வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் பிரகாஷின் அன்பான வணக்கங்கள். ஒரு வழியா 150 இடுகைகள் வரை போட்டாச்சு. இவையெல்லாம் உங்கள் ஒவ்வொருவரின் அன்பும், ஆதரவால் மட்டுமே சாத்தியமாயிற்று. ஒவ்வொரு இடுகைக்கும் நேர் / எதிர் பின்னூட்டம் எழுதியவர்களுக்கும், இடுகைகளுக்கு ஓட்டு போட்டு திரட்டிகளில் பிரபலமாக காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுளேன்.
இன்றுவரை 80 நண்பர்கள் என் வலைப்பூவை தொடர்கிறார்கள். அவர்களுக்கும் நன்றி கலந்த வணக்கம். இன்னும் நிறைய நண்பர்கள் என் வலைப்பூவை தொடர அன்புடன் அழைக்கிறேன்.
என் வலைப்பூவை பார்த்து, வாசித்து நேரம், காலம் கூட பார்க்காமல், என் சந்தேகங்களுக்கு சிறந்த ஆலோசனைகளும், கருத்துகளையும் என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கிற வலைச்சரம் சீனா ஐயா அவர்களை பேட்டி எடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். அதோடு அவரிடம் கேள்விகள் கேட்க உங்களையும் பங்கு பெற வைத்ததில் ஒரு திருப்தி.
இந்த இடுகையில் என் கேள்விகளை சீனா ஐயாவிடம் கேட்டுள்ளேன். அடுத்த இடுகையில் உங்கள் கேள்விகள் வலம் வரும். சீனா ஐயா பற்றிய அறிமுகம் தேவையெனில் அவரின் "அசைபோடுவது..." என்ற வலைப்பூவை பார்க்கவும்.
01 : சீனா பெயர்க்காரணம் கூறுக
என்னுடைய பெயர் சிதம்பரம். எங்கள் உறவு முறையில் சீனாதானா என முதலிரண்டு எழுத்துகளை வைத்து அழைப்பார்கள். நான் அதில் இருந்து முதற் சொல்லை மட்டும் வைத்து சீனா எனப் புனைப் பெயர் வைத்துக் கொண்டேன். அவ்வளவு தான் - சீன நாட்டிற்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
02: புதியதாக வலைப்பூ துவங்குபவர்க்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
புதியதாக வலைப்பூ துவங்குபவர்கள் முதலில் சிறிய சிறிய இடுகையாக எழுதலாம். மூன்று இடுகைகள் இட்ட வுடன் திரட்டிகளில் இணைக்கலாம்., தமிழ் மணத்தில் இணைப்பது அவசியம். பிறகு வருகிற மறுமொழிகளுக்கு அன்பான நன்றி கலந்த பதிலுரைகள் அளிக்க வேண்டும். அவர்களின் வலைப்பூவினிற்குச் சென்று படித்து மறு மொழி இட வேண்டும்.
புதியதாக வலைப்பூ துவங்குபவர்கள் முதலில் சிறிய சிறிய இடுகையாக எழுதலாம். மூன்று இடுகைகள் இட்ட வுடன் திரட்டிகளில் இணைக்கலாம்., தமிழ் மணத்தில் இணைப்பது அவசியம். பிறகு வருகிற மறுமொழிகளுக்கு அன்பான நன்றி கலந்த பதிலுரைகள் அளிக்க வேண்டும். அவர்களின் வலைப்பூவினிற்குச் சென்று படித்து மறு மொழி இட வேண்டும்.
பிறகு தமிழ் மணத்தில் உள்ள சூடான இடுகைகள் , வலது பக்கம் வரும் இடுகைகள் - இவற்றிர்க்கெல்லாம் சென்று படித்து மறு மொழிகள் இட வேண்டும். எதிர் மறை எண்ணங்கள் துவக்கத்தில் எழுத வேண்டாம். ஆக்க பூர்வமான நேர் மறை கருத்துகளையே துவக்கத்தில் எழுத வேண்டும்.
03 : இன்றும் நீங்கள் விரும்பிப் பார்க்கும் பழைய திரைப்படங்கள் எவை ? ஏன் ?
விரும்பிப் பார்க்கும் திரைப்படங்கள் எனில் - தில்லானா மோகனாம்பாள், வீர பாண்டிய கட்ட பொம்மன், கப்பலோட்டிய தமிழன், கல்யாணப் பரிசு இன்னும் எத்தனை எத்தனையோ ..... இப்பொழுதெல்லாம் பொழுது போக்குவதற்காக வீட்டிற்கு அருகில் உள்ள அம்பிகா திரையரங்கத்தில் சனி / ஞாயிறு ஏதேனும் ஒரு நாள் மாலைக் காட்சிக்கு என்ன படம் என்று கூடப் பார்க்காமல் சென்று விடுவோம். ஆக மாதத்தில் 4 / 5 படங்கள் அவ்வளவு தான்.
04 : பணி ஓய்விற்கு முந்தைய வாழ்க்கை - பிந்தைய வாழ்க்கை . இந்த இரண்டில் தங்களுக்குப் பிடித்த, மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய வாழ்க்கை எது ? ஏன் ?
பணி நிறைவிற்குப் பின் - பணி நிறைவிற்கு முன் - ஓய்வு என்ற சொல்லே நமது அகராதியில் இருக்கக் கூடாது. இறுதி வரை ஏதேனும் செய்து கொண்டே இருக்க வேண்டும். சரி எது பிடித்ததெனில் - எதெது எவ்வப்பொழுது நடக்கிறதோ அதனை அப்படியே ஏற்றுக் கொள்ளும் எண்ணம் கொண்டவன். திட்டமிடுதல் எல்லாம் கிடையாது. செய்பவை அனைத்துமே பிடிக்கும். முன்னர் பணிச்சுமை அதிகம் - தற்பொழுது நேரம் எவ்வாறு கழிப்பதென எண்ணம். இரண்டுமே பிடித்திருக்கிறது. பணி புரிந்த காலத்தில் செல்ல இயலாத இடங்களுக்கெல்லாம் இப்பொழுது செல்கிறோம். ஆன்மீகச் சிந்தனை வளர்ந்திருக்கிறது.
05 : நீங்கள் எத்த்னை பேரிடம் ஐ லவ் யூ சொல்லி இருக்கிறீர்கள் ? அப்படி சொல்லி அடி வாங்கிய அனுபவம் உண்டா ?
ஐ லவ் யூ சொல்வது மிகவும் எளிதான செயல். அன்பினைப் பகிர்வதர்க்கு யாருடைய அனுமதியும் தேவை இல்லை, அடியும் வாங்க வேண்டியதும் இல்லை. காதல் எல்லாம் கல்லூரி வாழ்க்கையோடு சரி. இப்பொழுது சில நேரங்களில் நினைத்துப் பார்ப்பதுண்டு. அவ்வளவு தான். எங்கள் காலத்தில் காதல் என்பது அவ்வளவு எளிதல்ல.
06 : வலயுலகில் உங்கள் சாதனை என்ன ? அச்சாதனையை எட்டிப் ப்டிக்கக் காரணமாக இருந்தது எது ?
ஒரு புகழ் பெற்ற ஓவியரிடம் ஒருவர் கேட்டாராம். உங்களின் படைப்பிலேயே சிறந்த படைப்பு எது என. அவர் பதிலளித்தாராம் - எனது அடுத்த படைப்பெனெ. நீதி என்ன வெனில் சாதனை என்று ஒன்றுமில்லை. நாளுக்கு நாள் முன்னேற வேண்டும். பிரபலமாக வேண்டும். எழுதும் திறமை வளர்க்க வேண்டும். நட்பு வட்டம் பெருக வேண்டும்.
நாங்கள் அயலகம் சென்றிருந்த போது, நேரத்தைச் செலவிட, தேடிய பொழுது, தமிழ்ப் பதிவுகள் கண்களில் பட்டன. அதனை ஆய்ந்து நானும் ஒரு வலைப்பு ஆரம்பித்து நான் பிறந்ததில் இருந்து .... என வாழ்க்கைச் சரிதம் எழுத ஆரம்பித்தேன். நடை ஒரு மாதிரி இருந்தாலும் மறு மொழிகள் அதிகம் வந்த காரணத்தினால் தொடர்ந்து எழுதினேன். பிறகு கணினியில் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு ( தினசரி 10 / 12 மணி நேரம் ) கிடைத்தது. கண்ணில் பட்டவற்றை எல்லாம் படித்தேன் - மறு மொழி இட்டேன். டெம்ப்ளேட் மறுமொழி அல்ல - 2 3 வரிகள் இடுகையில் இருந்து எடுத்துப் பாராட்டி எழுதிய மறுமொழிகள். திரட்டி தமிழ் மணத்தில் "ம" திரட்டியில் தினசரி என் பெயர் முதலில் இருக்க வேண்டும் என வெறியுடன் படித்து எழுதினேன். பின்னூட்டப் பிதாமகன் எனப் பெயர் பெற்றேன். இப்பொழுது இருக்கும் பதிவர்களுக்கு நான் அதிகம் அறிமுகமில்லாதவனாக இருக்கலாம். நான் சென்று பார்வை இட்ட பதிவர்களின் பெயர்கள் ஒரு இடுகையில் இட்டிருக்கிறேன். சென்று பார்க்க அன்புடன் அழைக்கிறேன்.
07 : தற்போது சில பதிவர்களிடையே கருத்து மோதல் ஏற்படுகிறேதே ? இதைப் பற்றி தங்கள் கருத்து ?
எழுத்தாளர்கள் என்றாலே சர்ச்சை இருக்கத்தான் செய்யும். தவிர்க்க இயலாது. சங்க காலத்திலேயே புலவர்கள் சர்ச்சை செய்திருக்கிறார்கள். ஆகவே கருத்து மோதல் என்பது தவறல்ல. ஆனாலும் வரம்பு மீறாமல் இருக்க வேண்டும். அணி சேர்க்கக் கூடாது. ஊதிவிட்டு மகிழ்பவர்களைத் தவிர்க்க வேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்த வரை எல்லா மோதல்களுமே சுபமாகத் தான் முடிந்திருக்கிறது. ரசிப்போம்.
08 : உங்களூக்கு சிகரெட், மது பானம் போன்ற பழக்கங்கள் உண்டா ?
இப்பழக்கங்கள் இல்லாத மனிதனே கிடையாது. யாராவது நான் நினைப்பது கூடக் கிடையாதென்று கூறினால் அவன் தான் உலக மகா பொய்யன். வாழ்வினில் ஒரே ஒரு தடவையாவது மது / புகை பிடித்தல் இவற்றில் ஈடு படாதவனே கிடையாது. பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களினால் ஈடு படுவார்கள். தவறில்லை. ஆனால் அடிமையாகக் கூடாது.
09 : மனைவியிடம் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட அனுபவம் உண்டா?
அந்தரங்கம் புனிதமானது. இருப்பினும் வள்ளுவரே கூறிய படி பொய்யும் பேசலாம் அவை நன்மை பயக்குமெனில். கண்டு பிடிக்கும் திறமை பெண்களிடம் அதிகம்.
10 : இது தேர்தல் சமயம் என்பதால் கேட்கிறேன். யார் ஆட்சிக்கு வந்தால் நல்லதென நினைக்கிறீர்கள் - ஏன் ?
இனிமேல் பிறப்பவர் ஆட்சிக்கு வந்தால் தான் நல்லது. இருப்பவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமெனில் கோடி வீட்டில் கொள்ளி வைப்பவர்தான் இன்று சிறந்தவர்.
11 : பணி செய்த காலத்தில் லஞ்சம் வாங்குவது / கொடுத்தது
உண்டா ?
லஞ்சம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ள பதவியில் நான் இல்லை. அதனால் லஞ்சம் வாங்க வில்லை. வாய்ப்புகள் வந்து நான் வாங்க வில்லை எனில் தான் நான் உயர்ந்தமனிதன். இன்று லஞ்சம் கொடுக்காமல் ஏதேனும் செய்ய இயலுமா ? அரசு இயந்திரங்கள் செயல் படும் விதம் உலகம் அறிந்ததே!
12 : உங்களை சோகத்தில் ஆழ்த்திய நிகழ்ச்சி எது ?
தாயும் தந்தையும் இறந்தது தான்.
13 : வலைச்சர ஆசிரியராக வாரம் ஒருவரைத் தேர்ந்தெடுத்து எழுதச் சொல்வது போல - என் பதிவினிற்கு உங்களை ஒரு வாரம் ஆசிரியராக நியமித்தால் - என் வலைப்பூவினில் எழுதுவீர்களா ?
எழுத மாட்டேன். ஏனெனில் நான் தற்பொழுது என் வலைப்பூவினிலேயே எழுதுவதில்லை.சிறப்பான காரணம் ஒன்றும் இல்லை.,
14 : பிரபல பதிவராக என்ன செய்ய வேண்டும் ?
இரண்டாவது கேள்விக்கான பதில் இதற்கும் பொருந்தும். அடிப்படை எண்ணம் நம் திறமையினை வளர்க்க வேண்டும். நாளுக்கு நாள் எழுத்து மிளிர வேண்டும். படிப்பவர்கள் / தொடர்பவர்கள் அவர்களாகப் பெருக வேண்டும். நாம் ஒவ்வொருவரையும் வாருங்க எங்கள் வீட்டிற்கென அழைப்பதெல்லாம் ஆரம்ப காலத்திலேயே நிறுத்தி விட வேண்டும். தொடர்ந்து அழைத்தால் வெறுப்பு கூடும். டெம்ப்ளேட் மறுமொழிகள் / மொக்கை / கும்மி - மழை பொழியும். பயனில்லாத ஒன்றாகச் சென்று விடும்.
15 : இந்தியாவில் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத இடங்கள் எவை ?
பிடித்த இடங்கள் சென்று இரசித்த இடங்கள் அனைத்துமே - பிடிக்காத இடங்கள் செல்லாத இடங்கள் அனைத்துமே !
16 : அடுத்த தலைமுறை என்று ஒன்றிருந்தால் நீங்கள் என்னவாக பிறக்க ஆசைப் படுகிறீர்கள் ?
அடுத்த பிறவியே வேண்டாமென விரும்புகிறேன். நம் கையில் இல்லையே !
17 : உங்களிடத்தில் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விஷயங்கள் எது ?
என்னிடத்தில் எனக்குப் பிடித்த குணம் - என் தன்னம்பிக்கை. எதனையும் செய்து முடிக்க இயலும் என்ற நம்பிக்கை. பிடிக்காதது என் சோம்பேறித் தனம். அது என் இரத்தத்தில் ஊறியது. இரண்டும் முரண்பட்டதல்ல - இரண்டுமே ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.
தொடரும்...
பதிவின் நீளம் கருதி பொன்மொழியும், விடுகதையும் இந்த இடுகையில் இணைக்கவில்லை.
தொடரும்...
பதிவின் நீளம் கருதி பொன்மொழியும், விடுகதையும் இந்த இடுகையில் இணைக்கவில்லை.
38 கருத்துரைகள்:
ஐயா அருமையாக வெளுத்துக்கட்டியிருக்கார்... அடுத்த பகுதிக்காய் காத்திருக்கிறோம்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.
அருமையாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!
உங்களின் கேள்விகளும் அதற்கான அய்யாவின் பதில்களும் அருமை
நல்ல கேள்வி . மிக அருமையான பதில்கள். சீனா சாரைப் பற்றி பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன்
எதிர்பார்த்த கேள்விகளும்,சமயோசித பதில்களும்,அருமை..
அருமை சீனா சாரை பற்றி தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி
கலக்குங்க நண்பா...
பேட்டி சுவாரஸ்யம்...
வலைச்சரம் ஐயாவின் நல்ல சிந்தனைக்கு எடுத்துக்காட்டு...!
>>வாழ்வினில் ஒரே ஒரு தடவையாவது மது / புகை பிடித்தல் இவற்றில் ஈடு படாதவனே கிடையாது.
இதில் மட்டும் எனக்கு உடன்பாடு இல்லை..
புதிய பதிவர்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு இது
படித்து சிரித்தேன் நல்லதொரு காமெடிப் பதிவு.. எப்படி சார் உங்களால மட்டும் இப்படி !!!
//நாம் ஒவ்வொருவரையும் வாருங்க எங்கள் வீட்டிற்கென அழைப்பதெல்லாம் ஆரம்ப காலத்திலேயே நிறுத்தி விட வேண்டும். //
நல்ல கருத்து சார் !!!
பேட்டி நல்லா இருந்துச்சு
நல்ல தொகுப்பு
புதிய முயற்சி
வாழ்த்துக்கள்
தொடர்க..
நன்றாக இருக்கிறது. பலவற்றை தெரிந்து கொண்டேன்
நல்ல கேள்வி பதில்...
இருவருக்கும் என் வாழ்த்துகள்...
//வாழ்வினில் ஒரே ஒரு தடவையாவது மது / புகை பிடித்தல் இவற்றில் ஈடு படாதவனே கிடையாது.//
மன்னிக்கவும்....!
//லஞ்சம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ள பதவியில் நான் இல்லை. அதனால் லஞ்சம் வாங்க வில்லை. வாய்ப்புகள் வந்து நான் வாங்க வில்லை எனில் தான் நான் உயர்ந்தமனிதன்.//
நல்ல பதில்.
நன்றாக இருந்தது, மேலும் தொடருங்கள், புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்க்கும்...
மது புகைபிடிக்காமல் இன்னும் பலர் இருகின்றனர் .
./வாழ்வினில் ஒரே ஒரு தடவையாவது மது / புகை பிடித்தல் இவற்றில் ஈடு படாதவனே கிடையாது./ இந்த கருத்தை தவிர்த்திருக்கலாம் என்பது என் எண்ணம்.மற்றபடி நல்ல பேட்டி வாழ்த்துக்கள்
டெம்ப்ளேட் மறுமொழி அல்ல - 2 3 வரிகள் இடுகையில் இருந்து எடுத்துப் பாராட்டி எழுதிய மறுமொழிகள்.//
மிக சிறப்பாக கூறியுள்ளார்
பேட்டி ஸ்வாரஸ்யமாக இருக்கிறது ஓட்டு போட்டுவிட்டேன்
அய்யா பேசிய விதம் இயல்பாக இருக்கிறது.
நல்ல வழிகாட்டுதல்கள்..
ஆரம்ப கால கட்டங்களில் அவர் அளித்த ஊக்குவிப்பு எங்களை இன்றும் நெகிழ்வூட்டுகிறது.
அவரால் வளர்ந்தவர்கள் நாங்கள்..
அவருக்கு எங்கள் வந்தனங்கள்..
சீனா சார் மிக அருமை.. பெயர்க்காரணமும்..:))
வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் உங்கள் வலைச்சரம் வாழ்க..
மிச்சத்தையும் எப்போ போட போறீங்க ப்ரகாஷ்..
:-))) தொடருங்க நண்பா..
நல்ல கேள்விகள், திறமையான பதில்கள். இன்னும் ஆர்வமுடன் எதிர் பார்க்கிரோம்.
ரொம்ப நல்லாயிருக்குங்க கேள்வி - பதில்!பாராட்டுக்கள்! :)
***நான் அதில் இருந்து முதற் சொல்லை மட்டும் வைத்து சீனா எனப் புனைப் பெயர் வைத்துக் கொண்டேன். அவ்வளவு தான் - சீன நாட்டிற்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ***
சிதம்பரம்னா சீனா தானானு சொல்லுவாங்க கேள்வி பட்டிருக்கேன்.
சீனானா அந்த நாடுதான் எனக்கு ஞாபகம் வந்தது :)
நல்ல பேட்டி. சீனா மற்றும் பிரகாஷ் இருவருக்கும் நன்றி!
//அணி சேர்க்கக் கூடாது. ஊதிவிட்டு மகிழ்பவர்களைத் தவிர்க்க வேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்த வரை எல்லா மோதல்களுமே சுபமாகத் தான் முடிந்திருக்கிறது. ரசிப்போம்.//
நன்று அய்யா
அருமயான கேள்விகளும் பதில்களும்.
உங்களது 150 பதிவுக்கு வாழ்த்துக்கள்.. அதோடு உங்கள் கேள்விகளும், அய்யாவின் பதிலும் அருமை... நிறைய தெரிந்து கொண்டேன் அவர்களின் பதிலில் இருந்து.. தொடர்ந்து கலக்குங்கள் நண்பரே
Good post...! Well written too. My wishes!
//நாம் ஒவ்வொருவரையும் வாருங்க எங்கள் வீட்டிற்கென அழைப்பதெல்லாம் ஆரம்ப காலத்திலேயே நிறுத்தி விட வேண்டும். //
நான் வலைப்பூ தொடங்கி 6 மாதங்கள் ஆகிறது.. இப்போது ஒரு மாதமாக சில நண்பர்களுக்கு மின்னஞ்ல் மூலம் எனது புதிய பதிவினை அறிமுகபடுத்தி அழைப்பதுண்டு.. ஐயா சொல்வதை பார்த்தால் நான் இதை நிறுத்தவேண்டுமா.??? இல்லை இதை தொடர்ந்தால் நான் பிரபல பதிவராக ஆகமுடியாதா.??? (மின்னஞ்சல் அனுப்பும்முன் பின்னூட்டம் அளித்தாலும் என்னை பின்தொடர்பவர்கள் 10 பேர் தான்.. ஆனால் இப்போது 40 பேர்..)
வணக்கம் சகோதரம், இந்த வலைச்சரம் ஆசிரியரை எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள். கேள்விகளில் ஒரு சிலவற்றைத் தவிர்திருக்கலாமே என்று எண்ணத் தோன்றுகிறது.
//06 : வலயுலகில் உங்கள் சாதனை என்ன ? அச்சாதனையை எட்டிப் ப்டிக்கக் காரணமாக இருந்தது எது //
வலையில் எழுதுவது எங்களுடைய மன ஓட்டங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே, ஆகையால் இங்கு போட்டி போட்டுச் சாதிக்க நினைப்பது தவறானது. ஆதலால் இந்தக் கேள்வியைத் தவிர்த்திருக்காலாம் தோழா. நானா நீயா என்று எல்லோரும் போட்டி போட்டுச் சாதனை புரிய எழுதப் புறப்பட்டால் உப்புமா பதிவுகள் தான் தொடர்ச்சியாக வரும். ஆகவே வலையில் சாதிக்க வேண்டும் என்கின்ற விடயத்தை விட்டு வலையினூடாக இருக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி எங்களை மெருகேற்றி, எங்கள் எழுத்துத் திறமைகளை கூராக்கலாம் என்பது என் கருத்து.
08 : உங்களூக்கு சிகரெட், மது பானம் போன்ற பழக்கங்கள் உண்டா ? //
ஒரு எழுத்தாளரைப் பேட்டி காணும் போது, அவரது எழுத்துக்களையும், அதற்கான அவரது பின்னணியையும் மட்டுமே அலசி ஆராய்தல் நல்லது என நினைக்கிறேன்.(கல்வி, அவர் முன்னேறிய விதம்) ஆதலால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையுடனான கேள்விகளைத் தவிர்த்தல் நல்லது.
//பணி செய்த காலத்தில் லஞ்சம் வாங்குவது / கொடுத்தது
உண்டா ?//
இக் கேள்விக்கு ஒரு சின்ன உதாரணம் கூறுகிறேன். நாங்கள் ஒரு நடிகையைப் பேட்டி எடுக்கப் போகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நடிகையைப் பார்த்து நீங்கள் படம் நடிக்கும் காலத்தில் யாருடனாவது தவறான உறவு கொண்டதுண்டா, என்று கேட்பது போன்ற உணர்விற்கு ஈடானது, ஆகவே இப்படியான வினாக்களைத் தவிர்த்து உங்களது அடுத்த பகுதியினைத் தொடர வாழ்த்துக்கள்.
இதுவும் அவரது பேட்டி அடிப்படையில் பார்த்தால் தவிர்க்கப்பட வேண்டிய கேள்வி.
14 : பிரபல பதிவராக என்ன செய்ய வேண்டும் ?//
ஒரே ஒரு வரியில் என் மன ஓட்டத்தை, இவ் இடத்தில் சொல்ல விரும்புகிறேன். பிரபல பதிவர் எனும் எண்ணங்களை விட்டு, நாம் எமது எழுத்துக்களை மெருகேற்றி, எம் தமிழறிவைக் கூராக்கும் வகையில் பதிவெழுதுவதினாலே போதும். இதில் பிரபல பதிவர் என்றொரு போட்டி மனப்பான்மையும், சண்டைகளும் சச்சரவுகளும் குழப்பங்களும் வேண்டாம்.
உங்களின் பேட்டியில் இன்னும் நிறைய விடயங்களைச் சேர்த்துக் கொண்டால் வாசகர்களுக்குப் பயனாக இருக்கும் என நினைக்கிறேன். உங்கள் பொன்னான நேரத்தைச் செலவழித்து, வாழ்வில் உயர்ந்த, தேர்ந்த ஒரு எழுத்தாளரை/ பதிவரை எங்களுக்காகப் பேட்டி எடுத்துப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.
சகோதரா, உங்களின் நூற்றி ஐம்பதாவது பதிவிற்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்தும் நிறைய விடயங்களை எழுதுவதோடு, தமிழ் நாட்டில் உள்ள சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஊடாக உங்கள் பதிவுகள் வெளியாகி தமிழகத்திலும், இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் உள்ள பாமர மக்களும் வலையுலகம் பற்றி அறிந்து எழுத்துலகப் புரட்சி செய்யும் வண்ணம் நீங்கள் எழுத வேண்டும் என வாழ்த்துகிறேன்.
என் மனதில் பட்டவற்றைச் சொல்கிறேன். நான் அதிகம் படித்தவனும் இல்லை. மற்றவர்களை அடக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டவனும் இல்லை. என்னால் சரி, பிழைகளைச் சுட்டித் தான் பின்னூட்டி விமர்சனமளிக்க முடியும். ஆகவே என் பின்னூட்டங்களை ஏற்றுக் கொள்வீர்கள் என எண்ணுகிறேன்.
அன்புடன் நிரூபன்.
சரி... இத நான் ப்ளாக்கர் நண்பனிலும் பார்த்தேன்! நீங்க அவர்ட்ட இருந்து திருடினிங்கலா இல்ல அவர் உங்ககிட்ட இருந்து திருடினார என்பது தெரியவில்லை.. எதோ ஒன்னு.... என் தளத்துக்கு செல்லுங்கள் வலைமான்