இல்லந்தோறும் நடக்கும் இனிய பூஜை!
வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம். அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!
என்று ஒளவையார் பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம். மறுநாள் புனர் பூஜை என்று சொல்லப்படும், சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து, பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ விட்டு விடுவது வழக்கம்.
நாமம் பல தத்துவம் ஒன்று!
வரசித்தி விநாயகர், இஷ்டசித்தி விநாயகர், விக்ன நிவாரண கணபதி, வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர் என்றெல்லாம் பல பெயர்கள் விளங்கினாலும் விநாயகரின் தத்துவம் ஒன்றே. ஈசன் மகனான கணபதியைத் துதித்த பின்பே எந்தச் செயலையும் தொடங்குகிறோம். கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டு, என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராகினார் அந்த கணேசன்.
இவ்விழா கொண்டாடப் படுவதற்குப் பின்னணியாக ஸ்காந்த புராணத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது.
விநாயக சதுர்த்தி வரலாறு!
பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார். அவருக்கு அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.
1 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - தொடாத துறையே இல்லையோ - ஆன்மீகத்திலும் இறங்கியாச்சா - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா