எம்மாம் பெரிய எலி? கொழுகொழுன்னு சும்மா ஒரு மாசமா தண்ணி காட்டுன எலி. டிவிக்கு பின்னாடி, பீரோவுக்கு பின்னாடி, கட்டிலுக்கு பின்னாடி, இப்படி வீட்டுல எல்லாத்துக்கு பின்னாடியும் போயி ஒளிஞ்சுக்கிட்டிருந்த எலி, நேத்து எலிப் பொறிக்கு உள்ளேயும் ஒளிஞ்சுக்கிருச்சு. அட, ஆமாங்க... எலிப் பொறி வச்சு எலிய பிடிச்சுட்டோம்ல.
இந்த எலி புடிச்ச கதையை கேளுங்க, மக்கா... இந்த எலி பகல்ல எங்க இருக்குன்னு தெரியல. நைட் ஆச்சுன்னா கரெக்டா வந்திரும். அங்க தாவும், இங்க தாவும், என்னத்தையாவது கர்க்.. கர்க்... கர்க்...ன்னு கடிச்சுகிட்டு இருக்குற சத்தம் மட்டும் கேட்கும். அந்த எலியை எப்படியாவது பிடிச்சே தீரனும்னு நானும் முடிவு பண்ணினேன். எலியை பிடிக்கறதுக்கென்னே மரக்கட்டையில செஞ்ச பொறி வீட்டுல இருந்த ஞாபகம். ரொம்ப நாளுக்கு முன்னாடி வாங்குனது. எங்க இருக்குன்னு தெரியாம அதை எடுக்க முடியல. ஆனாலும் இந்த எலி இம்சையினால அந்த பொறியை தேடி எடுக்க வேண்டி பரண் மேல தேடினேன். ஒரு மூலையில அது இருந்துச்சு. ஆகா, எலி மாட்டுச்சுன்னு சந்தோசப்பட்டு பொறியை எடுத்து தொடச்சு ஒரு தேங்காய்ச்சிள் வச்சு டெஸ்ட் பண்ணிப் பார்தேன். டெஸ்ட் ஓகே ஆச்சு. சரி, பொறியை எங்க வைக்கலாம்னு தேடி, அதாவது எலி வர்ற இடம் பாத்து வைக்கனும்ல, எப்படியோ ஒரு இடத்துல வச்சேன். அடுத்த நாள் பாத்தா ம்ஹும்... எலி நம்மள விட புத்திசாலி, அன்னைக்கு மாட்டல. அடுத்த நாள் வேற இடத்துல வச்சேன். அப்போதும் மாட்டல. இப்படியே ஒரு வாரம் நானும் பல இடத்துல பொறியை வச்சு வச்சுப் பார்த்தேன். சிக்கவே இல்லைங்க.
அதனால நானும் எலி புடிக்க முடியாதுன்னு சோர்ந்து போயிட்டேன். ஆனா அங்க அங்க எலி மட்டும் கண்ணுல படும். அப்ப மறுபடியும் வந்துச்சு வேகாளம். இந்த எலியை விடக்கூடாதுன்னு மறுபடியும் ஒவ்வொரு இடமா வச்சு வச்சுப் பார்த்தேன். மாட்டவே இல்லை. நேத்து நைட்டு பரண் மேல கர்க்.. கர்க்...ன்னு ஒரு சத்தம். ஒரு ஸ்டூலை போட்டு என்னான்னு ஏறிப் பார்த்தா ஒரு அட்டைப் பெட்டி மட்டும் லேசா ஆடிட்டு இருந்துச்சு. அங்க தான் எலி இருக்குன்னு கன்பார்ம் பண்ணினேன். அப்புறமா அந்த எடத்துல எலிப்புளுக்கையா இருந்துச்சு. ஒரு வேளை அந்த இடம் தான் எலி டெய்லியும் தங்குற இடமா இருக்கும்னு முடிவு பண்ணி, இதுவரைக்கும் தரையில வச்ச பொறியை அந்த இடத்துல வச்சேன். பொறி கொக்கியில தேங்காச்சிள் மாட்டி வச்சேன்.
நைட் டப்புன்னு அந்த பொறி மூடுன சத்தம் கேட்டுச்சு. எலி மாட்டுச்சா, இல்லையான்னு தெரியலையே...? காலையில மொத வேலையா அந்த பரண் மேல ஏறிப் பார்த்தேன். சக்சஸ்..சக்சஸ்... எலி உள்ளார மாட்டியிருந்துச்சு. ஆனா தேங்காய்சிள் எல்லாத்தையும் தின்றுச்சு போல. கொஞ்சம் கூட இல்லை. அந்த எலியை மெதுவா ஒரு சின்ன சாக்குல பிடிச்சு வீட்டுல இருந்து கொஞ்சம் தூரத்துல கொண்டு போயி முள்ளு காட்டுக்குள தூக்கி எறிஞ்சுட்டேன். மறுபடியும் வீடு தேடி வராதுன்னு ஒரு நம்பிக்கை தாங்க.
எப்படியோ ரொம்ப நாளா தண்ணி காட்டிட்டு இருந்த எலியை புடிச்சாச்சு. ம்ஹும்... இதுல இருந்து என்னா சொல்றேன்னா முயற்சி செய்யணும். செஞ்ச முயற்சி வீண் போகாது.
அப்புறமா ஒண்ணு சொல்றேனுங்க, இந்த பதிவு எழுதிட்டு இருந்தப்போ ஒரு ஓரமா குட்டி எலி ஒண்ணு ஓடுச்சு. அடங்கோ, மறுபடியும் எலி வேட்டையை ஆரம்பிக்கணுமா?