இத்தனை வசதிகள் இருந்தும் அவருக்கு ஊரில் கெட்டப் பெயரே இருந்தது. காரணம் அவரது கஞ்சத்தனம்தான். தன்னிடம் உழைப்பவர்களுக்குக் கூட நியாயமாக தர வேண்டிய கூலியைக் கூட இழுத்தடிப்பார். அப்படியே தரும் போதும் முக சுளிப்போடும், ஒருவித எரிச்சலை வெளிப்படுத்தியே கொடுப்பார். இதனால் அவரிடம் கூலி வேலைக்கு செல்ல ஊர் மக்கள் அஞ்சுவார்கள்.
அப்படிப்பட்ட ஒருவரிடம் ஒருநாள் பிச்சைக்காரன் ஒருவன் வீடு தேடி வந்து அன்னம் கேட்டான். முகத்தில் நீண்ட தாடியும், தலையில் கொண்டையுமாய் காணப்பட்டான். நெற்றி நிறைய விபூதிப் பட்டையும் தீட்டியிருந்தான். பார்ப்பதற்கு ஆண்டியைப் போல இருந்தாலும் சிறந்த பக்திமானைப் போல இருந்தான். ""ஐயா... சாமி, பசி வயித்தக் கிள்ளுது. ஏதாச்சும் சாதம் இருந்தா போடுங்க சாமி'' என்றான். கையில் திருவோடு இருந்தது. அப்போதுதான் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த ராஜாமணி ஆண்டியைக் கண்டதும் கோபமானார். ""காலங்கார்த்தாலே உன் மூஞ்சியிலே முழிச்சா வெளங்குனாப்பல இருக்கும். போய்யா...'' என்று விரட்டினார்.
""சாமி... சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு. ஏதாவது பழசு இருந்தாக் கூட பரவாயில்லை...'' என்றான். ""பழசுமில்ல... புதுசுமில்ல... மொதல்ல எடத்தை காலிபண்ணு. வந்துட்டானுங்க... இவனுகளுக்கு பிச்சைப் போட்டே ஓய்ஞ்சு போகணும் போல...'' என்றவர் வீட்டுக்குள் மறுபடி நுழைந்து கதவை சாத்தினார். ஆண்டிக்கு அவரது செயல் மனதைக் காயப்படுத்தியது. பசியின் கொடுமை அறியாதவன். அதனால்தான் இப்படி கர்ணக் கொடூரமாக நடந்து கொள்கிறான். ""இல்லை என்று சொல்பவன் இல்லாதவனாகவே ஆவான். ஒரு நாள் பசி என்றால் என்னவென்று உணர்வாய்...'' என்று சொல்லிவிட்டு, அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
ஆண்டி சொன்னது ராஜாமணியின் காதிலும் விழுந்தது. இந்தப் பிச்சைக்காரனின் சாபம் என்னை என்ன செய்யும்? கை நிறைய பணம். வீட்டில் தேவையான அளவுக்கு அரிசி மற்றவகை தானியங்கள். எனக்கு எதற்கு பசியின் கொடுமை வரப் போகிறது என நினைத்துக் கொண்டார். ஆறுமாதம் ஓடி விட்டது. ஒரு நாள் ராஜாமணி தனது வெளியூர் பயணத்தை முடித்துக் கொண்டு சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். வரும் வழியில் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. கடந்த ஒருவாரமாக அவர் வெளியூர் சென்ற போது பெய்த மழையில் ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது.
அவருக்கு ஆற்றின் ஆழம் தெரியும். மெதுவாக சைக்கிளை தள்ளிக் கொண்டே ஆற்றைக் கடந்து விடலாம் என மனதுக்குள் நினைத்துக் கொண்டார். சைக்கிளை உருட்டிக் கொண்டே ஆற்றில் இறங்கிவிட்டார். பாதிதூரம் கடந்து விட்ட நிலையில் ஆற்றில் நீர்மட்டம் திடீரென உயர்ந்து வெள்ளம் அதிகமாகியது. எதிர்பாராத சூழலை சமாளிக்க முடியாத ராஜாமணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். ஆற்று நீரின் ஓட்டத்தில் சிக்கி தவித்து வெள்ளத்தோடு வெள்ளமாய் சென்று கொண்டிருந்த போது எதிரே உயரமாய் ஒரு பாறையைக் கண்டுவிட்டார். நீரின் போக்கிலே போய் பாறையைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறிவிட்டார். பின்னர் பாறை மீது அமர்ந்தார். உடை முழுவதும் ஈரமானதால் குளிரால் நடுங்கினார்.
""ஆண்டவனே... என்னைக் காப்பாற்று!'' என்று வேண்டினார். ஆற்று வெள்ளம் இடைவிடாமல் ஓடிக் கொண்டிருந்தது. மனமெங்கும் பயம். உடலில் குளிர் நடுக்கம். பொழுது வேறு இருட்டிக் கொண்டிருந்தது. அவ்வப்போது சிறு தூறலும் பெரும் மழையுமாக பெய்து மேலும் அவரை வாட்டியது. ஆற்று வெள்ளம் குறைவதாக தெரியவில்லை. பாறை மீது தனியாக உட்கார்ந்து கொண்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்தார்.
இருள் சூழ்ந்து விட்டது. பயம், பசி வேறு வாட்டியது. நேரம் ஆக ஆக உயிரை விட பசியின் கொடுமை தெரிய வந்தது. வாழ்க்கையில் ஒரு நாள் கூட பட்டினி கிடந்து பழக்கமில்லாதவர். முதன்முதலாக பசி என்றால் என்னவென்று உணர்ந்தார். அன்றொரு நாள் ஆண்டி கொடுத்த சாபம் அவரது நினைவுக்கு வந்தது. அவருக்கு தனது தவறு புரியலாயிற்று. ""இறைவா... என்னை இந்தச் சூழ்நிலையில் இருந்து காப்பாற்று. இனி யாரையும் நான் உதாசீனப்படுத்த மாட்டேன். பசி என்று வந்தவருக்கு அன்னமிட்டு உபசரிப்பேன். என்னைக் காப்பாற்று'' என்று மனமுருக வேண்டினார்.
விடியும் வரை ஓடிய வெள்ளம் பொழுது புலர்ந்த போது முழங்கால் அளவாக தண்ணீர் வடிந்திருந்தது. ராஜாமணி பாறையில் இருந்து இறங்கி நடக்கலானார். மழை வெள்ளத்தில் சைக்கிள் அடித்துச் செல்லப்பட்டிருந்தது. மெதுவாக நடந்து ஊர்ப் போய்ச் சேர்ந்தார். அதன் பிறகு அவரது செய்கைகள் எல்லாம் முற்றிலும் மாறியிருந்தன. அவரது மாற்றத்திற்கான காரணம் புரியாமலேயே ஊர் மக்கள் வியந்து போனார்கள்.
2 கருத்துரைகள்:
pasiyin arumai pasikum pothu than therium
அன்பின் பிரகாஷ் - சாபங்கலூம் பலிக்கிறதோ - பசியின் அருமை புரியும் நேரம் அனைவருக்கும் வரும் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா