற எதிர்காலத்திற்கு கல்வியே நிகழ்காலம்

இன்றைய விடுகதை:
ஒலைப்பூ நிறத்தாள்
ஓர் அடி வளர்த்தாள்
கோட்டையேறிப் பார்த்தாள்
குத்துப்பட்டுச் செத்தாள். அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
         மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.

முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: நுங்கு
முந்தைய விடுகதைக்கான இடுகை கீழே: 
மேலும் வாசிக்க... "ஐயோ, அத பத்தி அது, இதுன்னு ஒளறிட்டேனா?"



மாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும், ரெண்டு டாஸ்மாக் கடைகளும்?!!!

        மதுரையில மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டு ரொம்ப பேமசு. சென்னை, நெய்வேலி, இன்னும் பல வட மாவட்டத்துக்கும், நெல்லை, கன்னியாகுமரி என இன்னும் பல தெக்கு மாவட்டத்துக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் இங்கிருந்து மதுரையின் எல்லா பகுதிகளுக்கும் டவுன்பஸ்களும் இயக்கப்படுகிறது. அதனால எந்த நேரமும் பிஸியா இருக்கும்.  

    இந்த பஸ் ஸ்டாண்டு ஆரம்பிக்ரதுக்கு முன்னாடி வெறும் குப்பை மேடு தான்.... அப்புறமா இடங்களை வளைச்சு போட்டு பஸ் ஸ்டாண்டு கட்டி, ISO 9001 சான்றிதழ் வேற வாங்கியாச்சு. பஸ் ஸ்டாண்டு வந்ததுக்கு அப்புறம் அதை சுத்தி உள்ள இடங்களின் விலை மலையென ஏறி விட்டது. ஆமாங்க, ஒரு சென்ட் ரேட் எவ்வளவு தெரியுமா? சுமார் இருபது லட்சம் வரை விலை போகுது. எடத்தை பத்தி நாம ஏன் பேசிக்கிட்டு? அதெல்லாம் பண முதலாளிகள் பேசுற பேச்சு. இப்ப நம்மளுக்கு அந்த டாபிக் வேண்டாம். நாம பஸ் ஸ்டாண்டுக்கு வருவோம்.
      பஸ் ஸ்டாண்டுக்கு மொத்தம் மூணு வழிகள் இருக்கு. ஒண்ணு பஸ் உள்ள போற வழி. இன்னொன்னு பஸ் வெளியே போற வழி. இன்னொன்னு நடுவுல அழகா ரவுண்டா பயணிகள் போயிட்டு வர்ற மாதிரி இருக்கு. எப்பவுமே பரபரப்பா இயங்கிக்கிட்டு இருக்கும். பஸ் ஸ்டாண்ட சுத்தி காம்பௌண்ட் சுவர் கட்டியிருக்காங்க. அங்கிட்டு வெறும் குப்பை மேடு தாங்க. ஏதோ, இப்ப ஒரு வருஷ காலமா குப்ப நாத்தம் அடிக்கிறது இல்லை. எப்படியோ சுத்தம் பண்ணிட்டாங்க.. ஆனா அதுக்கு பதிலா பஸ் ஸ்டாண்டு கட்டுன காலத்துல இருந்து ஒரே ஒரு நாத்தம் மட்டும் மாறவே இல்லை. கரக்ட் நீங்க நெனச்சது, வேறென்ன நாத்தமா இருந்துர போகுது? எல்லாம் மூச்சா நாத்தம் தான். 
     நம்ம அஞ்சா நெஞ்சன் பஸ் ஸ்டாண்ட சுத்தி சுத்தமான டாய்லெட் கட்டி விட்டிருக்காரு. நம்மாளுக அதை யூஸ் பண்ண மாட்டாங்க. திறந்த வெளி தான். குடலை புரட்டும் அந்த நாத்தத்தில், நம்மாளுக அந்த நாத்தமே பிடிக்காத மாதிரி மூக்கை பொத்திட்டு அதே இடத்துல போய் மூச்சா அடிப்பானுக பாருங்க, அவிங்க மேல கோவம் கோவமா வரும். அவன் நிக்ரதுக்கு கூட அங்க இடம் இருக்காது, ஒரே ஈரமா இருக்கும்.  இந்த நாத்தத்துக்கு மத்தில பூக்கடை, பழக்கடை, பங் கடை, டீக்கடை ன்னு நம்மாளுக மொச்சிக்கிட்டு இருப்பாங்க. அதென்னமோ தெரியலைங்க, இங்க இருக்கற பூக்கடையில நூறு எண்ணிக்கை மல்லிகை பூ எப்பவுமே அஞ்சு ரூவா தாங்க. விலை கூடவே கூடாது. 

     டவுன் பஸ் நிக்கற இடத்துக்கு பக்கத்துல தமிழ்நாடு தேயிலை கழகம் நடத்துற டீக்கடை இருக்கு. ஏதோ, டான் டீ ன்னு போடறான்.  டீ நல்லா டேஸ்டா இருக்கும்.  இங்க ஒரு லிட்டர் மினரல் வாட்டர் ரெண்டு ரூபாய்க்கு விக்கிறாங்க. பிளாட்பாரத்துல நிக்க கூட இடம் இல்லாம கடைகளா இருக்கும். கடைய கட்டடத்துக்கு உள்ள வைங்கன்னா வெளில வச்சிருக்காங்க. மக்கள் நடந்து போனா டீயோ, வடையோ சாப்பிடுறவங்களை தட்டி விடாம போக முடியாது. அவ்வளவு ஆக்கிரமிச்சு இருப்பாங்க. நைட் நேரத்துல திடீர்னு டிபன் கடைகள் பிளாட்பாரத்தில் முளச்சிடும். உட்கார நல்ல டேபிள் சேர் கூட இருக்காது. அவிங்க சொல்றது தான் ரேட்டு. பஸ்கள் விடுற புகை, மற்றும் எல்லா தூசியும் அந்த நைட் நேரத்துல டிபன் மேல விழுகரது நம்ம கண்ணுக்கு தெரியவே தெரியாது. சாம்பாருன்னு பேருல ஊத்துவாங்க பாருங்க கடலை மாவு தண்ணிய, அய்யோ சாப்பிட சகிக்காது. அவிங்க விக்கற கூல்ரிங்க்ஸ், வாட்டர், பிஸ்கட் போன்ற எல்லா பொருட்களின் விலையும் எம் அர் பி ரேட்டை விட ரெண்டு ரூவா அதிகமா தான் இருக்கும். அவிங்க கிட்ட நியாயம் பேசினோம் வச்சுக்கங்க, நம்மள அநியாயமா காதுல கேட்க கூடாத வார்த்தையெல்லாம் சொல்லி திட்டுவாங்க. 
        என்னடா, தலைப்புல ரெண்டு டாஸ்மாக் கடைன்னு போட்டுட்டு அத பத்தி ஒண்ணுமே சொல்லலைன்னு நீங்க கத்தறது என் காதுல விழுது. இப்ப உங்கள அங்க தான் கூட்டிட்டு போறேன்.

        மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுக்கு ரெண்டு பக்கமும் டாஸ்மாக் கடைகள் இருக்கு, பஸ் வெளியேற பக்கமா, பூ மார்கெட் எதுத்த மாதிரி ஒரு கடை. பஸ் உள்ளே போற பக்கமா, வரவேற்பு ஆர்ச் பக்கத்துல ஒரு கடை. ரெண்டு கடையும் காலையில இருந்து இரவு வரை செம கூட்டமா இருக்கும். பஸ் பயணிகள், டிரைவர், கண்டக்டர் கூட்டமா இருக்கும். பூ மார்க்கெட் பக்கத்துல பார் அளவு சின்னது. நைட் நேரத்துல பார்ல இடம் இல்லாம வெளியில நின்னு தண்ணி அடிப்பாங்க. எல்லோர் கையிலும் பெரிய பை ஒண்ணு தொங்கிக்கிட்டு இருக்கும். ஆமாங்க, எல்லோருமே பயணிகள் தான். நாமெல்லாம் ஊருக்கு சீக்கிரமா போக முடியுமான்னு பார்ப்போம். ஆனா அவிங்க நல்லா மப்பு போட்டுட்டு ஊருக்கு போவாங்க. 
      அடுத்ததா ஆர்ச் பக்கத்துல இருக்குற கடையில் பார் ரொம்ப பெரிசு. சரக்கு வாங்கிட்டு நம்மாளுக உள்ளே போனாங்கனா நல்லா மப்பு ஏத்திட்டு தான் வருவாங்க. எந்த நேரமும் கூட்டம் களை கட்டி இருக்கும். பார்ல ஸ்நாக்ஸ் ரேட் அதிகமா இருக்ரதுனால நம்மாளுக சரக்கை மட்டும் வாங்கிக்கிட்டு அந்த ஆர்ச் மறைவில நின்னுட்டு குடிப்பாங்க. கடைக்கு முன்னாடி சின்ன சின்ன தள்ளு வண்டியில பிரியாணி, சிக்கன், மட்டன் விப்பாங்க. அந்த கடைகளும் நல்லா கூட்டமா இருக்கும்.இப்போ ஏதோ பிரச்சினையில அந்த கடை இடம் மாறிருச்சு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி. மாட்டுதாவனில இருந்து சர்வேயர் காலனி போற வழில ஒரு சுடு காடு இருக்கு. அதுக்கு பக்கத்துல மாத்திட்டாங்க. சுடு காட்டுக்கும், கடைக்கும் சுமாரா நூறு அடி தூரம் தான் இருக்கும்.  சைட் டிஷ்சா பொன வாடைய பிடிச்சுக்கிட்டு தண்ணியடிக்க வேண்டியது தான். இன்னும் இங்க கடைக்கு பக்கத்துல தள்ளு வண்டி உணவு கடைகள் முளைக்கல. சீக்கரமா வந்துடும்னு நம்பிக்கையில தண்ணி அடிச்சுட்டு இருக்காங்க. சரிங்க இதோட உங்கள அறுக்ரத முடிச்சுக்கறேன். 

டிஸ்கி: 
       நான் தினந்தோறும் வேலைக்கு சென்று வரும் போது இவைகளை பார்த்து வருவதன் பாதிப்பே மாட்டு தாவணி பஸ் ஸ்டாண்டு பற்றியும், டாஸ்மாக் கடைகளை பற்றியும் இந்த பதிவு எழுதுவதற்கான காரணம். அவ்வளவே!


இந்த பதிவுக்கும் தீபாவளிக்கும் சம்பந்தம் இல்லிங்கோ....
மீள்பதிவு



மேலும் வாசிக்க... "மாட்டுத்தாவணி பஸ் ஸ்டான்டும், ரெண்டு டாஸ்மாக் கடைகளும்?!!!"



பொருட்காட்சியில் வீட்டு சாமான்கள் வாங்கலாமா?

டிஸ்கி: 
வீட்டு உபயோக பொருட்காட்சின்னு ஊர் ஊருக்கு போடறாங்களே, அங்க நடக்கற வியாபாரம் பத்திதான் சொல்றேன்.

     "ஐயாமாரே... அம்மாமாரே... அண்ணமாரே... அக்காமாரே... தங்கச்சிமாரே.... எல்லோரும் இங்க ஓடி வாங்க... இத வாங்குனா அது பிரீ, அது வாங்கினா இது பிரீன்னு கூவி கூவி கூப்பிடுவாங்க. அத கேட்டு ஒரு ஸ்டால் பக்கமா ஒதுங்கிட்டோம்னு வைங்க? இங்க ஒங்க எல்லாத்துக்கும் இலவசமா ஒண்ணு தர போறோம். ஆனா அதுக்கு முன்னாடி இத பாருங்க... எப்பிடி வேலை செய்யுதுன்னு.... நீங்க உருட்டி நடுவுல வச்சா போதும், தேய்க்க வேணாம், வட்டமா வரலையினு கவலைப்பட வேணாம். நீங்க எதிர்பாக்கிற மாதிரி வட்டமா புசுபுசுன்னு சூடா ஆவி பறக்க வரும்".  இப்படி சொல்லித்தான் சப்பாத்தி மேக்கர் விப்பாங்க. இப்பவே புக் பண்ணினா டிஸ்கவுண்ட் இருக்கு. இன்னைக்கு மட்டும் தான் இந்த ஆபர். உங்க வீட்டு அட்ரெஸ் கொடுத்திட்டு போங்க. உங்க வீட்டுக்கு வந்து உங்க சப்பாத்தி மாவிலேயே செஞ்சு காட்டறோம், உங்களுக்கு பிடிச்சிருந்தா வாங்கிக்கங்கனு" சொல்வாங்க. இப்படி ஆச வார்த்தைகள் சொல்லி நம்மள எப்படியாவது வாங்கற நெலமைக்கு கொண்டு வந்திருவாங்க. கொஞ்சம் ஏமாந்தாலும் நம்ம காசு அங்கேயே அம்பேல் தான். சுதாரிச்சோம்னா காச பத்திரப்படுதிக்கலாம். அப்புறம் இலவசமா என்ன தருவாங்கனு கேட்கறிங்களா? வேறேன்னா, அவங்க சுட்ட சப்பாத்தி கொஞ்சூண்டு பிச்சு கொடுப்பாங்க. நாம வாயில வச்சதும் மறுபடியும் கேன்வாஸ் பண்ண ஆரம்பிச்சிருவாங்க. அந்த பொருளை நான் வாங்க வேணாம்னு சொல்லல. நாம இந்த பொருள் தான் வாங்கனும்னு திட்டமிட்டு இருந்தோம்னா, அந்த பொருளை பற்றி ஓரளவு முன்கூட்டியே விசாரிச்சு வச்சிருப்போம். அப்போ நமக்குள்ள ஒரு ஐடியா வந்திருக்கும். எந்த கம்பெனி வாங்கினா நல்லா இருக்கும்? விலைகளையும் விசாரிச்சு ஒரு முடிவுக்கு வந்திருப்போம். 

       அப்புறம் மசாலா பொருட்கள் விக்கிற இடத்துக்கு போனா, ஒரு டப்பால நாலஞ்சு மசாலா பாக்கெட்கள் போட்டு வச்சுட்டு நூறு ரூபான்னு விப்பாங்க. அதுமட்டும் இல்லாம, ரெண்டு வெரைட்டி வாங்கினா இவ்ளோ டிஸ்கவுண்ட், அவ்ளோ டிஸ்கவுண்ட் அப்படின்னு சொல்வாங்க. அந்த பாக்கெட்களை பார்த்தா ரெகுலரா கடையில் விக்கிற பாக்கெட் மாதிரியே இருக்காது. பொருட்காட்சி இடத்துல விக்கிறதுக்குனே பாக்கெட் பண்ணுன மாதிரி இருக்கும். அதில்லாம அந்த பிராண்டில் நமக்கு அறிமுகமில்லாத பொருட்களும் இருக்கும். உதாரணமா, நமக்கு அறிமுகமான மஞ்சள் தூள், சாம்பார் பொடி போன்ற மசாலா பொடிகளுக்கு மத்தியில் ஊறுகாய், பருப்பு வகைகளும் இருக்கும். இந்த பொருட்களை வெளிச்சந்தையில் பார்க்கவே முடியாது. 
       இந்த மாதிரி நிறைய வீட்டு உபயோக பொருட்கள் பொருட்காட்சியில் ஸ்டால் போட்டு விப்பாங்க. ஸ்டால் கடைகளை டெமோவாக பயன்படுத்தலாம். அவர்களுக்கு விற்பனையை விட விளம்பரமே முக்கிய நோக்கம் ஆகும்.  நாம அங்க வாங்காம வெளிக் கடைகளில் நம்பிக்கையுடன் வாங்கலாம். பொருட்களும் தரமா இருக்கும். பல மாடல்கள் பார்த்து செலக்ட் பண்ணலாம். கடைகளில் நேரடியாக வாங்குவதால் பொருட்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் ஈசியாக மாற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. நண்பர்களே, இங்கே நான் பகிர்ந்திருப்பது என் தனிப்பட்ட கருத்தே.....
மேலும் வாசிக்க... "பொருட்காட்சியில் வீட்டு சாமான்கள் வாங்கலாமா?"



வாழ்க்கை உயர்வது எப்போது?


         ஒருவரைப் பற்றி கடுஞ் சொற்கள் பேசுவதற்கு முன் பேசவே முடியாத ஒரு மனிதரை நினைத்து பாருங்கள்.

  உணவின் தரம் பற்றி புகார் தெரிவிப்பதற்கு முன் உணவே கிடைகாதவர்களை பற்றி நினைத்துப் பாருங்கள்.

        நமது வாழ்க்கைத் துணை பற்றி புகார் அல்லது கோபம் கொள்ளும் முன் துணையே இல்லாத மனிதர்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்.

      நம் வாழ்க்கை இப்படி ஆனதே என்று புலம்பும் முன் வாழ்க்கையே மறுக்கப்பட்டவர்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்.

       எப்பொழுதும் குழந்தைகள் பற்றிக் கடிந்து பேசும் போது குழந்தைப்பேறு இல்லாதவர்கள் பற்றி நினைத்துப் பாருங்கள்.

   சுத்தமாக வீடு இல்லையே என்று அலுத்துக் கொள்ளும் முன் சாலையோரத்தில் வாழும் மனிதர்களை நினைத்துப் பாருங்கள்.

    சீராக வாகனத்தை ஓட்ட முடியவில்லையே எனப் புலம்பும் முன் பெரும்பாலும் நாள் தோறும நடந்தே செல்பவர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

      நமது பணி பற்றி பிறர குறையோ குற்றமோ சொல்லிப் புலம்புவதற்க்கு முன் பணி கிடைக்காமல் அவதிப்படுபவர்களை நினைத்துப் பாருங்கள்.

       இப்படி ஒவ்வொருவரும் தன்னைத் தானே ஒரு தராசில் நிறுத்திப் பார்த்து எது நல்லது என பகுத்துப் பார்த்தால் நாம் வாழ்வில் உயரலாம்.
இதையே வள்ளுவர் சொல்கிறார்,
"ஏதிலார் குற்றம்போல் தன் குற்றம் கான்கிற்பின் தீதுண்டோ மண்ணும் உயிர்க்கு".
மேலும் வாசிக்க... "வாழ்க்கை உயர்வது எப்போது?"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1