மூளையின் குறிப்பிட்ட பகுதியில் வலமிருந்து இடமாக, லேசாக மின்சாரம் பாய்ச்சப்பட்டால் கணித அறிவு தூண்டப்படுகிறது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
(பிள்ளைகளே, இதைப் படித்துவிட்டு நேரடியாக பிளக்கிலிருந்து மின்சாரத்தை தலையில் பாய்ச்சி விஷப் பரிசோதனை செய்ய வேண்டாம், மேற்கொண்டு படியுங்கள்).
கணிதம் படிப்பதில் மந்தமாக இருக்கும் 15 மாணவர்களை (வயது 20 முதல் 21 வரை) குழுவாகத் தேர்வு செய்து, புதிய கணிதக் குறியீடுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி மூளையின் குறிப்பிட்ட பகுதியில் வலமிருந்து இடம் செல்லும் வகையில் லேசாக மின்சார அதிர்ச்சி அளித்தார்கள். பிறகு குறியீடுகளைக் கொண்டு விடை அளிக்குமாறு சில புதிர் கணக்குகளை வீட்டுப்பாடமாக அளித்தார்கள்.
அவர்கள் வெகு விரைவாகவும் சரியாகவும் அந்த கணக்குகளுக்கு விடைகளைக் கண்டுபிடித்தார்கள்.அதே வேளையில் அந்தக் குழுவிலேயே மற்றொரு பகுதியினருக்கு மூளையின் இடது புறத்திலிருந்து வலதுபுறமாக மின்சாரம் செல்லுமாறு செலுத்தினார்கள். பிறகு அவர்களுக்கும் அதே கணக்குப் புதிர்களைக் கொடுத்தார்கள். அவர்களால் வேகமாகவோ துல்லியமாகவோ கணக்குப் போட முடியவில்லை.
அவர்களுடைய கணித ஆற்றல் 6 வயதுக் குழந்தைக்குச் சமமாகவே (குறைவாக) இருந்தது. அவர்களுக்கு ஸ்ட்ரூப் சோதனையும் நடத்தினார்கள்.அதாவது சிவப்பு என்ற வண்ணத்தை பச்சை மையில் எழுதிக் காட்டி வாசிக்கச் சொல்வார்கள். பெரிய மதிப்புள்ள எண்களை மிகச் சிறிய வடிவிலும் சிறிய மதிப்புள்ள எண்களை மிகப் பெரிய எழுத்துகளிலும் எழுதிக்காட்டி விடை கேட்பார்கள். (சுருக்கமாகச் சொன்னால் குழப்புவார்கள்).
மின்சாரத்தை வலமிருந்து இடமாகச் செலுத்தியவர்களின் கணித ஆற்றல் 6 மாதங்களுக்கு அப்படியே நீடித்தது. (கேரண்டி அவ்வளவுதான் போலிருக்கிறது!)இதிலிருந்து மூளை சிறப்பாக இயங்க மின்சாரம் பாய்ச்ச வேண்டும் என்ற தவறான முடிவுக்கு வந்துவிடாதீர்கள்.
மூளையின் ஒரு பகுதி கணித அறிவுக்கு ஏற்றது, அதை சரியான வகையில் தூண்டிவிடலாம் என்பதே ஆய்வின் முடிவு. இந்த ஆய்வு தொடர்கிறது, அதுவரை வாய்ப்பாடுகளை ஒழுங்காகப் படித்து கணக்கு போட்டுக்கொண்டிருங்கள்.
0 கருத்துரைகள்: