சென்ற நூற்றாண்டில் நம்மிடையே தோன்றி மறைந்த ஆன்மிகப் பெரியவர் ரமணர், போதைப் பழக்கம் பற்றி விளக்கும்போது, ""யோகாப்பியாசத்திற்காக போதை வஸ்துகளை உபயோகிப்பதில் சிறிது பலன் உண்டு. ஒரு குறிப்பிட்ட பொருள் உடல் முழுவதையும் உருக்கி,பாற்கடலில் மிதக்கும் உணர்வைக் கொடுக்கும். ஆனால் சில காலத்துக்குப் பிறகு, போதைப் பழக்கம் மிருகத்தனமாகவும், ஞானத்திற்குப் பெரிய தடையாகவும் ஆகிவிடும். தவிர போதை வெறியைத் தணிக்க எந்தக் குற்றத்தையும் செய்யத் தயங்க மாட்டார்கள். அதனால் அதன்மேல் ஆசை வைக்காமல் இருப்பதே நல்லது. எல்லா போதைப் பொருள்களுமே விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் நாம் உள்ளதுபோல் இருப்பதே மேலானது.
ஆன்ம விசாரத்தின் மூலம் ஸ்வரூபத்தை அடைய முயற்சிப்பது அது சற்று கடினமானதாக இருந்தாலும் அது ஒன்றுதான் பத்திரமான, ஆபத்தற்ற பாதை'' என்றார்.
அண்மையில் போதை மருந்து உட்கொண்டதாக தெலுங்கு திரையுலகில் சில நடிகர், நடிகைகள் கைது செய்யப்பட்டபோது, அதன் தாக்கம் தமிழ்த் திரையுலகு வரை எதிரொலித்தது. ஏன் சில ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட்டிலும் இந்த விவகாரம் நாற்றமெடுத்தது.
குங்பூ எனும் தற்காப்புக் கலையை, தனியொரு மனிதனாக ஆசியாவிலிருந்து அமெரிக்காவின் ஹாலிவுட் வரை எடுத்துச்சென்று, 32 வயதுக்குள்ளாகவே உலகப்புகழ் பெற்றவர் புரூஸ் லீ. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் தத்துவ பாடப்பிரிவு மாணவர், சிறந்த சிந்தனையாளர்.
அவருக்கு 33-வது வயதிலேயே ஏற்பட்ட மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, ஹாங்காக் அரசாங்கம் மரண விசாரணைக்கு உத்தரவிட்டு, 1973-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணை தொடங்கியது. விசாரணையில் அவருடைய மனைவி லிண்டா லீ சாட்சியம் அளித்தபோது, சில மாதங்களுக்கு முன்பு அபின் வகையைச் சேர்ந்த கான்னபிஸ் எனும் போதை வஸ்துவை சிறிதளவு புரூஸ்லீ உட்கொண்டதாகத் தெரிவித்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கையும், அவரது குடலில் சிறிதளவு கான்னபிஸ் படிமங்கள் இருந்ததை உறுதிப்படுத்தியது.
இதையடுத்து, போதைப் பழக்கத்தால் அவர் மரணமடைந்தாரா என்ற கோணத்தில் அமெரிக்க மற்றும் நியூசிலாந்து மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, உலகம் முழுவதிலும் உள்ள தற்காப்புக்கலை வீரர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
கடவுளின் கையால் ஒரு கோலும், கடவுளின் காலால் ஒரு கோலும் அடித்து, ஆர்ஜென்டீனாவுக்கு உலகக்கோப்பை பெற்றுத் தந்ததன் மூலம் கால்பந்தாட்ட ரசிகர்களால் இன்றளவும் கடவுள் என்று அழைக்கப்படும் வீரர் டீகோ மாரடோனா. அவரைக்கூட இந்தக் கொடிய பழக்கம் விட்டுவைக்கவில்லை.
நமது தேசப்பிதா காந்தியின் மூத்த புதல்வர் ஹரிலால் காந்தி போதைப் பழக்கத்துக்கு அடிமையானதால் தானே, அன்னை கஸ்தூரிபாய் மரணப்படுக்கையில் இருந்தபோதும் சரி, உலகத் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற தந்தை காந்தியின் இறுதிச்சடங்கிலும் சரி, ஒரு மகனுக்குரிய கடமையைக்கூட செய்யமுடியாமல் போனது? கடைசிவரை அவரால் அக்கொடிய பழக்கத்திலிருந்து மீளமுடியாமல் இறந்ததும் கசப்பான உண்மைதானே.
கடந்த சில ஆண்டுகளாகவே, சிறுவர்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும் மது மற்றும் போதைப் பழக்கத்துக்கு ஆளாவதாகச் செய்திகளைப் படிக்க நேரிடுகிறதே? கடந்த 7-ம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற மாநில விளையாட்டுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ். கில் பேசும்போது, ""ஊக்க மருந்தால் இதுவரை மல்யுத்த வீரர்கள் 5 பேர் உள்ளிட்ட 18 வீரர்களுக்கு காமன்வெல்த் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டார்.
கடந்த புதன்கிழமை, நீச்சல் வீராங்கனைகள் இருவர் உள்ளிட்ட 4 பேர் ஊக்க மருந்து பயன்படுத்தியது பி-சாம்பிள் சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு, தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு முன்பு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக அர்ஜுனா விருது பெற்றவரும், சிறந்த பளு தூக்கும் வீராங்கனையாகக் கருதப்படுபவருமான சானுவும் இந்தப் புகாரில் சிக்கியுள்ளார்.ஊழலால் ஏற்கெனவே நன்றாகப் பற்றி எரியும் "காமன்வெல்த்' தீயில், தடகள வீரர்கள் ஊக்க மருந்தையும் ஊற்ற வேண்டாம்.
ஆகவே, இந்தியத் தடகள வீரர்களே, ஊக்கமதைக் கைவிட்டாலும் பரவாயில்லை, ஊக்கமருந்து உட்கொண்டு காமன்வெல்த் விளையாட்டில் தோன்றலின் தோன்றாமை நன்று!
நன்றி: தினமணி
1 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - தினமணி - தகவல் பகிர்வினிற்கு நன்றி - சட்டங்கள் கடுமையாக வேண்டும் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா