"டேய் பொறம்போக்கு, எலேய் விடிஞ்சு ஒம்போது மணி ஆச்சு. இன்னும் என்னடா தூக்கம், எந்திரிடா... வெட்டி களைச்சு போன ஆபீசரு தூங்கறாரு பாரு... எந்திரிடா வேலை வெட்டி இல்லாதவனே.." என் அப்பாவிடம் தினந்தோறும் வாங்கும் வசவுகள் இவை. இது ஒரு சாம்பிள் தான். இன்னும் பயங்கர வார்த்தைகள் வந்து விழும். ஏனோ, இன்னைக்கு கொஞ்சம் கம்மியா திட்டறாரு. "மூர்த்தி, எந்திரிப்பா.. கடைக்கு போய் கொஞ்சம் மளிகை சாமான் வாங்கணும், சீக்கிரம் எந்திரிப்பா.." இது என் அம்மா. என்னிடம் பாசம் காட்டும் ஒரே ஜீவன். அம்மாவுக்காக எந்திரிச்சேன். பல்ல விளக்கிட்டு, அம்மா கொடுத்த டீயை குடிச்சிட்டு லிஸ்ட்டை வாங்கி கடைத்தெருவுக்கு போனேன்.
என்னைப் பத்தி சொல்லி விடுகிறேனே, என் பெயர் மூர்த்தி, கம்பியூட்டரில் முதுநிலை பட்டப்படிப்பு படிச்சுட்டு வேலை தேடும் ஒரு சராசரி இளைஞன். வெறும் எட்டாயிரம், பத்தாயிரம் ரூபாய்க்கு வரும் வேலையில் சேர என் மனம் இடம் கொடுக்க வில்லை. சேர்ந்தால் பெரிய நிறுவனத்தில் ஓரளவு நல்ல தகுதியான சம்பளத்தில் சேர வேண்டும் என்பதே என் ஆசை. அப்பா வெங்கடாசலம் ரிட்டயர்டு பேங்க் கேஷியர்.அவர் எப்பவுமே சிடுசிடு தான். சின்ன வயசிலே இருந்தே அவரை அப்படித்தான் பாக்கிறேன். பாசம்னா எவ்வளவு என கேட்பவர் அவர். அம்மா பாக்கியம். வீட்டில் அப்பாவுக்காகவும், எனக்காகவும் வாழும் ஜீவன். என்மேல அவங்க வச்சிருக்கிற பாசத்தை வார்த்தையில சொல்லிற முடியாது. சரிங்க என் புராணம் போதும். ரெகுலரா வாங்கற கடைக்கு போனேன். லிஸ்ட்டை கொடுத்திட்டு போட்டிருந்த ஸ்டூலில் உட்கார்ந்து ரோட்டை வேடிக்கை பார்த்தேன்.
"தம்பி மூர்த்தி, என்னப்பா வேலைக்கு போறியா? இல்லை இன்னமும் வீட்டுல அப்பா கிட்ட திட்டு வாங்கிட்டு இருக்கியா" என நக்கலாக கேட்டார் கடைக்கார அண்ணாச்சி. "இல்ல அண்ணாச்சி, இன்னமும் வேலை கிடைக்கல. நல்ல வேலை வரும்னு எதிர் பார்த்திட்டு இருக்கேன்" என மனசுக்குள் அவரை திட்டிட்டு பதில் சொன்னேன். இப்படித்தான் தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்க ரொம்ப பாவமா விசாரிக்கர்த்த கண்டா எனக்கு கோவம் தான் வரும். யாரும் வேலைக்கு உதவி செய்றது கிடையாது. சும்மா வெறும் பேச்சு மட்டும் தான்.
சாமான்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன். எனக்கு பிடிச்ச இடியாப்பம், தேங்காய்பால் செஞ்சு வச்சிருந்தாங்க. நல்லா சாப்பிட்டு பேப்பரிலும் நெட்டிலும் வேலை வாய்ப்பை தேட ஆரம்பித்தேன். ஏதாவது பெரிய நிறுவனம் கூப்பிட்டிருக்குமா என ஆசையில் மெயில்களை செக் செய்தேன். ம்ஹும், எப்பவும் போல கன்சல்டன்சிகளே அதிகமாக என மெயில் இன்பாக்ஸ்ஐ நிரப்பி இருந்துச்சு. இந்த கன்சல்டன்சி மூலமா சில இன்டெர்வியு போயிருக்கேன். ரெண்டு மூணு வருஷம் பான்ட், வெறும் எட்டாயிரம், பத்தாயிரம் என சம்பளம், மொத மாச சம்பளத்தை அவங்களுக்கு கொடுக்கணுமாம் இப்படி ஏக கண்டிஷன்ஸ். எனக்கு பிடிக்கவில்லை. எனக்கேற்ற ஒரு நாள் வரும். அதுவரை அப்பாவின் வசவுகளை வாங்க வேண்டும். அவர் வசவுகள் வாங்காம இருக்கணும்னா கிடைக்கிற வேலையில் சேர வேண்டியது தானே என சொல்றிங்களா? நீங்க சொல்றது வாஸ்தவம் தான். எனக்கு வேலை கிடச்சவுடன் ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் முடிச்சு வைக்க போறதா பெத்தவங்க பிளான் பண்ணியிருக்காங்க. அதனால தான் நல்ல வேலையில சேரணும்னு ஆசைப்படறேன். பெரிய நிறுவனங்கள் நேரடியாக வேலைக்கு கூப்பிடாதா? என கனவு கண்டுட்டு இருந்தேன்.
அப்படியே ஒரு மாசம் ஓடியது. அப்பாவின் திட்டுகள், அம்மாவின் பாசம் ரெண்டும் மாறி மாறி கெடச்சுச்சு. எனக்கு எப்படியாச்சும் நல்ல வேலை கிடைக்கனும்னு அம்மா வேண்டாத கோயில்கள் இல்லை. அவங்களுக்கு திருப்பதிக்கு ஒரு தடவ போய் தரிசனம் பண்ணிட்டு வரணும்னு ஆசை. அவங்க ஆசையை அப்பா கிட்ட சொன்னாங்க. அப்பாவும் திருப்பதிக்கு போயிட்டு வரலாம் என சொன்னார். அடுத்த ஒரு வாரத்தில் கிளம்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் திருப்பதி போகனும்னு சொன்ன நேரம் எனக்கு ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனில இருந்து வேலைக்கான இன்டெர்வியுக்கு கூப்பிட்டிருந்தாங்க. அம்மாவுக்கு ரொம்ப சந்தோசம், மகனுக்கு வேலை கிடைக்கணும்னு இங்க இருந்தே திருப்பதி சாமியை கும்பிட ஆரம்பிச்சாங்க. அன்னைக்கு புதன் கிழமை, அப்பாவும், அம்மாவும் திருப்பதி கிளம்புனாங்க. மூணு நாள் பிளான். பக்கத்துல இருக்கற கோயில்களையும் பார்த்துட்டு வர்றதா பிளான். அவங்களை ட்ரெயின் ஏத்தி விட்டுட்டு வீட்டுக்கு வந்து இன்டர்வியுக்கு தேவையான பாடங்களை ஒரு ரிவியு செஞ்சேன். அடுத்த நாள் வியாழன், இன்டெர்வியு அன்னைக்கு தான். சாமி கும்பிட்டுட்டு அம்மாவையும் நெனச்சிட்டு அந்த சாப்ட்வேர் கம்பெனிக்கு போனேன். எவ்ளோ பெரிய நிறுவனம். இங்கே வேலை கிடச்சா எப்படி இருக்கும்? அப்படியே எனக்குள்ளே ஒரு கனவு சினிமாவே ஓடுச்சு.
கரெக்டா பத்து மணிக்கு ஆரம்பிச்சாங்க. மொத்தம் சுமார் நாற்பது பேராவது வந்திருப்பாங்க. மொத்தம் பத்து சீட் தான் வேலை காலியா இருக்கறதா அங்க தெரிஞ்சுகிட்டேன். நானும் அந்த பத்து பேர்ல ஒருத்தனா இருக்கணும்னு கடவுளை வேண்டிக்கிட்டேன். ஒவோருத்தரா இன்டெர்வியு ஹாலுக்கு போனாங்க. முடிவும் அன்னைக்கு மதியமே சொல்லப் போறாங்கனு அங்க சொன்னாங்க. நான் பதினஞ்சாவது ஆளு. எனக்கான முறை வந்துச்சு. உள்ளே போனேன். இன்டெர்வியு ஆரம்பிச்சுச்சு. அவங்க கேட்ட கேள்விகளுக்கு ஓரளவு சரியாவே சொன்னேன். ஒரு பத்து நிமிஷம் கேள்விகள் கேட்டாங்க. வெளியில வெய்ட் பண்ணுங்க என சொன்னாங்க. இன்டெர்வியு முடிஞ்சவங்க எல்லோரும் தனியா ஒரு இடத்துல வெய்ட் பண்ணினோம். மதியம் ஆச்சு, கையில் ஒரு பேப்பருடன் ஒரு ஆள் வந்தார். எனக்குள் ஆர்வம் தொத்திக் கொண்டது. அவர் ஒவ்வொரு பேரா வாசிக்க ஆரம்பிச்சார். பேர் வாசிக்றவங்களை அங்க இன்டெர்வியு ஹால்ல உட்கார சொன்னார். என் பெயரையும் வாசிச்சார். எனக்குள் சந்தோசம்.
மொத்தம் இருபது பேர் அந்த ஹாலில் இருந்தோம். பெயர் வாசிச்சவர் வந்தார். இன்னொரு இன்டெர்வியு இருக்கு. ஒவ்வொருத்தரா கூப்பிடுவாங்க என சொன்னார். ஒவ்வொருத்தரா கூப்பிட்டாங்க. அப்பவே முடிவும் சொல்றதா இன்டெர்வியு முடிஞ்சு வெளியே வந்தவர் சொன்னார். அவர் செலக்ட் ஆகல என சொன்னார். என் முறை வந்திச்சு. உள்ளே போனேன். என்னிடம் மேலும் சில கேள்விகள் கேட்டாங்க. நானும் பதில் சொன்னேன். அவங்களுக்குள்ள டிஸ்கசன் பண்ணினாங்க. அப்புறம் நடுவுல இருந்தவர் "தம்பி மூர்த்தி உங்களை நாங்க செலக்ட் பன்னி இருக்கோம். உங்களுக்கு மாசம் முப்பதாயிரம் சேலரி போட்டிருக்கோம். நீங்க அடுத்த வாரமே வேலைக்கு ஜாயின் பண்ணிக்கலாம்" என வேலை அழைப்புக்கான லெட்டரை கொடுத்தாங்க. வர்றப்ப இந்த லெட்டரை கொண்டு வாங்க என சொன்னாங்க. எனக்குள் சந்தோசம். இன்டெர்வியு ஹாலை விட்டு வெளியே வந்தேன்.
மழை பெய்து குளுகுளு என இருந்துச்சு. என் மனசும் குளிர்ந்து இருந்துச்சு. அம்மாவுக்கு இந்த நல்ல விஷயத்தை போன் பன்னி சொல்லலாம்னு மொபைலை ஆன் செய்தேன். ஆன் செய்த அடுத்த நொடி ஒரு நம்பரிலிருந்து ஒரு போன் வந்துச்சு. ஹலோ சொன்னேன். அந்தப் பக்கம் சொன்ன விஷத்தை கேட்டு இடிஞ்சு போனேன். எனக்கு கை கால் நடுங்கியது. முகம் வியர்த்தது. அந்த பக்கம் நபர் சொல்ல சொல்ல எனக்கு பேச்சு வர வில்லை. என் அப்பா அம்மா திருப்பதிக்கு போயிட்டு கீழே இறங்கும் போது பஸ் மலையில் இருந்து கவிழ்ந்து இறந்து விட்டார்கள் என அவர் சொன்னதும் எனக்குள் நான் செத்து போனேன். ஐயோ அனாதையாயிட்டேனே... வேலை கிடச்ச சந்தோசத்தை அவங்க அனுபவிக்கலையே. திருப்பதிக்கு உடனே கிளம்பினேன் சில உறவினர்களும் வந்தாங்க. அரசு ஆஸ்பத்திரியில் பிணவறையில் அப்பா அம்மாவை வச்சிருந்தாங்க. அவங்களை பார்த்து மயங்கினேன். யாரோ என்னை தாங்கி பிடிப்பது தெரிந்தது. முழித்து பாத்தேன். உறவினர் ஒருவர் தம்பி, நீங்க தைரியமா இருக்கணும், இனி நடக்க வேண்டியதை பார்ப்போம் என சொன்னார். ஆம்புலன்சில் ஊருக்கு எடுத்து வந்தோம். தெருவே சோக மயமானது. செய்ய வேண்டிய காரியம் செய்தோம். உறவினர் ஒவ்வொருவராக எனக்கு ஆறுதல் சொல்லி விட்டு கிளம்பினார்கள். எல்லாம் முடிஞ்சு ரெண்டு நாள் ஆச்சு. என் நண்பர்கள் எனக்கு ஆறுதலா இருந்தாங்க. அப்பா அம்மாவை நெனச்சு அழுதிட்டு இருந்தேன். இனி எனக்கு யார் இருக்கா? உலகமே வெறுமையாய் தெரிந்தது.
ஒரு பெண்ணும், ஆணும் வீட்டுக்குள் வந்தாங்க. அந்த பெண்ணை பார்த்ததும் எனக்கு தூக்கி வாரி போட்டது. அவள் கார்த்திகா. அவளுடன் வந்தது அவளின் அப்பா. கார்த்திகா கல்லூரி நாட்களில் நான் ஒரு தலையாய் காதலித்த பெண். ரொம்ப தீவிரமா காதலித்தேன். ஆனால் அவள் காதலிக்கவில்லை.
"படிச்சு முடிச்சு நல்ல வேலையில் சேர்ந்திட்டு உன் காதலை சொல்லு. அப்ப உன்னை பிடிச்சா உன்னை காதலிக்கிறேன்" என சொன்னவள் இன்று என்னைத் தேடி வந்திருக்கிறாள். அவள் பேச ஆரம்பித்தாள்.
"மூர்த்தி பெத்தவங்கள இழந்துட்டு இருக்கற உனக்கு நான் இருக்கிறேன், அப்போ படிக்கறப்போ உன் காதல் எனக்கு புரியல. காலேஜ் முடிச்ச பிறகு தான் உன் காதலை என்னால் உணர முடிஞ்சது, உனக்காக நான் இருக்கேன்".
"அப்பா சொலுங்க அப்பா... அவருக்கு துணையா நான் இருக்கேன்னு சொல்லுங்கப்பா"
டிஸ்கி: இணைய தொடர்பு சரியில்லாத காரணத்தால் மீள்பதிவு.
,
,
13 கருத்துரைகள்:
mudhal paNIyaal
சோகமான கதை ...சுபமான முடிவு .
துவண்டிருக்கும்போது தோள் கொடுக்க வரும் காதலே உண்மையானது. கதை நல்லா இருக்கு சகோ. அப்பப்போ கதை எழுதுங்க.
சிறுகதை ஒரு விக்கிரமனின் சினிமா பார்த்தது போல ஃபீலிங், அருமையா வந்துருக்கு மக்கா வாழ்த்துக்கள்....!!!
மீள்பதிவு..?
அருமையான சிறுகதை...தொடர வாழ்த்துக்கள்....
கதை நல்லா வந்திருக்கு. வாழ்த்துகள்.
மனதை உருக்கும் சிறுகதை. ஆனால், முடிவில் சந்தோசம் கொள்ள வைத்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.
வணக்கம் பிரகாஷ்!அருமையாக எழுதியிருகிறீர்கள்.திரைப் படம் ஒன்றில் காட்சிகள் ஓடுவதுபோல் தெளிந்த நடை,வாழ்த்துக்கள்!!மீள்பதிவாக இருப்பினும்.
நல்ல கதை, அருமையான நடை!
அன்பின் பிரகாஷ் - கதை அருமை - கொள்கைப்படிப்புடன் கதாநாயகன் - வெற்றி பெறும் போது - மகிழ்ச்சியினைப் பகிர பெற்றோர் இல்லை - ஆனால் தொவி அடைந்த காதலின் நாயகி திரும்ப வந்து துணை புரியும் நிக்ழ்வு பாராட்டத் தக்கது. சிந்தனை அருமை - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
முதலில் சோகம் ! முடிவில் ஜெயம்! நன்றி நண்பரே !
பாதிக்கு மேல இறுதி எல்லாமே திருப்புமுனையா போட்டுட்டீங்களே...
வணக்கம் தோழர்..தாங்கள் சிறுகதை எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை..வாசித்தேன் கதை சிறப்பு.முடிவு அருமை.தொடர்ந்து எழுத வாழ்த்துகள்..