பழங்காலம் முதல் இக்கால தமிழர்களின் தொன்றுதொட்ட வீர விளையாட்டு இது. வாடி வாசலிலிருந்து சீறி வரும் காளையை இளைஞர்களில் தனியொருவர் காளையின் திமிலை பிடித்து கொண்டோ, காளையின் கொம்பை பிடித்தபடியோ, காளையின் கால்களை கவட்டை போட்டு தடுமாற வைத்தோ காளையை பிடி விடாமல் சிறிது தூரம் வரை செல்வது அந்த இளைஞரின் வீரத்தை நிரூபிக்கும் செயலாகும். அந்த வீரருக்கு பரிசுகள் குவியும். இவ்வாறு காளையை அடக்கும் விழா பொங்கல் நாளன்று மதுரைப்பக்கம் துவங்கும்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், துள்ளி பாய்ந்த காளைகளை, அள்ளி அடக்கிய இளைஞர்கள், பரிசு மழையில் நனைந்தனர்.
அலங்காநல்லூர் காளியம்மன், முனியாண்டி கோவில் திருவிழாவில் நடக்கும் ஜல்லிக்கட்டு, உலக பிரசித்தி பெற்றது. அவனியாபுரம், பாலமேடை தொடர்ந்து, இந்த ஆண்டின் இறுதி ஜல்லிக்கட்டு என்பதால், அலங்காநல்லூரில் கூட்டம் அலைமோதியது.
போட்டிக்கு, 464 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இதில், 17 காளைகள் நீக்கம் செய்யப்பட்டன. 559 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்ததில், போதை பொருள் பயன்படுத்திய ஐந்து பேர், நீக்கப்பட்டனர். சிலர் வராததால், 493 பேர் களத்திற்கு வந்தனர். காலை 9.15 மணிக்கு, சுவாமி மாடுகளுக்கு பூஜை செய்த பின், மாடுபிடி வீரர்கள், களத்திற்கு அழைக்கப்பட்டனர். அனைவரும் வெள்ளை நிற, "டி ஷர்ட்' அணிந்திருந்தனர்.
மாடுகள் முட்டியதில், 36 வீரர்கள் காயம் அடைந்தனர். நான்கு பேர், படுகாயங்களுடன் மதுரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மதியம், 3.50 மணிக்கு, ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது.
மதுரை மாவட்டம் பாலமேட்டில், நேற்று நடந்த ஜல்லிக்கட்டில், 355 காளைகள் சீறி வந்து, ஆக்ரோஷமாக பாய்ந்தன. காளைகளை அடக்க முயன்ற, ஆறு வீரர்கள் படுகாயமடைந்தனர். 20 பேர் லேசான காயம் அடைந்தனர். பாலமேடு மஞ்சமலையாற்றில், காலை 10 மணிக்குத் துவங்கிய ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், முதலில், ஐந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 10.15 மணி முதல், வாடிவாசல் வழியாக மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள், பச்சை நிறத்தில் சீருடை அணிந்திருந்தனர். மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றன. பாதுகாப்புப் பணியில், 1,500 போலீசார் ஈடுபட்டனர்.
காளைகளை அடக்க களத்தில் இறங்கும் வீரர்கள்
கூரிய கொம்புகள், வெறியும் பயமும் கலந்த பார்வை, மிரட்டும் திமில்களுடன் காளைகள் களத்தில் இறங்கின. பயிற்சி பெற்ற வீரர்கள், "வந்து பார்...' என, திமில்களை பிடித்தும், காளையின் கால்களை தங்களின் கால்களால் மடக்கியும் அடக்கினர். வீரர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், மிக்சி, கிரைண்டர், சைக்கிள், பீரோ, பணம் பரிசுகளாக வழங்கப்பட்டன.பிடிபடாத மாடுகளின் உரிமையாளருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.
சீறும் காளைகள் முட்டிக் கொள்ளும் காட்சி
ஊமச்சிகுளம் வினோத், சின்ன ஊர்சேரி தினேஷ், முடக்கத்தான் மணி, அரிட்டாபட்டி கருப்பணன் போன்ற வீரர்கள், சீறிய காளைகளை, லாவகமாக அடக்கி, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியதுடன், பரிசுப் பொருட்களையும் அள்ளிச் சென்றனர். கீழசின்னாளபட்டி பாஸ்கர், நான்கு மாடுகளைப் பிடித்து, பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றார். மாலை 4.10 மணிக்கு ஜல்லிக்கட்டு முடிந்தது. இதில், 355 மாடுகள் பங்கேற்றன. விதி மீறல் காரணமாக, 35 மாடுகள், சோதனையின் போது தகுதியிழப்பு செய்யப்பட்டன.
பொங்கல் பண்டிகையின் சிறப்பு நிகழ்வாக, பாரம்பரிய விளையாட்டாக தொடரும் ஜல்லிக்கட்டு, அரசின் பல்வேறு கெடுபிடிகளுக்கு நடுவில், மதுரை அவனியாபுரத்தில் நேற்று கோலாகலமாக நடந்தது. ஜல்லிக்கட்டிற்கு தடை கோரி பிராணிகள் நல வாரியம், விலங்குகள் நல ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்த நிலையில், நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த ஐகோர்ட் அனுமதியளித்தது. ஜல்லிகட்டு இந்தாண்டு நடக்குமா? என்ற சந்தேகத்தில் இருந்த மாடுபிடிவீரர்கள் நேற்று அவனியாபுரத்தில் உற்சாகத்துடன் களம் இறங்கினர். கலெக்டர் சகாயம், எஸ்.பி., ஆஸ்ரா கர்க், மத்திய பிராணிகள் நலவாரிய நிர்வாகிகள் தலைமையில் ஜல்லிக்கட்டு துவங்கியது. சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் விழாக்குழு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலில் நாட்டாமைகளின் மாடுகள் களம் இறங்கின. இவற்றை வீரர்கள் பிடிக்க கூடாது என அறிவிக்கப்பட்டது. அதன் பின் தொடர்ச்சியாக 260 மாடுகள் களத்தில் இறங்கின.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மாடுகள் பங்கேற்றன. சீருடை அணிந்த வீரர்கள் மட்டும் மாடுகள் பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு வழக்கம் போல் மிக்சி, கிரைண்டர் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன.
அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் ரோட்டில் குருநாதன் கோயில்முன் வாடி வாசல் அமைக்கப்பட்டது. அப்பகுதி தார் ரோடாக உள்ளதால், காளைகள் வழுக்கி விழுந்துவிடாமலும், வீரர்கள் தவறிவிழுந்து காயம் அடையாமலும் இருக்க, வாடிவாசல் முதல் 200 அடி தூரத்திற்கு தேங்காய் நார் போடப்பட்டது.காலை 10.30மணிக்கு பூஜைகள் முடிந்து, கலெக்டர் காமராஜ் துவக்கி வைத்தார். முதலில் சுவாமி மாடுகள், நாட்டாமை, கிராமத்தினர் மாடுகள் வாடிவாசல் வழியாக திறந்து விடப்பட்டன.
தொடர்ந்து மதுரை, திருச்சி, விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த 154 மாடுகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன. 131 வீரர்கள் காளைகளை பிடிக்க பெயர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் மூன்றுபேர் 21வயதிற்கு குறைவாக இருந்ததாலும், இரண்டுபேர் போதையில் இருந்ததாலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.பல காளைகள் சீறிப்பாய்ந்து, வீரர்களிடம் பிடிபடாமல் ஏமாற்றி சென்று பரிசுகளை பெற்றன. எனினும் காளைகளை வீரர்கள் திறமையாக பிடித்து பரிசுகள் பெற்றனர். இந்த ஜல்லிக்கட்டில் 42 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களில் 12 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பார்வையாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.