அன்றாட வாழ்வில் செல்போன் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாகிவிட்டதைப்போல பெரும் இம்சையாகவும் மாறிவிட்டது. இப்போதெல்லாம் 5 ரூபாய்க்குக் கூட செல்போனில் ரீசார்ஜ் செய்யும் வசதி வந்துவிட்டது. ஆனால், பெருமைப்படக்கூடிய விஷயம் அல்ல அது. சட்டைப்பையில் 5 ரூபாயைக்கூட வைத்திருக்கவிடாமல் பறித்துக் கொள்ள செல்போன் நிறுவனங்கள் வகுத்துள்ள உத்தியாகத்தான் கருத வேண்டும்.
மக்களின் செல்போன் மோகத்தைப் பயன்படுத்தி செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் பெரும் கொள்ளையே அடிக்கின்றன. செல்போன் எண்களை வணிக நிறுவனங்களுக்குத் தந்து தேவையற்ற அழைப்புகளுக்கு வழிவகை செய்வது ஒருபுறம் என்றால், சேவை என்ற பெயரில் எதற்கெடுத்தாலும் காசு பறிப்பது மற்றொரு புறம். ரிங்டோனை தேர்வு செய்யக் கட்டணம், அதைப் பதிவிறக்கம் செய்யக் கட்டணம்.
"விருப்பமானவங்க கால் செய்யும்போது அவங்க விரும்பும் பாடலைக் கேட்கச் செய்யுங்க' என்று விளம்பரம் செய்து காலர் டியூனை செயலாக்கம் செய்யக் கட்டணம் என எதற்கெடுத்தாலும் கட்டணம்தான். பேலன்ஸில் உள்ள தொகையில் திடீர் திடீரென |30 குறையும். வாடிக்கையாளர் சேவைப் பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டால், "எஸ்.எம்.எஸ். பேக் உங்கள் எண்ணுக்கு தவறுதலாகத் தேர்வாகிவிட்டது. அடுத்த மாதம் இந்தச் சேவையை நீக்கிவிடுகிறோம்' என்பார்கள்.
கட்டணம் குறைந்துவிட்டது குறித்துக் கேட்டால் குறைந்தது குறைந்ததுதான் என வருத்தமேயின்றிச் சொல்வார்கள். பிடித்தமானவர்கள் போன் செய்யும்போது காலர் டியூனால் மகிழ்விக்கலாம் என்றால், "இந்த காலர் டியூனை காப்பி பண்ண எண் ஒன்றை அழுத்துங்கள்' என்ற விளம்பரத்தைத்தான் அடிக்கடி கேட்க வேண்டியிருக்கும். சில நிறுவனங்கள் தங்களுக்குச் செல்போன் கோபுரம் இல்லாத பகுதியில் இணைப்புக் கிடைக்காததை மறைத்து, "நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கின்றன.
50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 42.50 ரூபாய்க்குத்தான் பேசலாம். எப்பேர்ப்பட்ட பகல் கொள்ளை இது. முழுத் தொகையும் கணக்கில் ஏறும் வசதி குறித்து பல மாதங்களுக்கு முன்னரே தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஆலோசனை செய்தது. ஆனால், இன்னும் நடைமுறைக்கு வந்தபாடில்லை. செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் "மனசு வைத்தால்' மட்டும் அவ்வப்போது முழு "டாக் டைம்' வசதி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.
அது மட்டும் செல்போன் நிறுவனங்களுக்கு கட்டுபடி ஆகிறதா என்ன? "ஆட்-ஆன்' எண்களைத் தேர்வு செய்து குறைந்த கட்டணத்தில் பேசுங்கள் என்ற சலுகையை அனைத்து நிறுவனங்களுமே அளிக்கின்றன. ஆனால், அதற்கு மாதந்தோறும் தனி வாடகை.
50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து, குறைந்த அழைப்புக் கட்டணத்தில் பேச வேண்டுமானால் தனியாக ஒரு தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். பூஸ்டர் கார்டு, போனஸ் கார்டு என ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொருவிதமாக ஏமாற்றுகின்றன. இப்போது அனைத்து செல்போன் நிறுவனங்களும் இணையதள சேவையிலும் இறங்கியுள்ளன. அதிலும் செல்போன் பயன்படுத்துவோருக்கு சாதகமான அம்சங்கள் இல்லை.
இலவச "டவுண்லோட்', "அன்லிமிடெட் பிரவுசிங்' என்றெல்லாம் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்தாலும் "பேலன்ஸ்' தொகை மொத்த மொத்தமாக காலியாவதுதான் மிச்சம். காரணம் கேட்டால் உரிய பதில் கிடைக்காது. மாதந்தோறும் வாடிக்கையாளர் எண்ணிக்கையைப் பெருக்குவதிலேயே குறியாக இருக்கும் நிறுவனங்கள், அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில்லை.
இதனால், செல்போனில் பேசும்போது தெளிவாகக் கேட்காதது, பேசிக் கொண்டிருக்கும்போதே பாதியில் இணைப்புத் துண்டிக்கப்படுவது என பல சிரமங்கள். மொத்தத்தில் செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் அனைத்துமே சேவையைப் பொறுத்தவரை தொடர்பு எல்லைக்கு வெளியேதான் உள்ளன.
3 கருத்துரைகள்:
pramadam pramadam.. super .. pataya kilaupreenga pa.
Mr. ers, Mr. madurakarandoi தங்கள் வருகைக்கு நன்றி.
அன்பின் பிரகாஷ் - நான் ஏர்டெல் பிரீபெய்ட் - பிடுங்கித் திண்றானுங்க - எதுக்கு என்ன - ஒரு எழவும் தெரியாது - ப்ராடுடி நம்பர் ஒண்ணு - நல்லதொரு இடுகை - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா