நண்பர்களே,
நேத்து நைட் வீட்டுல இட்லி செஞ்சாங்க. நமக்கு இட்லி அவ்வளவா பிடிக்காது. அதனால தோசை வேணும்னு சொல்லிட்டே தண்ணீர் பாட்டிலை பிரிட்ஜ்ஜை தொறந்தேன். அங்க மூணு முட்டை இருந்துச்சு. அதைப் பார்த்த உடனே எனக்குள் இருந்த சமையல் கலைஞன் எந்திரிச்சுட்டான். ஆமாங்க, முட்டை கலந்து சில்லி இட்லி ரொம்ப நல்லாவே செய்வேன். அதனால சில்லி இட்லி செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன். காலையில் செய்த மீந்து போன இட்லியா இருந்தாலும் பரவாயில்லை. பிரஷ் இட்லியா இருந்தாலும் பரவாயில்லை. நாலஞ்சு இட்லி, கொஞ்சம் மட்டன் குழம்பு இருந்தாலே போதும். சரி, வாங்க செய்முறையை பார்ப்போம்.
தேவையானவை:
இட்லி - 5
முட்டை - 3 or 4
பெரிய வெங்காயம் - 3
மட்டன் குழம்பு ஒரு கப்
இடித்த மிளகு தூள் தேவையான அளவு.
உப்பு தேவையான அளவு
கடுகு உளுந்து சிறிது.
நல்லெண்ணெய் தேவையான அளவு
கருவேப்பிலை கொஞ்சம்.
மிளகாய் பொடி தேவைப்படின்
இனி செய்முறை:
ஒரு தட்டில் இட்லியை நன்றாக உதிர்த்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் நல்லெண்ணெய் தேவையான அளவு ஊற்றி, கடுகு உளுந்து, கருவேப்பில்லை, நறுக்கி வைத்த வெங்காயம் போட்டு வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் அதில் முட்டையை உடைத்து ஊற்றவும். கட்டி சேராத அளவுக்கு முட்டைகளை கிளறிய பின்னர், உதிர்த்து வைத்த இட்லியை போட்டு மீண்டும் கிளறவும். பிறகு குழம்பு கரண்டியில் நான்கைந்து முறை மட்டன் குழம்பை இட்லி, முட்டை கலவையில் ஊற்றி மீண்டும் கிளறவும். ஓரளவு மட்டன், முட்டை, இட்லி என அனைத்தும் நன்றாக கிளறிய பின் இடித்து வைத்த மிளகு தூள் சேர்த்து மீண்டும் கிளறவும். மிளகு காரம், மட்டன் குழம்பின் காரம் இருப்பதால் தனியாக மிளகாய் தூள் சேர்க்க தேவையில்லை. ஆனாலும் காரம் கொஞ்சம் குறைவாக இருந்தால் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். இட்லி நன்றாக உதிரியாக வந்த பின் அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான சில்லி இட்லி ரெடி. சூடாக பரிமாறி சைடு டிஷ் ஆக மட்டன், சிக்கன் சுக்கா வைத்து சாப்பிட்டால் சுவையோ சுவை.
வீட்டுல எல்லோரும் நல்லா டேஸ்ட்டா இருந்துச்சுன்னு சொன்னாங்க நெஜமாவே.
பின்குறிப்பு:
சிக்கன் குழம்பு இருந்தாலும் பயன்படுத்தலாம். ஆனாலும் மட்டன் குழம்பு பயன்படுத்தினால் தான் டேஸ்ட் நல்லா இருக்கும்.
இந்த சில்லி இட்லி மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள முதலியார் இட்லிக் கடையில் சூப்பரா செய்வாங்க. அங்க சாப்பிட்டு ரொம்பவே பிடித்து போயி நானே செய்ய கற்றுக் கொண்டேன். ஹி..ஹி...