நண்பர்களே, தலைப்பை பார்த்ததும் எரிச்சல் வருதா? கண்டிப்பா வரும். ஏன்னா இன்னைக்கு பேஸ்புக் ஸ்டேடஸில் அதிகமா வலம் வர்ற வரிகள் இதுவாத் தான் இருக்கும். நாம் வாழும் சில சமூக சூழ்நிலைகளை சிறு தொகுப்பாக பதிந்துள்ளேன். படித்து உங்கள் கருத்தை பகிருங்கள்.
மனித முகங்கள்:
இன்னைக்கு தேதியில நாம், பல சூழ்நிலைகளில் வாழ்க்கை முறையை மாத்திட்டே இருக்கோம். நமக்குன்னு ஒரு நிலையான வாழ்க்கை முறையை அமைச்சுக்க முடியல. அதுக்கு, நெளிவு சுளிவுகளுக்கு ஏற்ப வாழ பழகியதும் ஒரு காரணம். இந்த நெளிவு சுளிவு தான் நம்மை நல்லவனாகவும், கெட்டவனாகவும் மத்தவங்ககிட்ட காட்ட வைக்குது. ஏன்னா நம்முடைய வெளித்தோற்றமே நம்முடைய ஸ்டேடசை காட்டுது. வீட்டில், உறவினர்களுக்கு மத்தியில் நமது பேச்சும், பழக்க வழக்கமும் ஒரு விதமாகவும் காட்றோம். ஆனால், வெளியுலகில், நண்பர்களிடத்தில் நமது பேச்சும், பழக்க வழக்கங்களும் வேறுவிதமாகவும், வேலை செய்கிற இடத்திலும், நமக்கு மேலே இருக்கும் அதிகாரிகள் கிட்ட ஒரு விதமாகவும், நமக்கு கீழே வேலை பாக்கறவங்க கிட்ட இன்னொரு விதமாகவும் நாம் பேச்சையும், பழக்க வழக்கங்களையும் கொண்டுள்ளோம்.
அரசியல் சாக்கடை:
அரசியல் இன்னைக்கு சாக்கடை என்ற பெயரிலே நாம் அழைக்கிறோம். அரசியலில் உண்மை, உறுதி, பண்பாடு, சத்தியம், இன்னும் எல்லாவகையான நம்பகத்தன்மையும் சாக்கடை குழியில் மூழ்கிட்டே இருக்கு. எந்த அரசியல்வாதியா இருந்தாலும், அரசியல் கட்சியா இருந்தாலும் மக்களால் தான் நாம் முன்னேறினோம், பதவிக்கு வந்தோம் என்ற அடிப்படை விசயத்தையே மறந்துட்டாங்க. பதவி மற்றும் அதிகார துஸ்பிரயோகத்தால் மக்களிடம் தங்களின் நற்பெயருக்கு களங்கத்தை உருவாக்குகிறார்கள். இந்த கட்சி, அரசியல்வாதி நல்லவனா? அந்த கட்சி, அரசியல்வாதி நல்வனா என மக்கள் பார்க்கும் பார்வை இன்னைக்கு மறஞ்சு போச்சு. யார் மக்களுக்கு சாதகமா இலவச அறிவிப்பு தராங்களோ அந்த கட்சியே ஆட்சியை பிடிக்கும் அவலம் இன்றைய சமூகத்தில் இருக்கு. அந்த இலவசத்திற்கு அடிமையாகி அடுத்த தேர்தலுக்கும் இன்னும் அதிகபடியான இலவசத்தை எதிர்பார்க்கும் அவல நிலைக்கு நாம் ஆளாகியுள்ளோம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காதுன்னே நினைக்கிறேன்.
பாலியல் குற்றங்கள்:
இன்றைய தேதியில் செய்தித்தாள்களின் அநேகமான பக்கத்தை பாலியல் குற்றங்கள் சம்பந்தமான செய்திகளே ஆக்கிரமிக்கின்றன. பெண்களை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்குவது, கடைசியில் கொலை என்ற கொடிய செயல் வரை சென்று விடுகிறது. கடந்த ஏழெட்டு மாதங்களில் நாம் அறிந்த பாலியல் குற்றங்கள் அனைத்தும், வக்கிரம் பிடித்த கூட்டங்களால் நடத்தப்பட்டு உள்ளது. அந்த வக்கிரங்களில் சிலரின் வயது மைனர். மைனர் வயது பையன்கள் பாலியல் குற்றம் புரிய காரணமாக இணையம், டிவி நிகழ்சிகள், சினிமாக்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தியாவில் தினமும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதாக புள்ளிக் கணக்கு சொல்கிறது. பெண்களும் ஆண்களுக்கு இணையாக எல்லாவிதத்திலும் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறி வரும் நாளில், அவர்களை முடக்கி போடும் விசயமாக பாலியல் குற்றங்கள் உள்ளது. பெண்களுக்கெதிரான வன்கொடுமையை தடுத்து நிறுத்த கடுமையான சட்டங்கள் நிறைவேற்ற வேண்டிய காலகட்டம் நெருங்கி விட்டது. அந்த சட்டங்கள் கடுமையான தண்டனையை உள்ளடக்கி இருக்க வேண்டும். பார்ப்போம் பாலியல் பலாத்காரத்தை தடுக்க, ஒழிக்க அரசு இயந்திரம் எவ்வாறு செயல்பட போகிறது என?
ஊழல், பண மோசடி:
பாலியல் குற்றங்கள் போலவே ஊழலும் மன்னிக்க முடியாத குற்றங்களாக நாட்டில் பெருகி விட்டது. எதெற்கெடுத்தாலும் ஊழல், அரசு இயந்திரம் முதல் தனியார் இயந்திரம் வரை கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை ஊழலின்றி அணுவும் அசையாது என்ற நிலையில் ஹவாலா மோசடி, கருப்பு பணம் பதுக்கல், போலி ஆவணங்கள் மோசடி, சுடுகாட்டு கூரை ஊழல், நிலக்கரி ஊழல், போபர்ஸ் ஊழல், அலைக்கற்றை ஊழல் என ஊழல் குற்றங்களை அடுக்கலாம். இன்றைய அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்தாலும் அவர்களை தண்டிக்க முடியாத நிலையில் நமது நாட்டு சட்டம் வலுவாக இல்லையென்றே கருதுகிறேன். குழந்தை பிறக்கும் போதே பிறப்பு சான்றிதழ் வழியாக லஞ்ச ஊழல் அக்குழந்தையை பாதிக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியுமா?
இன்னும் எத்தனை எத்தனை சமூக அவலங்களை நாம் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்?
# குழந்தைகள் அடியெடுத்து வைக்கும் அடிப்படை கல்வியை கூட இன்று பணத்தால் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.
# தற்காலிக வேலைக்கும் கூட லஞ்சம் தர வேண்டிய அவலம்,
# முக்கிய சான்றிதழ் பெற வேண்டிய அரசு அலுவலர்களிடம் லஞ்சம்.
நாமும் நமக்கு சாதகமாக செயல்திட்டங்கள் அமைய லஞ்சம் என்ற அவலத்தையே பயன்படுத்துகிறோம். நம்மிடமிருந்தே லஞ்சம், ஊழல், பண மோசடி ஆரம்பமாகிறது என்றே கருதுகிறேன்.
நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம் என கடுகளவே பதிந்திருக்கிறேன். இத்தகைய சமூக அவலங்களை நம்மால் சீர்படுத்த முடியாது. ஆனால் தவிர்க்க இயலும் என்றே கருதுகிறேன்.
..
..
22 கருத்துரைகள்:
நல்ல கவனிப்பு............
மனிதர்களும் மிருகங்களே
...
survival of the fraudest
யோவ், என்னய்யா இது..புரட்சிப்பதிவர் ஆகிட்டீரு?
இந்த அவசர உலகில் பல நேரங்களில் தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது...
உதாரணம் , போக்குவரத்து காவல் துறை, case போட்டால் அலைய வேண்டும் என்று நாமே லஞ்சம் கொடுக்கிறோம்
நாமும் நமக்கு சாதகமாக செயல்திட்டங்கள் அமைய லஞ்சம் என்ற அவலத்தையே பயன்படுத்துகிறோம். நம்மிடமிருந்தே லஞ்சம், ஊழல், பண மோசடி ஆரம்பமாகிறது என்றே கருதுகிறேன்.//
Where ignorance is bliss it is folly to be wise என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுபோலத்தான் இதுவும். என்னைச் சுற்றிலுமுள்ளவர்கள் அயோக்கியர்களாக இருக்கும் சூழலில் நான் மட்டும் யோக்கியனாக இருந்து என்ன பயன்? என்னை முட்டாள், ஏமாளி, பிழைக்கத் தெரியாதவன் என்கிறார்கள்.
இன்னும் மோசமாகாமல் இருந்தால் சரி...!
உண்மைதான்தவிர்க்கலாம்
mosam..
உண்மைதான் இந்த மாதிரி மோசமான சமூகத்தில்தான் சில நல்லவர்களும் இருக்கிறார்கள்! அதனால்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது! நல்ல பகிர்வு! நன்றி!
நாளுக்கு நாள் இந்தக் கேள்வி மனதில் அச்சத்தைத் தந்த வண்ணமே தான்
இருக்கும் சகோ .உறவுகள் கூட முன்போலிலை என்பது தான் இங்கே
வருத்தப்பட வேண்டிய செய்தி .நாம் எந்தமாதிரியான சமூகத்தில் வாழ்ந்து
கொண்டு இருக்கின்றோம் இந்தக் கேள்விக்குப் பட்டியல் மிகக் கேவலமாக நீண்டுகொண்டே போகின்றது .காரணம் நாம் அழியும் காலம் நெருங்கி விட்டது
என்பது தான் சகோ .சிறப்பான படைபிற்கு வாழ்த்துக்கள் .
ரிஜெக்ட்டட்....இது நம்ம பதிவு அல்ல....!!!!!!!
நாம அந்த மாதிரியான சமூகத்தில் வாழப் பழகிவிட்டோம்...
மாற்றங்கள் வரவேண்டும்...
இதை மாற்ற நாம் ஒவ்வொருவருமே “அந்நியன்“ ஆக வேண்டும் என்று நினைக்கிறேன்.
அம்பானிகளை அனுசரிச்சுப் போனாதான் அமைச்சரா நீடிக்க முடியும் என்ற சூழ்நிலை உள்ள நாட்டில் சமூக ஒழுக்கம் இப்படித்தான் இருக்கும் !வேலியே பயிரை மேய்ந்தால் யாரிடம் முறையிடுவது ?
சமூக அவலங்களின் சாம்பிளே பயங்கரம்;ஆனால் வாழப்பழகி விட்டோம்காலம் ஒரு நாள் மாறும்?
தலைப்ப பார்த்ததும் இங்கயுமா என தோன்றியது ஆனால் பதிவுக்கு ஏற்ற தலைப்பு அண்ணே
ஏக்கம் தான் மிஞ்சும் வாசி !!என்ன செய்ய முடியும்!பார்ப்போம் அரச இயந்திரம் எப்படி செயல்படுகின்றது என்று.
சமூகத்தின் பக்கம் பார்வையை திருப்பியமைக்கு ஒரு சல்ய்யூட். அப்புறம் அசத்துங்க..
அவர்களை லஞ்சம் வாங்கத் தூண்டுவதும் ஒரு வகையில் நாமதான் இல்லையா !!!
அப்படியே,லஞ்சத்தை சட்ட பூர்வமானதாக ஆக்கி விட்டால் ,என்ன?
இத்தகைய சமூக அவலங்களை நம்மால் சீர்படுத்த முடியாது. ஆனால் தவிர்க்க இயலும் என்றே கருதுகிறேன்.
>>
சீர்படுத்த நம்மால் ஏன் முடியாது?! முடியும். இதுக்கு தனி மனித ஒழுக்கத்தை எல்லா விதத்தலயும் கடைப்பிடிச்சா சீக்கிரம் சமூகத்தை சீர்படுத்திடலாம். தனிமனித ஒழுக்கம் என்பது புகை,மது, மாது, மட்டுமில்ல, வரிசையில் நிற்பது, குப்ப்பைஅயை அதற்குரிய இடத்துல கொட்டுவது, தன் அலுவலக வேலையை சரியா செய்வதுன்னு நீளுவதே தனிமனித ஒழுக்கம்
இப்படியான நல்ல பதிவ எதிர் பாக்கிரமுல
சும்மா அரசியலமைப்புச்சட்டங்களையும் அரசியல்வாதிகளையுமே குறைசொல்லிக்கொண்டிருப்பதில் ஒரு பயனுமே இல்லை அண்ணா . நாம் மாறுவோம் , நம்முடன் இருப்பவர்களை முடிந்தவரை மாற்றுவோம் . இதுதான் என் எண்ணம் . அடிப்படை ஆதாரமே நாம் தான் .