ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் உள்ளிட்டவற்றில் நர்சுகளின் தேவை அதிகம் உள்ளது. இந்தியா, சீனா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நர்சிங் மாணவியர் ஆஸ்திரேலியாவில் பணிபுரிய சென்றுள்ளனர். ஆனால், போதிய ஆங்கில அறிவு இல்லாததால், அவர்களை திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.ஆஸ்திரேலியாவில் பணிபுரிவதற்கு குறைந்தபட்ச ஆங்கில அறிவு போதாது என்று கூறி, அந்நாட்டு அரசு, விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி, நர்சிங் மாணவியர் சர்வதேச ஆங்கில அறிவு பரிசோதனை முறையில் குறைந்தப்பட்சம் 6.5 புள்ளிகள் பெற வேண்டுமென நர்சிங் மற்றும் மகப்பேறு மைய வாரியம் தெரிவித்துள்ளது. அதாவது, அம்மாணவியர் ஆங்கில பேச்சு திறமையில் அதிகபட்ச அறிவை பெற்றிருக்க வேண்டும்.இந்த அதிரடி நடவடிக்கையால், இந்திய மாணவியர் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த, 400 நர்சிங் மாணவியர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.பாதிக்கப்பட்ட மாணவியருக்கு, "ஆஸ்திரேலிய நர்சிங் கூட்டமைப்பு' ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
இது குறித்து, அந்த கூட்டமைப்பின் செயலர் லிசா பிட்ஸ்பாட்ரிக் கூறுகையில், "அரசின் இந்த நடவடிக்கையால், ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும், பெரும்பாலான இந்திய மாணவர்கள் கடன் வாங்கி தங்கள் படிப்பை முடித்து விட்டு, தங்கள் வீட்டை விற்று அந்த பணத்தில் ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளனர் என்றும், அவர்களின் ஊதியத்தின் மூலம் தான் அவர்கள் அவற்றை திரும்ப பெற முடியும்' என்றார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியர் கூறியதாவது:பெரும் பணத்தை செலவு செய்து நாங்கள் இங்கு வேலைக்காக வந்துள்ளோம். ஆனால், அரசு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், இந்த நடைமுறையை கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்த தொடங்கியுள்ளது. நர்சாக பதிவு செய்யவும், வேலைக்காகவும் பெரும் தொகை செலவு செய்துள்ளோம். ஆனால், எங்களை பதிவு செய்யவும் இல்லை. வேலை வழங்கவும் இல்லை.இவ்வாறு மாணவியர் கூறினர்.
ஆஸ்திரேலியாவை தொடர்ந்து, பிரிட்டனும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பிரிட்டனின் வசிப்பதற்கோ அல்லது பணிபுரிவதற்கோ ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டுமென அந்நாடு தெரிவித்துள்ளது. இந்த தேர்வுகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிரிட்டனில் வேலை விசா பெறவோ அல்லது குடியுரிமை பெறவோ முடியும்.
1 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - அது சரி - தவறில்லை எனச் சொல்லலாம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா