இந்த 21-ம் நூற்றாண்டில் நம் நாட்டில் மற்ற துறைகளைக் காட்டிலும் தகவல் தொடர்புத் துறையில் மிகப் பெரிய புரட்சி நடந்திருக்கிறது. குறிப்பாக, கைபேசி (செல்போன்) வருகையால் வணிகர்கள், அலுவலர்கள், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் பயனுள்ள தகவல் தொடர்பு சாதனமாக மாறி, தற்போது, அது அத்தியாவசியப் பொருளாகவும் நிலைபெற்றுவிட்டது.
கைபேசியால் பல்வேறு பயன்களை நாம் அனுபவித்து வந்தாலும், மறுபுறம் சில வேதனைகளையும் சந்திக்க நேரிடுகிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செய்யும் சில விரும்பத்தகாத செயல்களே இதற்குக் காரணம். இதில், தேவையற்ற அழைப்புகள் உபயோகிப்பாளர்களுக்கு பெரும் பிரச்னையாக உருவாகியுள்ளன. இந்தத் தேவையற்ற அழைப்புகளால் முக்கிய அலுவல்களில் இருக்கும் உபயோகிப்பாளர்களின் கவனம் திசை திரும்புவதுடன், பணியிடையே தொந்தரவும் அளிக்கிறது என்பதுதான் உண்மை.
கைபேசி என்பது முக்கியத் தகவல்களை மட்டும் பரிமாறிக் கொள்ளும் சாதனமாக இருக்க வேண்டுமே தவிர, அது உபயோகிப்பாளர்களுக்கு வேதனை தரும் வகையில் இருக்கக்கூடாது. புதிதாக கைபேசி வாங்கும் ஒருவர் தனக்குப் பிடித்தமான தனியார் தொலைபேசி நிறுவனத்தில் தொகுப்பி அட்டை (சிம்கார்டு) வாங்கி தனக்கான தொடர்பு எண்ணைப் பதிவு செய்கிறார் என்றால், அந்த எண்ணை யார், யாருக்கு அளிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் அந்த நபருக்கு மட்டுமே உரிமை உண்டு. ஆனால், தற்போது இதற்கு மாறாக குறிப்பிட்ட அந்தத் தனியார் தொலைபேசி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ள சில டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் கைபேசி வைத்திருப்பவர்களின் எண்களை வாங்கி தங்களது வருமானத்துக்காக தனிநபர் கடன், துணி, நகைக் கடைகளில் தள்ளுபடி போன்ற தேவையற்ற குறுந்தகவல்களை அனுப்பி வருகின்றன. இதனால் வரும் சில தகவல்கள் சிலருக்கு உபயோகமாக இருந்தாலும், பெரும்பாலானோரைப் பாதிக்கிறது என்பதே உண்மை.
இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது வரும் அழைப்புகளை எடுத்துப் பேசினால் நாங்கள் குறிப்பிட்ட வங்கியிலிருந்து பேசுகிறோம்;
வீடு கட்டக் கடன் தருகிறோம் என்றதும் நம்முடைய கவனம் திசை திரும்புகிறது. அச்சமயம், நாம் வாகனத்தை நிறுத்திவிட்டுப் பேசினால் விபத்தின்றி தப்பிக்கலாம். இந்த அவசர யுகத்தில் பெரும்பாலானவர்கள் கைபேசியில் பேசிக் கொண்டே செல்கின்றனர். இதனால், விபத்தில் சிக்க நேரிடுகிறது. இதுபோல, நின்று பேசுவதால், நேரம் விரயமாவதுடன், பல்வேறு பிரச்னைகளுக்கும் ஆளாகும் சூழல் உருவாகிறது. மேலும், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இதுபோன்ற தேவையற்ற அழைப்புகளில் உங்களுக்கு வீடு கட்டக் கடன் தருகிறோம்; தனிநபர் கடன் குறைந்த வட்டியில் தருகிறோம்; இது தொடர்பாக பேசுவதற்குச் சிறிது நேரம் ஒதுக்க முடியுமா? எனக் கூறுகின்றனர். இதனால், விவரம் தெரியாத பல பெண்கள் தேவையற்ற குழப்பத்துக்கு ஆளாகின்றனர். சில வீடுகளில் தேவையற்ற சர்ச்சைகள் உருவாவதற்கும் இந்த அழைப்புகள் காரணமாக அமைகின்றன.
அண்மையில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தனது சக அமைச்சர்களுடன் முக்கிய அலுவலில் ஈடுபட்டபோது, சிணுங்கிய கைபேசியை எடுத்துப் பேசியுள்ளார். அப்போது, அவரது முகம் இறுகிய முகமாக மாறியதாகத் தெரிகிறது. காரணம், அவருக்கு வந்த அழைப்பில் உங்களுக்கு வீடு கட்டக் கடன் தருகிறோம் என்ற அழைப்புதான். இதையடுத்து, மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா உடனடியாகத் தனது துறை அலுவலர்களைத் தொடர்பு கொண்டு, தேவையற்ற அழைப்புகளை இனி அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டிருக்கிறார். இதேபோல, உலகப் பணக்காரர்கள் தரவரிசையில் இருக்கும் அம்பானிக்கே வீடு கட்ட அழைப்பு விடுத்த சம்பவம் அண்மையில் நடந்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று தேவையற்ற அழைப்பைப் தவிர்ப்பது குறித்து குறிப்பிட்ட தனியார் தொலைபேசி நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்டால், உங்களுக்கு வரும் தேவையற்ற அழைப்பை ரத்து செய்ய குறிப்பிட்ட குறியீட்டை "டைப்' செய்து அவர்கள் குறிப்பிடும் எண்ணுக்குக் குறுந்தகவல் அனுப்பினால், தங்களுக்கு வரும் தேவையற்ற அழைப்புகள், குறுந்தகவல்கள் ரத்து செய்யப்படும் எனத் தனியார் நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால், டெலி மார்க்கெட்டிங் நிறுவனத்துக்கு நமது அனுமதியில்லாமல் கைபேசி தொடர்பு எண்ணைக் கொடுத்துள்ள தொலைபேசி நிறுவனங்கள் அதனை ரத்து செய்வதற்கு நமது கைபேசியிலிருந்தே குறுந்தகவல் அனுப்பக் கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது. அதற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும், தனியார் தொலைபேசி நிறுவனத்திடமிருந்து வரும் அழைப்புகளைத் தொடர்புகொண்டால், "நீங்கள் எங்களுடன் ஜாலியாக அரட்டை அடிக்க வேண்டுமா?' உடனே குறிப்பிட்ட எண்ணை அழுத்துமாறு கூறுகின்றனர். இதனை அழுத்தாமல் விட்டுவிட்டால் நாம் தப்பினோம், வயோதிகர்கள் அறியாமை காரணமாக கை தவறி ஏதோ ஒரு பட்டனை அழுத்துவதற்குப் பதிலாக அவர்கள் குறிப்பிட்ட எண்ணை அழுத்திவிட்டால் அவ்வளவுதான். நமது கைபேசிக்கான தொகை இருப்பு குறைந்துவிடும். இது தொலைபேசி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தரும் மற்றொரு வேதனை. எனவே, தனியார் தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்து கைபேசி உபயோகிப்பாளர்களின் எண்களைப் பெறும் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு உள்ள கட்டுப்பாடுகளை முறைப்படுத்த வேண்டும். இந்தப் பிரச்னையில் அரசு விதிகளைக் கடுமையாக அமல்படுத்தினால் மட்டுமே தேவையற்ற வேதனைகளிலிருந்து விடுபட முடியும்.
1 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது - விரைவினில் சரியாய் விடும். வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா