வணக்கம் வலை நண்பர்களே,
இரண்டாம் தமிழ் பதிவர் சந்திப்பு விழாவில் பதிவர், பாடலாசிரியர், கவிஞர் மதுமதி தான் எழுதி, இயக்கிய குறும்படம் ஒன்றை திரையிட்டார். சுமார் பத்து நிமிடம் அரங்கத்தில் இருந்த அனைவரின் மனதை கனக்க வைத்த இந்த குறும்படத்தின் பெயர் 90 டிகிரி. இந்தப் படத்தை பற்றி எனது விமர்சனம் இங்கே:
கதை:
பள்ளியில் பாடம் படிக்க ஏழ்மை தடையாக இருந்தாலும், சோர்ந்து விடாமல் தானே முயன்றால் படிப்பை வெல்லலாம் என்பதே கதை கரு.
உடல் நலக் கோளாறில் வேலைக்கு செல்ல இயலாத தந்தை, தாயின் வருமானம் மட்டுமே அந்த குடும்பத்தின் ஆதாரம். அவர்களுக்கு ஒரே ஒரு பெண். பள்ளியில் படிக்கிறாள். கணக்கு பாடத்திற்கு தேவையான பொருளை ஆசிரியர் வாங்கி வரச் சொல்ல அனைவரும் வைத்திருக்கிறார்கள். அவள் வாங்காததால், அடுத்த நாள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவுடன் ஆசிரியரால் வகுப்பிலிருந்து வெளியேற்றப்படுகிறாள்.
வீட்டில் சேமிப்பில் தேடுகிறாள். கொஞ்சம் சில்லறை தேறுகிறது. அதையும் அம்மாவிற்கு தந்துவிட்டு, பணத்திற்கான வழியை தேடி வீதியில் பயணிக்கிறாள். கோவில் வருகிறது. பிச்சைக்காரர்களுடன் முடியை கலைத்து துண்டை விரித்து உட்கார்கிறாள். படம் பார்த்த அனைவரின் மனதை பிழிய வைத்த இடம் இதுதான். 90 ரூபாய்க்காக "கற்கை நன்றே.. கற்கை நன்றே... பிச்சை புகினும் கற்கை நன்றே" என்ற வரியை உண்மையாக்குகிறாள்.
படத்திற்கு பலம் சேர்ப்பது ஒளிப்பதிவு. படம் துவங்கியதும் இரண்டு மின்சார ரயில்கள் செல்லும் சீனிலும், அந்த பெண் நடந்து செல்லும் வழியெங்கும் கேமரா கோணம் அருமை.
படம் முழுதும் இசையே வசனம் பேசியது போல இருந்தது. ஆனால் படத்தின் இறுதிக் காட்சி பின்னணியில் கொஞ்சம் பிசிறடித்தாலும், யூடுப் ரிலீஸில் சரி செய்து விடுவதாக தெரிகிறது.
பள்ளிச் சிறுமியின் நடிப்பு மிக எதார்த்தம். பிச்சை எடுக்கும் போது தலையை கலைத்து விடும் இடத்தில் இயக்குனர் தெரிகிறார்.
இயக்குனர் மதுமதி பற்றி:
குறும்படம் வெளியிடுவதற்கு முதல் நாள். என்னை மதுமதி எடிட்டிங் ஸ்டுடியோவுக்குஅழைத்துச் சென்றார். சிறு சிறு கரெக்சன் மதுமதி சொல்ல எடிட்டர் மிக பரபரப்பாக படத்தை சீர் படுத்திக் கொண்டிருந்தார். அந்த இடத்தில் மதுமதியை ஒரு இயக்குனராக பார்த்தேன். இரண்டு வினாடிகள் மட்டுமே வரும் ஒரு scene -க்கு மாற்றங்கள் சொல்லி படத்தை மெருகேற்றினார்.
தனது முதல் குறும்படத்தில் மதுமதி வெற்றி பெற்று விட்டதாகவே உணர்கிறேன்.
90 டிகிரி படத்தின் டீசர் பார்க்க:
பதிவர் சந்திப்பு பற்றிய எனது பதிவுகள்:
9 கருத்துரைகள்:
அட, இப்பதான் நான் இந்த வீடியோ இணைப்பை என் தளத்தில் சேர்த்தேன்.... நன்றி..
பிச்சை புகினும் கற்கை நன்றே எனும் வரிகளுக்கேற்ப குறும்பட காட்சிகள் அற்புதம்... மனதை கலங்க வைத்தது...
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு (408)
கவிஞர் மதுமதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
சாதா வெற்றி அல்ல.. அதிரி புதிரி வெற்றி அது..
(ஆசிரியர் வெளியேற்றும் போது அடுத்த வகுப்பில் "பிச்சை புகினும் கற்கை நன்றே" என்று தமிழ்ப் பாடம் உரைக்கப் படும் இடத்தில் திரைக்கதை பலப் படுகிறது.
இயக்குனர் மதுமதி கலக்கீட்டார்..
பிச்சை எடுப்பது போன்ற காட்சி திரைக்கதை அமைப்பில் கடைசியாக வந்திருந்தால் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும்.இருந்தாலும் நல்முயற்சிக்கு வாழ்த்துகள்..!!
நல்லா இருந்துச்சு
பலரையும் கண்கலங்க வைத்தது படம்! அருமையான படம்! பகிர்வுக்கு நன்றி!
நல்ல படைப்பு சந்தேகமே இல்லை.
பாராட்டிய அனைவருக்கும் விமர்சனம் எழுதிய தோழர் பிரகாஷூக்கும் எனது அன்பு நன்றிகள்..
அருமையாக இருந்தது.டீசரே இந்த அளவுக்கு ஈர்த்துடிச்சு.முழுசாப் பாக்கணும்,பகிர்வுக்கு நன்றி பிரகாஷ்!