நேற்று அதிகாலை கன்னியாகுமரியை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் மினி வேன் வேளாங்கண்ணி சென்று விட்டு மதுரை ஒத்தக்கடை நான்கு வழி சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த வோல்வோ பஸ் மோதி விபத்தில் சிக்கியது. இதில் பயணித்தவர்களில் ஆறு பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். விபத்திற்குள்ளான வேன் அப்பளமாக நொறுங்கி இருந்தது. மோதிய வோல்வோ பஸ் அருகிலுள்ள பள்ளத்தில் பாதி கவிழ்ந்த நிலையில் தொங்கிக் கொண்டு இருந்தது.
இந்த கோர விபத்தை பத்தி நான் ஏன் சொல்றேன்னு நெனக்கிறிங்களா?
நேத்து நான் இரண்டாவது ஷிப்ட் வேலைக்கு போக லேட்டாயிருச்சு. எப்பவும் கம்பெனி வேன்ல தான் போவேன். லேட் ஆனதால என் டூவீலர எடுத்துட்டு போனேன். வீட்டுல இருந்து இருபது நிமிச தூரம் கம்பெனிக்கு. கம்பெனி வண்டிய விட்டுட்டா மட்டுமே டூவீலர்ல போவேன். நேத்து போறப்ப இந்த விபத்தை பார்த்தேன். பஸ் மட்டும் பள்ளத்தில் கவிழ்ந்து இருந்தது. அதிக வேகமாக வந்ததில் கட்டுப்பாட்டை இழந்து அந்த பஸ் விபத்தில் சிக்கியிருக்கும் என நினைத்தேன். கம்பெனியில் சக ஊழியரிடம் இந்த விபத்தை பத்தி விசாரித்த போது தான் நடந்த கோர விபத்தை சொன்னார்.
நான்கு வழி சாலை போட்டதுல இருந்து பெரும்பாலும் டூவீலர்ல போறத அவாய்ட் பண்ணிருவேன். ஆமாங்க, ரோட்டின் வளைவுகளை குறைசிட்டாங்க, பக்க பிரியும் ரோடுகளுக்கு சரியான அறிவிப்பு பலகை இல்லை. அதை விட மிக முக்கியமான விஷயம் சாலை விதிமுறை மீறல் ரொம்ப அதிகம். மேற்கண்ட விபத்தும் விதிமுறை மீறல் மற்றும், டிரைவரின் அஜாக்ரதையும் தான் காரணம். விபத்து நடந்த இடம் நான்கு வழி சாலையிருந்து ஒத்தக்கடை என்ற ஊருக்கு பிரியும் பிரிவு. அந்த பிரிவில் உள்ள சாலையின் வளைவு சற்று சிக்கலாக இருக்கும். குறைந்த அளவில் வளையும் வளைவாக இருக்கும். அந்த வளைவில் திரும்பி செல்ல அந்த வேன் முயற்சித்த சமயம் வேகமாக வந்த பஸ் மோதியது.மேலும் அந்த வளைவில் வெளிச்சம் தேவை என்பதற்காக அந்த இடத்தில் உயர விளக்கு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுநாள் வரை அந்த விளக்கு எரிந்ததை நான் பார்த்தது இல்லை. (ஆனால் அருகிலுள்ள டோல் கேட்டில் வசூலுக்கு குறைவில்லை). இந்த விபத்திற்கு இந்த விளக்கு எரியாமல் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த விளக்கு கோபுரம் வைத்த நாள் முதல் இன்று வரை அந்த இடத்தில நொறுங்கிய கண்ணாடி துகள்கள் இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த அளவுக்கு மோசமான வளைவு அது.
நான்கு வழி சாலை அமைக்க ரோடின் இரு பக்கமும் மண் அடித்து உயர்த்தியதால் இரு பக்கமும் பெரிய பெரிய பள்ளம் இருக்கும். அந்த மோதிய பஸ் கூட இந்த மாதிரியான பள்ளத்தில் தான் பாதி கவிழ்ந்த நிலையில் தொங்கிக் கொண்டு இருந்தது.
அந்த ரோட்டில் நேற்று மட்டும் நான் பார்த்த விதிமுறை மீறல்களை உங்களுக்கு சொல்கிறேன்.
அந்த விபத்து நடந்த இடத்தை தாண்டி ஒரு பெட்ரோல் பல்க் இருக்கிறது. அந்த பல்க்கில் டீசல் நிரப்புவதற்காக ஒரு குட்டி யானை (அதாங்க TATA ACE) வண்டி வலப்பக்கமாக மாறி வந்து கொண்டிருந்தது. அந்த மதிய வேளையில ஹெட் லைட் போட்டு வந்தான். அப்படின்னா என்ன அர்த்தம் தெரியுமா? அவன் விதிமுறை மீறி வலப்பக்கமா வர்றானாம். நாம கவனமா போகணுமாம். (என்ன கொடுமை சார் இது?)
இரவு பதினோரு மணிக்கு ஷிப்ட் வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பினேன். இரவு நேர பயணம் என்பதால் வண்டியின் வேகத்தை குறைத்திருந்தேன். சிட்டம்பட்டி டோல் கேட்டில் அந்த இரவு வேளையிலும் வண்டிகளின் கூட்டம் குறையாமல் இருந்தது. அந்த இடத்தில அகலமான ரோடு போட்டிருப்பதால் நெடுந்தூரம் பயணித்த லாரிகளை ஓரமாக பார்க்கிங் செய்திருப்பார்கள். இது நல்ல விஷயம் தானே என நினைக்கிறீர்களா? ஓரமாக வரிசையாக நிறுத்தி இருந்தால் இது நல்ல விஷயம் தான். ஆனால் ரோட்டின் பாதி வரை குண்டக்க மண்டக்க நிறுத்தியிருந்தார்கள். சில லாரிகளில் சிவப்பு விளக்குகள் எரியவில்லை. ரோட்டின் நடுவில் உயர விளக்குகள் அமைத்திருந்ததால் லாரிகள் நிறுத்தியிருந்தது எனக்கு தெரிந்தது. அப்ப என் டூவீலரில் லைட் இல்லையான்னு கேட்கறது புரியுது. ஸ்பிலென்டரில் ஹெட் லைட் அவ்வளவு பிரைட்டா இருக்காது. எனக்கு தெரிந்து நிறைய நண்பர்கள் ஹெட் லைட் பெயிலியர் என்கிறார்கள்.
சரி சரி விசயத்துக்கு வருவோம். அந்த டோல் கேட் அடுத்து ஒரு பாலம் வரும். அந்த பாலம் ஆரம்பிக்கற இடமும், முடியற இடமும் வளைவாக இருட்டாக இருக்கும். அந்த பாலத்தில் ஏறிக் கொண்டிருந்த போது இடது பக்கமாக ஒரு லாரி நின்று கொண்டிருந்தது தெரிந்தது. பின்னால் வந்த ஒரு காரின் வெளிச்சத்தால் அந்த லாரியை கவனித்தேன். இல்லையென்றால் அந்த லாரியில் மோதியிருப்பேன். அந்த லாரியில் சிவப்பு விளக்கும் இல்லை. அது தவிர பார்க் பண்ணியிருந்த இடமும் தவறான இடம். ஆமாங்க டூவீலர் செல்ல இடது பக்கமா ஒரு நாலடி ஒதுக்கிருப்பாங்க. அந்த இடத்தில் தான் அவன் நிறுத்தி இருந்தான். இப்படி விதிமுறை மீறல்கள் அதிகம்.
அப்புறம் அந்த பேருந்து விபத்தான வளைவுக்கு வந்தேன். நல்ல வேளை அருகே ஒரு கார் வந்ததால் எனக்கு நல்ல வெளிச்சம் கிடைத்தது. கவிழ்ந்திருந்த அந்த பஸ்ஸை பார்த்தேன். பஸ்சின் பின்புறம் இரு பக்கமும் சிவப்பு விளக்கு விட்டு விட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்த விளக்கை எரிய வைத்த அந்த நல்ல உள்ளம் வாழ்க.
நண்பர்களே, சாலையில் செல்லும் போது முடிந்தவரை விதிமுறை மீறல்கள் வேண்டாம். தேவையான சிக்னல்கள் கொடுத்து நல்ல ஓட்டுனராக இருங்கள்.
அப்புறம் இன்னொரு விசயமும் என் சிந்தனைக்கு வரும். மதுரையில இருந்து கம்பெனி வரையுள்ள தூரமும் நிறைய விபத்துக்களை பார்த்திருக்கேன். உயிரிழப்புகளையும் பார்த்திருக்கேன். விபத்துக்கள் நடந்த இடங்களில் நான் போகும் போது என் மனம் என்னனமோ நினைக்கும். சிட்டம்பட்டி அருகே இரு கல்லூரி மாணவர்கள் வாங்கி ஒரு வாரமே ஆனா புதிய டூவீலரில் ஒரு லாரியின் பின்புறமாக மோதி உயிழந்த விபத்து. நேற்று நடந்த விபத்திற்கு அருகிலேயே கடந்த சில மாதங்களுக்கு முன் சாலை ஓரமாக வாக்கிங் வந்த இரு பெண்கள் மீது ஒரு மினி லாரி மோதி அவர்கள் உயிரிழந்த விபத்து. அதே இடத்தில் ஒரு கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்து. இன்னும் சில சிறிய விபத்துக்கள் என் கண் முன்னே வரும்.
இந்த மாதிரியான விபத்துக்கள் நடக்காமல் என்று தான் குறையுமோ?
22 கருத்துரைகள்:
இந்த நிலை விரைவில் மாறனும் பிரகாஷ்! ( ரொம்ப சாட் நியூஸ் )
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
கண்டிப்பா அரசு விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விப்த்தே கொடூரம்.யாரோடு கவனக்குறைவோ, பாதிப்பு பொது மக்களுக்குக்த்தானே.கவனம் தேவை
எதிலும் எப்போதும் வேனும்.
Even sterday i happened to see a accident.. because of volvo bus at avadi where byepass is shortened by one way and two volvos had to go in one single route.. govt has to take at the earleist steps..
கொடுமையான விபத்து!
கவனத்திற்குரிய பதிவு.. மிக்க நன்றி பிரகாஷ்!
http://karadipommai.blogspot.com/
விபத்துக்கள் தொடர்கதை..நாம்தான் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்
ரொம்பவே கொடுமையான சம்பவம் ..((
நான்கு வழிச்சாலைகளில் தவறான பாதைகளில் எந்த விதக் கவலையுமின்றி வண்டியோட்டும் நாய்களைப் பார்க்கும் போது பற்றிக் கொண்டு வருகிறது. கேள்வி கேட்கவும் தண்டனை அளிக்கவும் ஆளில்லை!
கோரமான விபத்து...சாலை விதிகளை பின்பற்றி குறைந்த வேகத்தில் வண்டி ஒட்டினாலே பாதி விபத்துகளை தவிர்க்கலாம்...
கொடுமையான, தவிர்த்திருக்கக் கூடிய விபத்து.
நாம் கவனமாக இருந்தாலும், பிறரின் கவனக்குறைவாலும், விபத்தில் சிக்கி விட நேருகிறது. பல சமயம், சரியாக பயிற்சி எடுக்காத ஓட்டுனர்களால் நிறைய விபத்து நிகழ்கிறது.
விபத்துக்கு நீங்கள் குறிப்பிட்டததில் மிக முக்கிய காரணம் லாரிகள் சாலை ஓரங்களில் நிறுத்த படுவதுதான்.
சில வாகன ஓட்டுனர்களது அஜாக்கிருதையாலும் அத்துமீறல்களாலும்
சாலைகள் அமைக்கும் விதம்,கவனிப்பு இன்மை இதுபோன்ற தனிமனித
செயற்பாடுகளால் தினமும் பரிதாபமாகப் பலிகொள்ளப்படும் அப்பாவிப்
பொதுமக்களைக் காப்பாற்ற கடுமையான தகுந்த நடவடிக்கைகள் உடனுக்குடன் இவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டும்!.....பகிர்வுக்கு
நன்றி பணி தொடரட்டும்.............
விதிமீறல்களில் மாட்டு வண்டியில் மணல் அள்ளும் கும்பல்களும் அடக்கம். ஒரு ரிப்ளக்டரும் கிடையாது. சமீபத்தில் அதிகாலையில் (இரவில்தான் மணலை திருடமுடியும்) நான்கு மணிக்கு எதிரே கண்கள கூசும் விளக்குடன் வந்த ஆம்னி பஸ்ஸுக்கு டிம்-அடித்து விலகி ஹைபீம் விளக்கை போட்டால் எதிரே மாட்டு வண்டி.மிதமான வேகத்தில் சென்றதால் தப்பித்தேன்.
மிகவும் கொடுமையாகவும், கேட்கவே வருத்தமாகவும் தான் உள்ளது. எல்லோருக்குமே எப்போதுமே அவசரப்பயணமாகவே உள்ளது. மிகவும் நிதானம் தேவை. மிகவும் கவனம் தேவை. 11th hour அவசரம் வைத்துக்கொள்ளாமல் சற்று முன்னதாகவே திட்டமிட்டுக் கிளம்பினால் டென்ஷன் இல்லாமல் அமைதியாக மெதுவாக நிதானமாக ஓரளவு பாதுகாப்பாகச் செல்லமுடியும்.
விபத்துக்கள் அதுவாக நடப்பதில்லை.
கவனக்குறைவும், அவசரமும், பாதுகாப்பு இல்லாத சூழலும், விதிமுறைகள் மீறலும், அலட்சியமுமே பெரும்பாலான விபத்துக்களில் காரணமாக இருக்கும்.
தாங்கள் எப்போதும் ஜாக்கிரதையாகவே இருக்கவும்.
உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி
சமூக பொறுப்புள்ள பதிவு.. விபத்தின் கொடுரம் உணர்ந்தும் தெரிந்தே தவறு செய்பவர்களை திருத்த முடியாது... பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
உங்க சமூக அக்கறைக்கு ஒரு சல்யூட் மக்கா!
சகோ, வீதிப் பாதுகாப்பு பிரிவினர் போக்குவரத்து விதி முறைகளைப் பற்றி, பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மீறுவோர் தொடர்பில்
தண்டப் பணமும் அறவிடுவது தான் விபத்துக்களைக் குறைக்க ஓர் வழி சகோ.
சாலைப் பாதுகாப்பை கடைப்பிடிக்கத் தவறும் நமது அறிவற்ற மக்களையும், அதனை நடைமுறைப்படுத்தத் தவறும் மோசமான சோம்பேறிக் காவல்துறையினரும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். உங்களின் பதிவினை நான் பாராட்டுகின்றேன். சமூகப் பத்திரிக்கையாளராக வலைப்பதிவுகள் மாறவேண்டும் என்ற எனது பேரவா இது போன்ற பதிவுகளில் பார்க்கும் போது அது நிறைவைத் தருகின்றது. விபத்தில் பலியானோருக்கு எனது இரங்கல்கள்.
என்ன கொடுமையப்பா .
உள்ளம் பதைபதைக்கிறது