வைகுண்ட ஏகாதசி ராபத்து நாட்களில் மட்டுமே பக்தர்கள் பார்வையிட திறக்கப்பட்ட திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம், ஆண்டுமுழுவதும் பார்வையிடும் வகையில் நேற்று திறக்கப்பட்டது.வெளிநாட்டினர், பக்தர்கள் பார்வையிட வசதியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம் நேற்று முதல் திறக்கப்பட்டது.
பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இங்குள்ள கலை சிற்பங்கள், கட்டிட கலை ஆகியவற்றை பார்வையிட தினமும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோயிலுக்கு வருகின்றனர்.
இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரே சேஷராய மண்டபத்தில் உள்ள அரிய சிற்பங்களை மட்டுமே பக்தர்களும், பயணிகளும் இதுவரை பார்த்து சென்றனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி நடைபெறும் ராபத்து நிகழ்ச்சியின்போது 10 நாட்களுக்கு மட்டுமே ஆயிரங்கால் மண்டபம் திறந்திருக்கும். அப்போதும் மண்டபத்தின் உள்ளே உள்ளூர் பக்தர்கள்தான் அனுமதிக்கப்படுவர்.
வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி கிடையாது. இந்த 10 நாட்கள் தவிர ஆண்டு முழுவதும் ஆயிரம்கால் மண்டபம் மூடப்பட்டிருக்கும்.
கடந்த மார்ச் மாதம் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பக்கம் மணல்வெளியில் உள்ள 3 நான்கு கால் மண்டபத்தின் தரை தளத்தை காண மணல்களை அகற்றியபோது, ஆயிரங்கால் மண்டபத்தில் முகப்பில் 11 படிகளும், 2 அடி உயரமுள்ள நடன சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிற்பங்களை பாதுகாக்க 6 அடி அகலம், 140 அடி நீளத்தில் கருங்கல் தளம் அமைக்கப்பட்டது.
கடந்த வாரம் ஆயிரங்கால் மண்டபத்தில் மேற்கு திசையில் நிரம்பி இருந்த மணல்களை அகற்றியபோது, பெருமாளின் திருவடி கண்டுபிடிக்கப்பட்டது.
ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த கிரில்கேட், பக்தர்கள் மற்றும் வெளிநாட்டினர் மண்டபத்தை பார்வையிட வசதியாக நேற்று அகற்றப்பட்டது. மொத்தம் 800 அடிநீள மண்டபத்தில் திருமாமணி மண்டபம் வரை 200 அடி உள்ளேசென்று அழகிய தூண்களை நேற்று ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
இனி தினமும் மண்டபத்தை பார்வையிட பக்தர்கள், வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்: