பரோபகாரம் இரு வகைகளில் புனிதமடைகிறது. கொடை கொடுப்பவரும், கொடை பெறுபவரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்'' என்பது ஷேக்ஸ்பியரின் பொன் வரிகள். ஆனால், விதிகளை மீறுவதற்கு லஞ்சமாகப் பணம் கைமாறுவதில் கொடுப்பவரும், பெறுபவரும் சாபத்துக்கு உள்ளாகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
தேர்தல் களத்தில் பணபலத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தேர்தல் ஆணையம் எவ்வளவோ முயற்சிகளை எடுத்து வருகிறது. காவல்துறை, வருவாய்த்துறை, வருமான வரித்துறை போன்ற பல துறைகள் தேர்தல் ஆணையத்தோடு இணைந்து செயல்பட்டால்தான் பண ஆதிக்கத்தை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
ஓட்டு விற்பனைச் சந்தையில் பணம் கொடுப்பவரும், பணம் பெறும் ஏழை மக்களும் சந்தோஷமாகப் பரிமாற்றம் செய்கையில் நாம் ஏன் தலையிட வேண்டும்? தலையிடத்தான் முடியுமா? அது சாத்தியமா என்ற எண்ணம் சாதாரணப் பணியாளர்களிடம் மட்டுமன்றி மேற்பார்வையிடும் காவல்துறை அதிகாரிகளிடமும் இருப்பது வேதனை அளிப்பதாகும். இது சட்டப்படி பிடிக்க முடியாத குற்றம்.
காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாது என்று வாதம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இதை அறிவின்மை என்று எடுத்துக்கொள்வதா, அசட்டையான அணுகுமுறை என்பதா, தனது இயலாமையை நியாயப்படுத்தும் போக்கு என்பதா அல்லது இத்தகைய முயற்சிகளுக்குச் சட்டத்தை அமல்படுத்துபவர்கள் கண்டும்காணாது இணங்கியுள்ளார்கள் என்பதா? கிரமப்படி தேர்தல் நடத்துவது ஜனநாயகத்தின் அடித்தளம்.
அரசியல் சாசனத்தில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாகப் பாரபட்சமின்றிச் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆண், பெண், உயர்ந்தவர், தாழ்ந்தவர், வசதி படைத்தவர், ஏழை என எந்தப் பாகுபாடுமின்றி எல்லா குடிமக்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது. முற்போக்கு ஜனநாயக நாடான அமெரிக்காவிலேயே பூரண வாக்குரிமை, சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் வழங்கப்பட்டது.
புராணங்களில் எந்த யுக்தியும் பலிக்காத நேரத்தில் போர்வீரர்கள் இறுதியாக உபயோகிக்கக்கூடிய ஆயுதம் பிரம்மாஸ்திரம் என்று விவரிக்கப்பட்டிருப்பதைப் படித்திருக்கிறோம். வாக்குரிமை என்பது அத்தகைய சக்தி வாய்ந்த ஆயுதம். வேறு வழியின்றி கடைசியாகப் பிரயோகிக்கும் ஆயுதம் மட்டுமல்ல இது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது எப்போது தேர்தல் அறிவிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் பிரயோகிக்கவல்ல சக்தி வாய்ந்த அம்பு. நல்லவர்களையும், வல்லவர்களையும் ஆட்சிபீடத்தில் அமர்த்தவல்ல சக்தி படைத்தது.
வாக்குரிமை என்ற அதீத சக்தியை, விற்பனைக்குரிய பொருளாக, விகாரப்படுத்துவது நம் எல்லோருக்கும் தலைக்குனிவு. முன்னாள் தேர்தல் ஆணையர், தேர்தல் முறைகேடுகள் அதிகம் நிகழும் மாநிலம் தமிழகம் என்று கூறியிருப்பது தேர்தல் நடத்தும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளைச் சிந்திக்க வைக்க வேண்டும். தேர்தல் நடத்துவது ஏதோ மற்றுமோர் அரசுப் பணி என்று எடுத்துக் கொள்ள முடியாது.
தேர்தல் விதிகள் இருக்கின்றன. அதில் செய்ய வேண்டியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தில் தேர்தல் முறைகேடுகள், ஊழல்கள் தெளிவாக 123-வது பிரிவில், வேட்பாளர்களுக்கு வாக்களிக்க லஞ்சப் பணம் கொடுப்பது, வாக்காளரை வேறுவகையில் வயப்படுத்துவது தேர்தல் குற்றங்கள் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆயினும், வாக்குகளைப் பெற பணமும் பொருளும் பட்டுவாடா செய்யப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருக்கின்றன.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய மாதிரி நன்னடத்தை தொகுப்பில் தவிர்க்கப்படவேண்டிய ஊழல்கள் என்ன என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், வாக்காளர்களை மிரட்டுதல், ஆள்மாறாட்டம் செய்தல், வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்காளர்களுடைய ஆதரவைக் கோருதல், வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தோடு முடிகிற 48 மணிநேர காலஅளவில் பொதுக்கூட்டங்களை நடத்துதல், வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்குப் போய்வர போக்குவரத்து வசதி செய்து கொடுத்தல் போன்ற தேர்தல் சட்டத்தின்கீழ் ஊழல்கள், குற்றங்கள் என அமைகிற எல்லாச் செயல்களையும் அனைத்துக் கட்சிகளும், வேட்பாளர்களும் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.
தலைமைத் தேர்தல் ஆணையராக சேஷன் பொறுப்பேற்ற உடன் தேர்தல் விதிகள் முறையாகவும், கடுமையாகவும் அமல்படுத்த வேண்டும் என்று எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையின் பலனாக, தேர்தல் ஆணையம் வலுவடைந்தது. அரசியல் கட்சியினரும் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற நிர்பந்தத்துக்கு ஆளாயினர்.
தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படும் முறை 1990-ல் இருந்து கடைப்பிடிக்கப்பட்டது. அதிலும் தேர்தலின்போது வேட்பாளர் செலவு செய்வதைக் கண்காணிக்கப் பிரத்யேகமாக மத்திய வருவாய்த்துறை மற்றும் வருமானவரி துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கையால் பல வரவேற்கத்தக்க மாறுதல்கள் நடைமுறைக்கு வந்தன. முக்கியமாக காவல்துறைக்குப் பிரச்னைகள் வெகுவாகக் குறைந்தது.
காவல்துறையின் தேர்தல் பணிகள் மூன்று கட்டமாகப் பிரிக்கப்படுகிறது. தேர்தலுக்கு முன் நடக்கும் வேட்பு மனுத்தாக்கல், தேர்தல் பிரசாரம், மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்டல் முதல்கட்டம்.
இரண்டாவது கட்டம், தேர்தல் பிரசாரம் ஓய்ந்தபின் தேர்தல் நாளுக்கான ஆயத்தப்பணி மற்றும் அமைதியாக வாக்களிப்பு நடைபெற பாதுகாப்பு, ஓட்டுச் சாவடியிலிருந்து வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்தில் ஒப்படைத்தல் இதில் அடங்கும்.
மூன்றாவது கட்டமாக, வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு, முடிவு அறிவித்தபின் வெற்றி வேட்பாளர்கள் ஊர்வலப் பாதுகாப்பு, தேர்தல் முடிவுகள் குறித்து அந்தந்த சரகங்களில் எழக்கூடிய சர்ச்சைகள், அதனால் விளையும் கைகலப்பு இவற்றைக் கவனித்துத் தடுப்பு நடவடிக்கை எடுத்தல் என்று காவல்துறைக்கு ஒவ்வொரு கட்டத்திலும் வரையறுக்கப்பட்ட பொறுப்பு இருக்கிறது.
ஒவ்வொரு சரகத்திலும் எழக்கூடிய பிரச்னைகளைத் துல்லியமாக அலசி ஆராய்ந்து முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தால், தேர்தல் அமைதியாக நடக்கும். இதற்கு அடிப்படை பாரபட்சமற்ற நேர்மையான பணி. தேர்தல் பிரசாரத்தின்போதும், பிரசாரம் முடிவுற்று தேர்தல் நாளுக்கு முன் 48 மணி நேர கெடுவின்போதுதான் அதிகமாக விதிமுறை மீறல்கள் அதுவும் பணம் பொருள் பரிமாற்றம் நடக்கக்கூடிய தருணம். அப்போதுதான் காவல்துறையும் தேர்தல் பார்வையாளர்களும், வருவாய்த்துறையும் கவனமாக இணைந்து செயல்பட வேண்டும்.
தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் நடத்துவதற்கான உபகரணங்கள், பணியாளர்கள், ஓட்டுச் சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள ஏற்பாடுகள் இவை சரியாக உள்ளனவா என்பதைப்பற்றி அதிகக் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், தேர்தல் விதிகள் நடைமுறைப்படுத்துதல், தேர்தல் பணியாளர்கள் பாரபட்சமின்றி பணியாற்றுகிறார்களா என்பதைக் கண்காணித்தல், பொதுக் கூட்டங்கள் விதிகள்படி பல்வேறு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு, சரியான நேரத்தில் முடிவுறுகிறதா, தேர்தல் விதிமீறல்கள் பற்றிய புகார்கள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறதா, தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கு விசாரணைகள் பாரபட்சமின்றி நிர்வகிக்கப்படுகிறதா என்று கண்காணிக்கும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.
கள்ள ஓட்டுப் போடுவதை ஒரு கலையாகவே வளர்த்துக் கொண்டுள்ளார்கள். வாக்குச் சீட்டு முறை இருந்தகாலத்தில் அராஜகமாகக் கும்பலாக வாக்குச்சாவடியில் நுழைந்து வேண்டியவர்களுக்கு வரிசையாக குத்திவிட்டு வாக்குப் பெட்டியில் போட்டுவிடுதல் -- இதுதான் வாக்குச் சாவடியைக் கைப்பற்றுதல் என்ற உச்சகட்ட மோசடி. இது பல மாநிலங்களில் நிகழ்ந்துள்ளது. இதைத் தவிர்க்கத்தான் பிரச்னை உண்டாகக்கூடிய வாக்குச்சாவடிகள் கணக்கிடப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்படுகிறது. இப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை கொடுக்கப்பட்டு தவறுகள் வெகுவாகக் குறைந்துள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒரு நிமிடத்தில் ஐந்து ஓட்டுகள்தான் போட முடியும். அரை மணி நேரத்தில் அதிகபட்சமாக 150 ஓட்டுகள்தான் போடமுடியும். ஆனால், வாக்குச்சீட்டு முறையில் ஆயிரம் ஓட்டுகள்கூட குறைந்த நேரத்தில் போட்டுவிட முடியும். ஆயினும், வாக்குச்சாவடியில் கட்சிகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளைச் சரிக்கட்டி பலத்த கட்சிகள் ஆள்மாறாட்டம் செய்து ஓட்டு போடக்கூடும்.
ஆள்மாறாட்டம் செய்து ஓட்டுப் போடுதல் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச்சட்டம் 171 பிரிவு (ஈ)-ன்படி குற்றம். வாக்குச்சாவடியில் அமர்வு அதிகாரிகளின் புகாரின் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பலம் வாய்ந்த வட்டார தாதாக்களின் அச்சுறுத்தல் மற்றும் பணத்தாசை ஆகியவற்றுக்கு இணங்கும் அமர்வு அதிகாரிகளின் இசைவோடு கள்ள ஓட்டு வேண்டிய வேட்பாளர்களுக்குப் போடக்கூடிய வாய்ப்பு உள்ளது.
இத்தகைய முறைகேடுகளை முறியடிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு காவல்துறையிடம் உள்ளது. உயர் அதிகாரிகள் களப்பணியில் உள்ள பணியாளர்களைத் திரும்பத் திரும்பச் சந்தித்து அவர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு எந்த ஒரு பிரச்னை இருந்தாலும் உடன் உதவிக்கு வந்துவிடுவோம் என்ற ஒரு நம்பிக்கை கொடுக்க வேண்டும். நேர்மையாகப் பணி செய்யுங்கள் என்று அறிவுறுத்தத் தயங்கக்கூடாது, ஆனால், தயங்குகிறார்கள் என்பதுதான் வருத்தமளிக்கிறது.
தேர்தல் பணி புனிதமானது. மக்களுடைய வாக்கு ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. வாக்குகளைப் பெறப் பணம் கொடுப்பதும், வாக்களிக்கப் பணம் பெறுவதும் இழி செயலாகும். தேர்தல் பணிகள் கெüரவமாக நிர்வகிக்கப்பட்டு தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கப்பட வேண்டும்.
- தினமணி கட்டுரை
இன்றைய பொன்மொழி: வெறும் போகத்துடன் திருப்தி அடைந்து விடாதே, யோகத்திலும் மனதைச் செலுத்து.
இன்றைய விடுகதை:செம்பட்டு உடையழகி தலைகீழ் குடை பிடிப்பாள், அது என்ன?
முந்தைய பதிவிற்கான விடுகதையின் விடை: தேங்காய்
முந்தைய விடுகதையின் பதிவை பார்க்க: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!
7 கருத்துரைகள்:
//விதிகளை மீறுவதற்கு லஞ்சமாகப் பணம் கைமாறுவதில் கொடுப்பவரும், பெறுபவரும் சாபத்துக்கு உள்ளாகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.//
சரியாக சொன்னீர்கள் மக்கா....
அய் வடையும் எனக்கா....
தினமணீ கட்டுரை பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் பிரகாஷ் - நட்புடன் சீனா
ஓட்டு விற்பனைச் சந்தையில் பணம் கொடுப்பவரும், பணம் பெறும் ஏழை மக்களும் சந்தோஷமாகப் பரிமாற்றம் செய்கையில் நாம் ஏன் தலையிட வேண்டும்? தலையிடத்தான் முடியுமா? அது சாத்தியமா என்ற எண்ணம் சாதாரணப் பணியாளர்களிடம் மட்டுமன்றி மேற்பார்வையிடும் காவல்துறை அதிகாரிகளிடமும் இருப்பது வேதனை அளிப்பதாகும். இது சட்டப்படி பிடிக்க முடியாத குற்றம்.//
இப்படியே நாம் பார்த்திருந்தால், நாடு அதல பாதாளத்தில் வீழ்ந்த பின்னர் என்ன செய்ய முடியும்?
உங்களின் கட்டுரைப் பகிர்விற்கு நன்றி. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, தினமணியில் வெளியான கட்டுரைகளை நிறையப் பேர் படித்திருப்பார்கள். ஆனால் இலங்கையில் உள்ள என் போன்றவர்களுக்கு இக் கட்டுரையினை உங்கள் பதிவு மூலம் படிக்க கிடைத்தது மகிழ்ச்சியே!
பத்திரிகையில் வரும் விடயங்களைத் தவிர்த்து, உங்கள் தனியான திறமை மூலம் இவ்வாறான ஆக்கங்களைப் பகிர்ந்து கொண்டால் இன்னும் வரவேற்புப் பெறும் என்பது எனது கருத்து.
/தேர்தல் பணி புனிதமானது. மக்களுடைய வாக்கு ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. வாக்குகளைப் பெறப் பணம் கொடுப்பதும், வாக்களிக்கப் பணம் பெறுவதும் இழி செயலாகும். /இந்த வரிகளிலே எல்லாம் அடங்கி விடுகிறது .
நானும் வந்திட்டேன்...
இன்றைய விடுகதை:செம்பட்டு உடையழகி தலைகீழ் குடை பிடிப்பாள், அது என்ன?
மிளகாய்.சரிதானே பிரகாஷ்?