அப்பப்பா மூச்சு முட்டுகிறது... தமிழ்நாட்டில் தமிழர்களின் வாழ்வை முன்னேற்றுவதற்காக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சானல்களின் பெயர்களை ஒரு முறை சொல்லிப்பார்க்கும் போதுதான் நமக்கு இந்தப் பிரச்னை. சன்,கே டிவி, ஆதித்யா, ஜெயா, ராஜ், கலைஞர், ஜீ, ஸ்டார் விஜய், பொதிகை, வசந்த், பாலிமர், மெகா, தமிழன், கேப்டன், மக்கள் தொலைக்காட்சி என இன்று சுமார் 35-க்கும் அதிகமான சானல்கள் தமிழில் ஒளிபரப்பு செய்கின்றன. இவற்றின் எண்ணிக்கை விரைவில் லிம்கா அல்லது கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு உயரும் என நம்பலாம்.
இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் இத்தனை சானல்கள் தமிழில் ஒளிபரப்பாகின்றன என்றால், அந்தப் பெருமையைச் சொல்லி சிலாகிக்காமல் இருக்க முடியாது. முன்பெல்லாம் இலங்கை ரூபவாஹிணியில் வாரம் ஒருமுறை ஒளிபரப்பாகும் தமிழ்ப் படங்களைக்கூட ஓய்வாக இருந்தால் மட்டுமே பார்ப்பதும், அதுவும் அடுத்த வீட்டுக்குச் சென்று பார்ப்பதற்கு சங்கடப்பட்டு தவிர்த்து விடுவதும் நம் பழக்கமாக இருந்தது.
பிறகு மைய அரசின் ஒளிபரப்பில் மண்டல ஒளிபரப்பாக தமிழ் நிகழ்ச்சிகள் இடம்பெற்ற பிறகு தொலைக்காட்சியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும், அதை அவசியப்படும்போது அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குச் சென்று பார்ப்பதும் அதிகமானது. அப்போதெல்லாம் மதிப்புமிக்க ஒரு கருவியாகப் பார்க்கப்பட்ட இந்தத் தொலைக்காட்சி, பிறகு பொழுதுபோக்கு அம்சமாக மாறி, இன்று கேளிக்கைப் பொருள்களில் ஒன்றாக மாறிப்போனது.
இது எப்படி நடந்தது? அரசியல் கட்சியோடு தொடர்புடையவர்களால் தொடங்கப்பட்ட தனியார் தொலைக்காட்சி சானல்கள் முதலில் பொதுவான அம்சங்களோடு, திரைப்படங்களை ஒளிபரப்பி வந்தன.தொடக்கத்தில் தங்களுக்குத் தேவையான நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்கத் தொடங்கிய மக்கள், பிறகு ஓய்வுநேரங்களை முழுக்கமுழுக்க தொலைக்காட்சியின் முன் கழிக்கத் தொடங்கினர்.
இதுதான் சானல்களைத் தொடங்கியவர்களின் எதிர்பார்ப்பும்கூட. பிறகு தொடங்கியதுதான் கருத்துத் திணிப்பு. இதில் அவர்கள் பெற்ற வெற்றியே, இன்று வரை தொடங்கப்படும் புதிய சானல்களின் அடித்தளம். இதன் விளைவாக வேறு பல சானல்கள் தமிழில் உருவாகவும், மொழிமாற்று சானல்கள் வரவும் அது வழிகோலியது. இதன் தொடர்கதைதான் பெரிய பிரச்னையாக மாறியிருக்கிறது. குறிப்பாக குழந்தைகளில் தொடங்கி, இளைஞர்களில் வளர்ந்து, முதியோரில் முடியும் வரை இன்று அனைவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். பெரும்பாலான குழந்தைகளுக்கு வெளி உலகமே தெரியாத நிலை. ஒற்றுமை, ஒருமைப்பாடு, கலாசாரம் என்ற பொதுபுத்திக்கான விஷயங்களே தெரியாதவர்களாக அவர்கள் வளர்ந்து வருகின்றனர்.
பொதிகை தொலைக்காட்சியைத் தவிர, குழந்தைகளுக்கான மற்ற சானல்கள் உள்ளிட்ட எவையும் மோசமான, விபரீதமான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்ப்பதில்லை. இந்தியாவில் பாலியல் கல்வி இன்னமும் அறிமுகப்படுத்தப்படாத நிலையில், அதுகுறித்த அடிப்படை அறிவுகூட குழந்தைகளுக்கும், வளர்இளம்பருவத்தினரிடையேயும் இல்லாத நிலையில், இந்தியாவில் பாலியல் உறவுகொள்ளும் திரைப்படங்கள் வெளிநாட்டு தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பப்படுகின்றன.
இந்தியாவில் இந்த ஒளிபரப்புக்கான அவசியம் என்ன? மக்கள் விரும்பிக் கேட்டுத்தான் அரசு அனுமதித்துள்ளதா? பொதுவாக அனைத்து வயதினரையும் அவர்களது வேலைகளை குறித்தநேரத்தில் செய்யவிடாமல், பொன்னான நேரத்தை கிரகித்துக்கொள்ளும் இந்த ஒளிபரப்புகள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கும் (இதிலும் விதிவிலக்கு உண்டு).
ஆனால், அறிவை வளர்த்துக்கொள்ள உதவும் டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராபி, பிபிசி போன்ற சானல்கள் கட்டண ஒளிபரப்புகளாகத் தொடர்கின்றன.இதுபோன்ற சானல்களை மைய அரசு குறைந்த கட்டணத்தில் பெற்று மக்களின் நன்மையைக் கருதி இலவசமாக ஒளிபரப்பினால் மாதக் கட்டணமாவது குறையும். குறிப்பாக, தமிழகத்தில் இன்று கல்வி நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு தொடங்கப்பட்டு வரும் நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில், அவர்களின் பாடங்களோடு தொடர்புடைய காட்சிகளோடும், இளைஞர்களுக்கு சர்வதேச அளவில் வேலைவாய்ப்பை வழங்கும் நிறுவனங்கள் குறித்தும்,
சுயவேலைவாய்ப்பு உள்ளிட்ட வாழ்க்கைக் கல்விக்கான ஒரு முழுநேரச் சானலை தொடங்க எவரும் முன்வரவில்லை. செல்வந்தர்களோ, அறக்கட்டளைகளோ, தொண்டு நிறுவனங்களோ, கல்வி நிறுவனங்களோ, ஏன் இலவசங்களுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வாரி இறைக்கும் மத்திய, மாநில அரசுகளோ இதுகுறித்து சிந்திக்காதது ஏன் என்ற காரணம் தெரியவில்லை. இந்தியாவின் அதீத வளர்ச்சியைப் பொறாமைக் கண்களோடு பார்த்துக் கொண்டிருக்கும் உலக நாடுகளுக்கு மத்தியில், பன்னாட்டு நிறுவனங்கள் நம்மை விழுங்கக் காத்திருக்கும் நிலையில், இந்திய இளைஞர்களுக்கு கிடைத்துவரும் வேலைவாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் வளர்ந்த நாடுகளுக்கு மத்தியில் இன்னும் பழங்கதைகள் பேசி, தொலைக்காட்சியில் தோன்றும் பொய்யான தோற்றங்களில் மயங்கி, அதன் கேளிக்கை நிகழ்ச்சிகளே கதியாகக் கிடந்தால், இந்தியர்களின் வாழ்வில், குறிப்பாக தமிழர்களின் வாழ்வில், "இன்னொரு இருண்ட காலம்' என்ற வரலாற்றை வருங்காலம் படிக்கும்.
நன்றி: தினமணி
1 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - ஆய்வுக் கட்டுரை நன்று - அறிவியல் முன்னேற்றம் - ஒன்றும் செய்ய இயலாது - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா