ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, பிரான்சு ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இவற்றுக்கு வீட்டோ அதிகாரமும் உள்ளது. அதே சமயத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரம் அல்லாத உறுப்பு நாடுகளும் உள்ளன. இந்த நாடுகள், கண்டங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் கிடையாது. ஐ.நா.வின் நிறுவன உறுப்பு நாடான இந்தியா, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், 1991-ம் ஆண்டுக்கு முன்பு, 6 தடவை நிரந்தரம் அல்லாத உறுப்பினர் அந்தஸ்துடன் இடம்பெற்று இருந்தது. அதன்பிறகு, 19 ஆண்டுகளாக, இந்தியா இடம்பெற முடியவில்லை. இருப்பினும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விஸ்தரிக்க வேண்டும் என்றும், நிறைய நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றும் இந்தியா குரல் கொடுத்து வந்தது.
இந்நிலையில், ஐ.நா. பொதுச்சபை ஆண்டு கூட்டத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு நிரந்தரம் அல்லாத உறுப்பு நாடுகளின் தேர்வு நடைபெற்றது. அதில், ஆசிய நாடுகளுக்கான இடத்துக்கு இந்தியா மட்டுமே போட்டியிட்டது. களத்தில் இருந்த கஜகஸ்தான், சில நாட்களுக்கு முன்பு விலகிக் கொண்டது. இதையடுத்து, இந்தியா போட்டியின்றி அபரிமிதமான ஓட்டுகளுடன் வெற்றி பெற்றது. ஐ.நா. பொதுச்சபையின் 191 நாடுகளில் 187 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டன. ஒரு நாடு, ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த மாதம் 10 நாட்கள் நியூயார்க்கில் முகாமிட்டு இருந்தார். அப்போது அவர், ஐ.நா. பொதுச்சபையின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க வந்த 56 நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். அதன் விளைவாகவே, இந்தியாவுக்கு இந்த வெற்றி கிடைத்திருப்பதாக கருதப்படுகிறது. இதுபற்றி ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் ஹர்தீப்சிங் புரி கூறுகையில், "நாங்கள் கடுமையாக உழைத்தோம். ஒவ்வொரு ஓட்டையும் எங்களுக்கு ஆதரவாக திருப்பினோம்" என்றார். இந்த வெற்றியின் மூலம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பலமாக எழுப்ப வழி ஏற்படும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுபோல், ஆப்பிரிக்க நாடுகள் பிரிவில் தென் ஆப்பிரிக்காவும், லத்தீன் அமெரிக்க நாடுகள் பிரிவில் மெக்சிகோவும் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த நாடுகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிக்கும்.
2 கருத்துரைகள்:
எடம் புடிச்சு இன்னாத்த இனிமே சாதிக்கப் போறாங்க?அதான்,இலங்கையில இனப்படுகொல தான் நடந்திச்சு,போர்க் குத்தமெல்லாம் செஞ்சாங்கன்னு பல பேரு கொரல் குடுத்தும் ஐ. நா ல எடம் புடிக்க மின்னாடியே இல்லேல்ல அப்புடி எதுவும் நடக்கேல்லன்னு சொல்லி இலங்கைய காப்பாத்திட்டாங்க,இல்ல?இப்போ சீனா கூட மோதட்டும்னு சேத்துக்கிட்டிருக்காங்க!இது புரியாம நீங்க என்னமோ எடம் புடிச்சிட்டாங்க,துண்டு போட்டுட்டாங்கன்னு??????????????????????????????
"ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் கிடைத்து விட்டது" - Waau GREAT!
இனி காஷ்மீர், மாவோயிஸ்ட், நக்ஸ்சலைட் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விடும். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் ஒழிந்து விடும். எல்லா நதிகளும் இணைக்கப்பட்டு தேசிய மயமாக்க படும். இந்திய, அன்றாடம் காய்ச்சி மக்கள் அனைவரும் வறுமையிலிருந்து விடுப்பட்டு விடுவார்கள். எல்லோருக்கும் வேலை; குடிசை வீட்டிலும் கார் மற்றும் மோட்டார் பைக். அரசியல் வாதிகள் திருந்தி நல்லவர்களாக மாறிப்போய் நன்மைகள் செய்ய தொடங்கி விடுவார்கள். தங்கத்தின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு கிடு, கிடு வென குறைந்து - குப்தர்களின் பொற்காலத்துக்கே- நம்மை அழைத்து சென்று விடும்.
ஆமாம்! "ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் கிடைத்து விட்டது" - Waau GREAT!