விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் எந்த அளவிற்கு வளர்கிறதோ அதற்கேற்ப மோசடி செய்பவர்களும் தங்களது மோசடி முறைகளை மாற்றிக்கொள்கிறார்கள்.
அந்த வகையான மோசடிகளில் ஒன்றுதான் வேலை தருவதாக கூறி வரும் மோசடி இ மெயில்கள்.
வங்கியிலிருந்து கேட்பதாக கூறி வங்கி கணக்கு எண் மற்றும் ரகசிய எண்ணை கேட்பது, "உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது; அதனை அனுப்பி வைப்பதற்கான கூரியர் செலவு மற்றும் டாக்குமெண்ட் கட்டணமாக இவ்வளவு தொகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் செலுத்துங்கள்..." என்பதுமாதிரியான மெயில்களை அனுப்பிக்கொண்டிருந்தவர்கள், அவை மோசடியானது என்பது தெரியவந்துவிட்டதால், தற்போது தங்களது யுக்தியை மாற்றிக்கொண்டு, வேலை தேடுபவர்களை குறிவைக்கிறார்கள்.
இதுநாள் வரை பேருந்துகளிலும், ரயில்களிலும் பிட் நோட்டீஸ் அடித்து ஒட்டி, அதில் " பிரபல அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுக்கு படித்த மற்றும் படிக்காத ஆட்கள் தேவை. மாதச் சம்பளம் 10,000 முதல்..." என்று வாயை பிளக்க வைக்கும் தொகையை குறிப்பிட்டு, முகவரி எதையும் தெரிவிக்காமல், செல்போன் எண்ணை மட்டும் தெரிவித்திருப்பார்கள்.
அதைப்பார்த்து ஏமாந்து தொடர்புகொள்பவர்களிடம், ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி, 10,000 சம்பளத்திற்கு 10,000 டெபாசிட் கட்ட வேண்டும், 20,000 என்றால் அதற்கேற்ற தொகை என்று கூறி, லம்பாக ஒரு தொகையை கறந்துகொண்டு கம்பி நீட்டி விடுவார்கள்.
இத்தகைய நபர்கள்தான் இப்பொழுது புது அவதாரம் எடுத்து, தங்களது மோசடிகளை அரங்கேற்ற தொடங்கியுள்ளனர்.
ஏதோ ஒரு வகையில், எப்படியோ இ மெயில் முகவரிகளை திரட்டிக்கொள்ளும் இத்தகைய மோசடி பேர் வழிகள், பிரபலமான கம்பெனி பெயரில் , ஏகப்பட்ட பதவிகளின் பெயர்களை குறிப்பிட்டு, வேலைக்கு ஆட்கள் தேவை என்றும், உங்களுக்கு ஏற்ற வேலைக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி சான்று, வேலை அனுபவம் முகவரி அத்தாட்சி, சம்பள பட்டியல் போன்றவற்றை அனுப்புங்கள் என்று கூறி ஒரு போலியான தனிநபர் மெயில் ஐடி கொடுத்திருப்பார்கள்.
கூடவே மிக முக்கியமாக, வேலைக்கான நேர்முக தேர்வுக்கு வருவதற்கு செக்யூரிட்டி டெபாசிட் தொகை கட்ட வேண்டும் என்று கூறி ஒரு தொகை குறிப்பிடப்பட்டிருக்கும். அத்துடன் அதை செலுத்துவதற்கான வங்கி கணக்கும் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதை உண்மையென நம்பி பணம் போட்டால் அவ்வளவுதான்.பணத்தை எடுத்துக்கொண்டு, அந்த வங்கிக்கணக்கையே "குளோஸ்" செய்துவிட்டு கம்பி நீட்டிவிடுவார்கள்.
பொதுவாகவே இத்தகைய மெயில்கள் மோசடியானவை என்பதை, அதில் காணப்படும் சில பொதுவான ஏமாற்று வேலைகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
முதலில் பிரபல கம்பெனி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக, குறிப்பிட்ட பிரபல நிறுவனத்தின் பெயரோடு துணை வார்த்தைகளையும் சேர்த்திருப்பார்கள்.
உதாரணமாக Tata என்பதை " Tata Group of Industries Limited" என்றோ அல்லது "Samsung Electronics India Ltd" என்றோ பெயரில் பொடி வைத்து அனுப்பப்பட்டிருக்கும்.அதை பார்த்து அது மோசடியானது என்று உஷாராகிக் கொள்ளலாம்.
அடுத்ததாக இத்தகைய மெயில்கள், முன்பே குறிப்பிட்டதுபோல் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரில் வராமல், தனிநபரின் போலி முகவரியில் இருந்து வந்திருக்கும்.
அடுத்ததாக 100 க்கு 99.99 விழுக்காடு, வேலைக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் எந்த ஒரு நிறுவனமும், விண்ணப்பதாரர்களிடம் நேர்முக தேர்வுக்காக முன் பணம் கட்டுமாறு கோராது. அப்படி கோரினால் அது நிச்சயம் "டுபாக்கூர்" தான் (மிக மிக அரிதான விலக்கு இருக்கலாம்).
ஒருவேளை இது உண்மைதான் என தெரிந்துகொள்ள வேண்டுமெனில் அந்த நிறுவனத்தின் இணைய தளத்திற்கு சென்று, அதன் தொடர்பு முகவரியிலோ அல்லது அந்த நிறுவனத்தின் HR பிரிவையோ தொடர்புகொண்டு மெயில் அனுப்பியதும்,பணம் கட்டக்கோருவதும் உண்மைதானா என்று கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
மேலும் இதுபோன்று வரும் இமெயில்களில் உள்ள கடித வாசகம், எழுத்து மற்றும் இலக்கண பிழைகளுடன அபத்தமானதாக இருக்கும். அதிலிருந்தும் அந்த மெயில் போலியானது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
அத்துடன் அந்த இமெயிலில் கொடுக்கப்பட்டிருக்கும் நிறுவனத்தின் தொடர்பு முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் நிச்சயம் போலியானதாகவோ அல்லது தவறானதாகவோ இருக்கும்.
உதாரணமாக பெங்களூரு முகவரிக்கு மும்பை தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கும்.
எனவே அடுத்தமுறை இதுபோன்று அதிக சம்பள ஆசை காட்டி வரும் மெயில்களை பார்த்தால், உஷாராகிக் கொள்ளுங்கள் !
4 கருத்துரைகள்:
ஏற்கனவே நன் இது தொடர்பை ஒரு பதிவு போட்டு இருக்கிறேன்.. இன்னும் விழிப்புணர்வு வர வேண்டும்
நீங்கள் கிடைக்கப்பெற்றது போன்றே மற்றொரு மின்னஞ்சல் இங்கே!
http://kaaranam1000.blogspot.com/2010/09/fake-recruitment-letter-beware.html
பக்தி,ரசிகன்,கட்சி மாதிரி சென்ஸிட்டிவ்-ஆகி வருகிறது வேலைவாய்ப்பு! நல்லா யோசிக்கிறாய்ங்க்ய பாருங்க!!!
அன்புடன்
மனிதன் ஆசைப்படுவதை குறைத்தாலே போதும்... thanks for LK, காரணம் ஆயிரம்...
நல்லா விஷாரிச்சு தெரிஞ்சுக்கிட்டாலே இது போன்ற மோசடிகளில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும்.
பொதுவாகவே முன்பின் அறியாத இடத்தில் முன்பணம் கொடுத்தால் தான் வேலை என்று சொல்லப்பட்டால் ஒதுங்கி விடுவதே நல்லது :)
நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள்