வந்தாச்சு 24 மணி நேர கிரெச்!
‘‘அவருக்கு ரயில்வேயில் வேலை; அடுத்த மாதம் டிரான்ஸ்பர், திண்டுக்கல்லுக்கு. குழந்தை, குட்டியோடு இப்படி மாறிண்டே இருக்கிறது எனக்கு வாடிக்கையாப் போச்சு...’’
இப்படி அலுத்துக்கொள்பவர்கள் உங்களில் பலர் இருக்கத்தானே செய்கிறீர்கள். உங்கள் வாரிசுகளுக்கும் இந்த பிரச்னை இருக்கக்கூடும். ஆனால், ஒரு வித்தியாசம்... உங்கள் கணவருக்காவது மதுரையிலிருந்து திண்டுக்கல்தான்; ஆனால் அவர்களின் பிரச்னை இன்னும் எல்லைமீறக்கூடியது! கணவனுக்கு சுவிட்சர்லாந்தோ, மனைவிக்கு அமெரிக்காவோ இருக்கும். அல்லது ஒருவர் சென்னை என்றால், மற்றவர் பிரிட்டனுக்குப் பறக்க வேண்டியிருக்கும். இப்படி இருந்தால், தனியாக வாழ நேரும் அந்த மனைவி, வேலைக்கும் போய்க்கொண்டு, குழந்தையை எப்படி பராமரிக்க முடியும்? அதிலும் சாஃப்ட்வேர் பணி என்றால் போதும், 12 மணி நேரத்துக்குக் குறையாமல் ஆபீசில், கம்ப்யூட்டரையே கட்டிக்கொண்டு அழ வேண்டியதுதான்! இப்படிப்பட்டவர்களுக்குக் கைகொடுக்கத்தான், ‘24 மணி நேர கிரெச்’ வந்து விட்டது. கிரெச் என்பதும் மேற்கத்திய அறிமுகம்தான். ஆனால், காலையில் ஆரம்பித்து மாலை ஆறு மணி வரை & அதாவது பெற்றோர் ஆபீசிலிருந்து திரும்பிவரும் வரை பராமரிக்கும் மையமாகத்தான் இது இருந்து வந்தது. ஆனால், இப்போது சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் 24 மணி நேர மையங்கள் பரவி விட்டன.
சாஃப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்ற வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறும் பல பெற்றோருக்கு உதவியாக இருந்த இந்த மையங்கள், இப்போது நம்ம சாஃப்ட்வேர் இளைய தலைமுறையினருக்கும் கைகொடுக்க ஆரம்பித்து விட்டன. இந்த மையங்களில் குழந்தைகளை சேர்த்து விட்டால் போதும்... 24 மணி நேரமும் பராமரிப்பு அந்த மையத்தைச் சேரும். வீட்டில் பார்த்துக்கொள்வதைவிட பல மடங்கு கவனிப்பு, பராமரிப்பு இருக்கிறது. மாதக் கட்டணம் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து எட்டாயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. அதற்கேற்ப உணவு, பராமரிப்பு, பொழுதுபோக்கு வசதிகள் மாறும்.
என்ன பிடிக்கும்?
இப்படிப்பட்ட மையங்களில் குழந்தைகளை சேர்ப்பதற்குமுன் செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளம்... உங்கள் குழந்தைக்கு என்னென்ன பிடிக்கும் என்று ஒரு தனி கேள்விப் பட்டியலே உள்ளது. மையத்தில் அதை வாங்கி, அதில் ‘டிக்’ அடித்துத் தரவேண்டும். காலை எழுந்ததும் என்ன பிரஷ்ஷில் எந்த டூத் பேஸ்ட் தேய்க்க கொடுக்க வேண்டும், காபியா, ஹார்லிக்ஸா, பூஸ்ட்டா என்பதில் ஆரம்பித்து, காலை சிற்றுண்டி, பகல் உணவு மெனு, மாலை நொறுக்ஸ், இரவு டின்னர் பட்டியல், தூங்கும்போது என்ன கதை சொல்ல வேண்டும் என்பது வரை இந்த பட்டியலில் எழுதித் தந்துவிட வேண்டும். சில மையங்களில் என்னென்ன மெனு என்பதுடன், குழந்தைகள் நல மருத்துவர்கள் குழுவையும் வைத்துள்ளனர். அவர்கள் அடிக்கடி குழந்தைகளைப் பரிசோதித்து, வைட்டமின், இரும்புச்சத்து வகையறாக்கள் உட்பட ஆரோக்யமான மெனுவையும் எழுதித் தருகின்றனர்.
கண்காணிப்பு கேமரா
இந்த மையங்களில் கண்காணிப்பு
கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. குழந்தைகளை விட்டுச்செல்லும் தம்பதிகள், தங்களின் செயற்கைக்கோள் தொடர்புடன் கூடிய ஜி.பி.எஸ் வசதியுள்ள கம்ப்யூட்டர் இணைப்பில் தங்கள் குழந்தையைக் கண்காணிக்கலாம். மையத்தில் குழந்தை அடம் பிடிக்கிறதா, மைய ஊழியர்கள் கண்டிக்கின்றனரா, குழந்தைக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படுகிறதா என்பதை எல்லாம் கம்ப்யூட்டர் வழியாகவே பார்க்கலாம். அதற்கேற்ப மையத்தையும் தேர்ந்தெடுக்கலாம். பெங்களூர் நகரில் உள்ள பெரும்பாலான மையங்களும் இப்படி ஜி.பி.எஸ் இணைப்பு கொண்ட கேமரா வசதியுடன்தான் இயங்குகின்றன. இதனால், தவறுகள் நடக்காமல் தடுக்க வழி ஏற்படுகிறது.
யூத் தம்பதிகள் டென்ஷன்
இதுவரை இருந்த தலைமுறையினருக்கு இல்லாத கஷ்டங்கள் இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு உள்ளது. அவர்களுக்கு இது நல்லது, இது கெட்டது என்று பிரித்துச் சொல்ல கூட்டுக்குடும்பம் இல்லை. எல்லா நல்லது கெட்டதும் டிவி மூலம் வரவேற்பறையிலும், கம்ப்யூட்டர் மூலம் இன்டர்நெட்டிலும் வந்து விழுகின்றன. தங்களைச் சுற்றி நல்லதும் கெட்டதும் கலர் கலராய் வலம் வரும்போது, அதையும் தாண்டி ஒழுக்கத்துடன், முறையுடன் வாழ்வது என்பது சவாலான விஷயம்தான். அந்த சவாலை வெற்றிகரமாக பல இளம் தம்பதியினரும் சமாளித்து வருகின்றனர் என்பது ஆறுதலான விஷயம்!
கிரெச் என்றால் ஜாலி
சாஃப்ட்வேர் பணியில் இருக்கும் மனைவியாகட்டும், கணவனாகட்டும்... வீட்டில் இருப்பதே அரிது; அப்படியே இருந்தாலும், சாப்பிடக்கூட நேரம் இல்லை. வேலை முடிந்து வந்ததும், அப்படியே படுக்கையில்தான் விழ வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு பாசம், நேசம், சந்தோஷம் என உறவுகள் தரும் எல்லா உணர்வுகளையும் இழந்து வருகின்றனர்.
இந்த 24 மணி நேர கிரெச்களால், அவர்களையும் அறியாமல் மேற்கத்திய பாணியில் குழந்தையை வளர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர். வார இறுதியில் ஒரு நாள் வீட்டுக்கு வந்தால்கூட, ‘‘டாடி... மம்மி... என்னை கிரெச்சுக்கு நாளைக்கு அனுப்பிடுவீங்கதானே’’ என்று கேட்கும் குழந்தைகள்தான் அதிகமாகி விட்டன. அந்த அளவுக்கு பாசத்தை அந்த பிஞ்சுகளும் இழந்து வருகின்றன. குழந்தைகள் மீதான பிணைப்பு இப்படி அறுபடுவதன் விளைவுகள் என்ன என்பதை இப்போதைக்கு யாராலும் சொல்லத் தெரியவில்லை!
யூத் தம்பதிகளின் பணக்கார வாழ்க்கையைப் பார்ப்பதை விட, அவர்களுக்கு இவ்வளவு பிரச்னைகளா என்று நினைத்தால் ஒரு பக்கம் வியப்பு, மறுபக்கம் வேதனை எழுகிறதுதானே!
1 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - 24 மணி நேரமும் கிரெஷா ??? - எந்த உலகத்தில் இருக்கிறோம் நாம் - நமக்கு இதெல்லாம் சரிப்பாடு வராது. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா