சண்டே எப்பவுமே லீவ் நாள் தான். அதனால என் சொந்த ஊருக்கு போயிருந்தேன். சண்டே காலையில் தான் போனேன். காலையிலும், மதியமும் நல்ல சாபிட்டுட்டு கொஞ்சம் நேரம் தூங்கிட்டு (முதல் நாள் கம்பெனியில் நைட் ஷிப்ட் டூட்டி பார்த்திருந்ததால் தூக்கம் உடனே வந்திருச்சு) மறுபடியும் மதுரைக்கு கிளம்பிட்டேன். சாயிந்தரம் ஆறு மணி இருக்கும், பஸ் ஸ்டாப்புக்கு வந்தேன். ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு ஒரு தனியார் பஸ் புல் கூட்டமா வந்து நின்னுச்சு. பயங்கர ஸ்பீடுல போறதுனால எப்பவும் கூட்டம் தான். கூட்டம் அதிகமா இருந்ததுனால நான் ஏறல. அடுத்து எப்படியும் கவர்மென்ட் பஸ் வரும். அதுல கூட்டம் இருக்காது. ஏன்னா அவங்க ஸ்பீட் கம்மி தான். எனக்கு எப்படி அடுத்த பஸ் கவர்மென்ட் பஸ் தான் வரும்னு தெரியும்னு கேட்கறிங்களா? நான் ஸ்கூல், காலேஜ் படிச்சா காலத்துல இருந்து அந்த டைம் எனக்கு பழகிப் போச்சு. வேற ஒன்னும் இல்லை.
நான் யூகிச்ச மாதிரியே கவர்மென்ட் பஸ் வந்துச்சு. ரெண்டு மூணு பேர் ஸ்டான்டிங். நானும் கொடைரோட்டில் ஆட்கள் இறங்குவாங்க உட்கார்ந்துக்கலாம்னு நெனச்சு ஏறினேன். மதுரை, திண்டுக்கலுக்கு இடையில் இறங்குறவங்களை பஸ் கண்டக்டர் கடைசி ரெண்டு மூணு சீட்டுல உட்கார சொல்லுவாங்க. அதனால கொடைரோட்டில் இடம் கிடைக்கும்னு பின் படிக்கட்டு பக்கத்தில் நின்னுட்டேன். நான் நெனச்ச மாதிரியே பஸ் ரொம்ப ஸ்லோ டிக்கெட் எடுத்திட்டு காதுல மொபைல் ஹெட்போனை மாட்டிட்டு பாட்டு கேட்க ஆரம்பிச்சேன். பஸ்ல டிவி இருந்துச்சு. இருந்துச்சு மட்டும் தான். ஒன்னும் போடல. நான் நின்னுட்டு இருந்ததுக்கு பக்கத்துக்கு சீட்டில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ரொம்ப நெருக்கமா உட்கார்ந்து ரொம்ப சுவாரஸ்யமா பேசிட்டு இருந்தாங்க. நானும் புதுசா கல்யாணம் ஆனா ஜோடிகள்ன்னு நெனச்சிட்டு இருந்தேன். கொடைரோடு போகாம பஸ் பைபாஸ் மேம்பாலம் ஏறுச்சு . ஆகா, கொடைரோட்டில் சீட் கிடைக்கும்னு இருந்த நம்பிக்கை வீணா போச்சு.
அடுத்து வாடிப்பட்டி தான். அங்க யாராச்சும் இறங்கினா இடம் உண்டுன்னு நெனச்சிட்டு அந்த ஜோடியை பாக்க ஆரம்பிச்சேன். உனக்கு இது தேவையான்னு நீங்க கேட்கலாம். வேற வழி, எதையாவது வேடிக்கை பார்த்தாதானே பொழுது போகும். ஒருத்தர் மடியில ஒருத்தர் சாஞ்சுக்றதும், காதுக்கு பக்கத்துல ஏதோ குசுகுசுன்னு பேசிக்றதுமா இருந்தாங்க. மொபைலை வச்சு மாத்தி மாத்தி பிடிச்சு விளையாடுறதுமாய் இருந்தாங்க. நல்லா காதல் காட்சி ஓடிட்டு இருந்துச்சு. பொது இடம்னு கூட பாக்காம யாரையும் கண்டுக்கிறாம அவங்க பாட்டுக்கு அவங்க வேலையை பார்த்துட்டு இருந்தாங்க . ஹி...ஹி…. நானும் என் வேலையை பார்த்துட்டு இருந்தேன். வாடிப்பட்டி வந்துச்சு. யாராச்சும் இறங்க எந்திரிப்பாங்களான்னு ஒவ்வொருத்தரா பார்த்தேன். நல்ல வேளை நான் நின்னுட்டு இருந்ததுக்கு பக்கத்துக்கு சீட்டில் ரெண்டு பேரு இறங்கினாங்க. அப்பாடா ஒரு வழியா உட்கார இடம் கிடைச்சுசுன்னு சந்தோசப்பட்டேன். மொத நின்னுட்டு படம் பார்த்த நான் இப்ப உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பிச்சேன். அவ மடியில இவன் சாஞ்சுக்றதும், அப்புறம் இவன் மடியில அவ சாஞ்சுக்றதுமா இருந்தாங்க. பஸ்சும் ரொம்ப ஸ்லோவா போய்ட்டு இருந்துச்சு. பைபாஸ் ஒன் வேயா இருந்தும் ஸ்பீடா போகல. ஒரு வேளை அவங்களுக்காகவே ஸ்லோவா போகுதோ என்னவோ? ஒரு வழியா மதுரை என்டர் ஆச்சு. ஆனா அவங்க காதல் விளையாட்டை நிறுத்தல. ஒரு மணி நேரத்துல வர வேண்டியவன் ஒன்னே கால் மணி நேரம் எடுத்துகிட்டான். (உட்கார இடம் கிடைக்கும்னு தானே இந்த பஸ்ஸில் நீ ஏறுனேன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது )
குரு தியேட்டர் ஸ்டாப்பில் கொஞ்ச பேர் இறங்குனாங்க. அடுத்த ஸ்டாப் கிராஸ் ரோடு. அந்த ஜோடிங்க இறங்க பேக்கேல்லாம் எடுத்துட்டு இறங்க ரெடியாச்சு. நானும் அந்த ஸ்டாப்பில் தான் இறங்கனும். பஸ்ஸில் இருந்து இறங்கிட்டு திரும்பி பார்த்தா அவன் மட்டும் இறங்கியிருந்தான். அந்த பொண்ணு இறங்கல. பஸ்சும் கிளம்பிருச்சு. அவன் கை அசைக்க அந்த பொண்ணும் கை அசைத்தாள். அப்ப தான் எனக்கு ஒன்னு புரிஞ்சுச்சு. அவங்க புது தம்பதிகள் இல்லை (புது தம்பதிகள் தான் அப்படி இருப்பாங்களான்னு டவுட் கேட்க கூடாது), காதலர்கள்னு பஸ்ல சவுகார்யமா உட்கார்ந்துட்டு எப்படியெல்லாம் லவ் பன்றாங்கைய்யா?
அப்ப தான் எனக்கு இன்னொரு சம்பவம் ஞாபகம் வந்துச்சு. போன மாசம் லீவுல என் ஊருக்கு போயிருந்தப்ப ஒரு வேலையா திண்டுக்கல் போயிருந்தேன். அப்பவும் சீட் கிடைக்காம நின்னுட்டு இருந்தேன். பேகம்பூரில் ஒரு பையனும், பொண்ணும் இறங்கினாங்க. எனக்கு உட்கார இடம் கிடைச்சுச்சு. ஆட்கள் இறங்கியதும் பஸ் மெதுவா நகர ஆரம்பிச்சுச்சு. அப்ப கண்டக்டர் அவரா ஒரு வார்த்தை சொன்னாரு பாருங்க, மதுரையில் இருந்து அதுக ரெண்டு பெரும் ஒன்னு மன்னா சேர்ந்து உட்கார்ந்து வந்துச்சுக, இப்ப இறங்கி ஆளுக்கு ஒரு திசையில் போகுதுன்னு சொன்னாருங்க. இதுகல நம்பி வீட்டுல பெத்தவங்க நம்ம பொண்ணு நல்ல பொண்ணு, நம்ம பையன் நல்ல பையன்னு நம்பிக்கிட்டு இருப்பாங்க. ஆனா அவங்க நம்பிக்கையை இது மாதிரியான ஆட்கள் தூள் தூளாக்கிருவாங்க.
லவ் பண்ணுங்க, ஏன் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிட்டு அப்புறமா பெத்தவங்க கால்ல விழுங்க. நான் வேணாம்னு சொல்லல. ஆனா இது மாதிரியான பொது இடங்களில் நாலு பேர் பாக்கிற மாதிரி மோசமா நடந்துக்க வேணாம். என்னை மாதிரி எத்தனை பேர் இவங்க பண்ணின செய்கைகளை பார்த்திருப்பாங்க? அவங்க என்ன நெனச்சிருப்பாங்க? ஆகவே காதலர்களே காதலியுங்கள். அந்த காதல் பொது இடங்களில் உங்கள் இருவருக்கு மட்டுமே தெரியட்டும். மற்றவர்களுக்கு தெரியும்படி காதலிக்க வேண்டாம்.